வசந்தகாலப் பூக்கள் 13

பதிமூன்றாவது தியானம்

எமது வாழ்வில் உபவாசத்தை தனிமனிதர்கள் மாத்திரமல்ல சமூகங்களும் கடைப்பிடிப்பதை நாம் காணலாம். இவ்வான்மீகப் பயிற்சியில் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பிற சமயத்தவரும் இதில் ஈடுபடுகின்றனர். மேலும், ஒரு சிலர் தமது கொள்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். குறிப்பாக, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தமது உறவுகளைத் தேடி உண்ணாவிரதம் இருக்கின்றனர். அத்துடன், இந்திய இலங்கை மீனவர்களும் தற்காலங்களில் உண்ணா நோன்பிருக்கின்றனர். 
அசீரியாவின் தலைநகரமாகிய நினிவே நாட்டு மக்களின் அறவாழ்வு அர்த்தமற்றதாகக் காணப்பட்டது. அந்நிலையிலேயே இறைவாக்கினர் யோனா இம்மக்களை மனந்திரும்புமாறு அழைக்கின்றார். இவ் அழைப்பிதனைக் கேட்டவுடன் நினிவே மக்கள் உபவாசித்து மனந்திரும்பினர் (யோனா 3:5). இதனால், கடவுள் அவர்கள் மீது இறங்கி மன்னிப்பை வழங்கினார். எனவே, எமது உபவாசம் எம்மை மனந்திரும்புதலுக்காக உந்தித் தள்ள வேண்டும். வெறுமனே, வயிற்றுக்கு கட்டுப்பாட்டை விதிப்பது அல்ல மாறாக, ஏனைய அவயவங்கள் தவறிழைப்பதிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். 
மாற்கு 1:14-15ல் ஆண்டவர் இயேசு, மனந்திரும்புங்கள் கடவுளின் அரசு சமீபித்துள்ளது எனப் போதித்தார். மேலும், நாம் மனந்திரும்பும்போது மிகுந்த சந்தோஷம் உண்டாகின்றது (லூக்கா 15:1-10). எனவே, இந்நாட்களில் நாம் வெறுமனே உபவாசம் இருக்காமல் மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்க வேண்டும்.

செபம்: இறைவா, எனது உபவாசம் மனந்திரும்புதலுக்குள் என்னை அழைத்துச் செல்லவும் அதன் கனிகளை பிறருக்கு கொடுக்கவும் அருள் புரிவாயாக. ஆமென்.