ascension of christ, faith, religion-8026744.jpg

Christ- Lord of All

திருத்தூதர்பணிகள் 1:1-11

•            இயேசு உயிர்த்தெழுந்து சீடர்கள் மத்தியில் நாற்பது நாட்கள் சஞ்சரித்தப்பின்னர், விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிகழ்வு திருமறையில் ஏற்கனவே இருவர் அனுபவித்ததாக நாம் காணலாம். குறிப்பாக ஏனோக்கு, எலியா போன்றவர்கள் இத்தகைய அனுபவத்திற்கூடாக கடந்து போனதையும் இதனை ஏனையவர்கள் கண்டதையும் நாம் காண்கிறோம். இதேவகையில் இயேசுவின் தாயாகிய மரியாளும் விண்ணேற்றம் அடைந்ததாக வரலாறு கூறிநிற்கின்றது.

•            திருத்தூதுவர்பணிகள் நூல், லூக்கா என்பவரால் எழுதப்பட்டது என நம்பப்படுகின்றது. கி.பி.85ம் ஆண்டளவில் இவைகள் எழுதப்பட்டிருக்கலாம். ஏனெனில், இரு நூல்களும் உரோம குடிமகனாகிய தெயோபிலுவுக்கு முகவுரை இடப்பட்டுள்ளது. மேலும், லூக்கா நற்செய்தி 24:50-53ம் வசனம் வரையுள்ள பகுதியில், விண்ணேற்றம் நிகழ்வு பெத்தானியா என்னும் ஊரிலிருந்து இடம்பெற்றதாக நாம் காணலாம். மேலும், மத்தேயு 28:1-20 வரையுள்ள பகுதியில் இவ் விண்ணேற்றத்துடன் இயேசுவின் தெய்வீகத் தன்மையும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இயேசுவின் சீடர்கள் அவரை வணங்கியதாக நாம் காணலாம். மோகன் ரோய், ராஜாராம் போன்றவர்கள் இவ்வணக்கம் ஓர் தெய்வீக வணக்கமாக நாம் கருதிவிட முடியாது. மாறாக, குரு சீஷ மரபு வணக்கமாகவே இதனைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். எதுவாக இருப்பினும் இங்கு விண்ணேற்ற நிகழ்வோடு ஓர் வாக்குத்தத்தம் அளிக்கப்படுகின்றது. “உலகின் இறுதிவரை நான் உங்களோடு இருப்பேன்” என்ற உரை சீடர்களுக்கு அளிக்கும் உற்சாகத்தை கொடுக்கின்றதை நாம் காணலாம்.

•            திருத்தூதுவர்பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பு நிகழ்வை சீடர்கள் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். இங்கு இவர்களை கலிலேயர்கள் என அடையாளமிடப்படுகின்றார்கள். கலிலேயர்கள் என்பது இங்கே இயேசுவின் பிரதானமான பணித்தளமாகும். பணியின் ஆரம்பத்திலும், உயிர்ப்பிலும், விண்ணேற்பிலும் கலிலேயாவும் கலிலேயர்களும் இணைக்கப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களைப் பார்த்து தேவதூதன், “கலிலேயர்களே நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? இயேசு எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ அவ்வாறே அவர் மறுபடியும் வருவார்.” என்ற வாக்கு இயேசுவினுடைய வருகையை உறுதிப்படுத்தியது. அத்துடன், இவ்வருகைக்காக நாங்கள் பணியாற்ற அழைக்கப்படுகிறோம் என்ற செய்தியும் பகிரப்படுகின்றது. இதுவோர் பொறுப்பு வாய்ந்த செய்தியாகும். இயேசுவின் வருகை எமது வாழ்வோடும் வழிபாட்டோடும் பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுகின்றது.

•            இயேசுவின் விண்ணேற்பு நிகழ்வு எமது பற்றுறுதியின் ஓர் பகுதியாக மாற்றமடைந்துள்ளது. இதன்படி, இயேசுவின் விண்ணேற்றத்தை நாம் பற்றுறுதியில் அறிக்கையிடுகின்றோம். திருத்தூதுவர்பணிகள் 7:58-60 வரையுள்ள பகுதியில், விண்ணேற்றம் அடைந்த இயேசு ஸ்தேவானின் மரணத்தை அடுத்து அவரை வரவேற்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். பிதாவுடன் நமக்காகப் பரிந்து பேசுவது மாத்திரமன்றி அநீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்களுக்கு நீதி வழங்க விண்ணேற்றம் அடைந்த இயேசு செயற்படுகின்றார். பிதாவின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்து இத்தகைய பணிகளை அவர் நிறைவேற்றுகிறார் என திருமறை கூறுகின்றது.

ஆக்கம் : அற்புதம்