திருச்சபை சீர்த்திருத்தபட்டதும், சீர்த்திருத்துவதும்

இறைவேண்டல் செய்வோம்:

வரலாற்றில் தவறுகள் நடைபெறும் வேளையில் குறுக்கிட்டு மாற்றம் செய்யும் கடவளே ! இறைமக்கள் சமூகமாக எம்மை உருவாக்கி அன்பு, நீதி, சமாதானம் போன்ற இறையாளுகையின் பண்புகளோடு வாழவும், அதை அனைத்துலகிற்கும் நற்செய்தியாக பறைசாற்றவும் கட்டளையிட்டீர். நாங்கள் இவ்விழுமியங்களிலிருந்து விலகிச் செல்லும் வேளையில் எம்மை சீர்திருத்தும். அவ்வப்போது திருச்சபை நல்மாற்றம் பெற்று உம் திருவிருப்பத்தை இவ்வுலகில் செயற்படுத்த ஆற்றல் தாரும். இப்பொழுதும் நாங்கள் உமது வார்த்தைகளை தியானிக்கும் போது எம்முடன் இடைப்படும், அடியேனை மறைத்த எங்களனைவருக்கும் உம்மை வெளிப்படுத்தும் இவையனைத்தையும் சமூக சீர்திருத்தவாதியான கிறிஸ்து இயேசுவின் மூலம் வேண்டுகிறோம். ஆமென்.

தொடக்கக் கால திருச்சபையின் வாழ்க்கை முறை

திருத்தூதுவர் பணிகள்  2:42-47

அறிமுகம்:

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்கள்  ஏறக்குறைய 3000 பேர் மனமாற்றம் அடைந்து திருமுழுக்கின் வழியாக  தொடக்கக் கால திருச்சபையில் சேர்க்கப்பட்டார்கள். இந்த அனுபவத்திற்கு பிறகு உருவான இறைமக்களைவையின் வாழ்க்கைமுறைக் குறித்து  திருத்தூதுவர் பணிகள் 2:42-47யில் தூய லூக்கா பதிவு செய்கிறார்.

வசனம் 42 அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.

ஆரம்பகால மனம் மாறியவர்கள், அப்போஸ்தலர்களின் மூலம் சொல்லப்பட்ட கடவுளுடைய அதிகாரபூர்வமான போதனைக்குக் கீழ்படிந்து தங்களை மனப்பூர்வமாக திருச்சபையின் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த ‘அப்போஸ்தல’ போதனை புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டது, எனவே இன்று நாமும் புதிய ஏற்பாட்டின் வழியாக அப்போஸ்தலிக்க விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்து திருச்சபையாக வாழ்ந்து வருகிறோம். 

தொடக்கக் கால திருச்சபையின் வாழ்க்கை முறை பல நிலைகளில் சான்று பகரக்கூடியதாக அமைந்திருந்தன.

1. முதலில், அவர்கள் ஒன்றாக கூட்டுறவில் கொண்டனர்; அவர்கள் நண்பர்களின் சமூகமாக இருந்தனர்.

2. இரண்டாவதாக, அவர்கள் ‘அப்பம் பகிர்தலில்’ பங்குகொண்டனர். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து இதைச் செய்தனர், திருச்சபையில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு கூட்டுறவு உணவாக இது அமையப்பெற்றது. இங்கு ‘பகிர்தல்’ என்பது நமக்காக உடைக்கப்பட்ட இயேசுவின் உடலைக் குறிக்கிறது.

3. மூன்றாவதாக, ‘இறைவேண்டலில்’ தங்களை அர்ப்பணித்தார்கள். ஆரம்பகால திருச்சபை உறுப்பினர்கள் ஜெபாலயம், யூத வழிபாட்டுத்தலங்களில் நடைபெறும் பொது வழிபாட்டில் கலந்து கொண்டனர் அத்துடன் அவர்களின் வீடுகளிலும் இறைவேண்டல் செய்து உறுதியாய் நிலைத்திருந்தார்கள் வசனம் 43 திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன.

இங்கு பேதுரு யோவேலின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுகிறார், பூமியில் அடையாளங்களால் அறிவிக்கப்பட்ட கடவுளின் ஆளுகையின் விடியலைப் பற்றி பேசிகிறார் . இயேசு இத்தகைய அடையாளங்களைச் செய்தார், அதன் தொடர்ச்சியாக ஆதிகால கிறிஸ்தவ சமூகத்திலும் திருத்தூதுவர்களையும் எல்லாம் வல்ல கடவுள் அருஞ்செயல்களை செய்ய வைத்தார். எருசலேமில் வாழ்ந்த மக்களை பொறுத்தவரை, இந்த அடையாளங்களை  தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதலாகவும், வரவிருக்கும் இறையாளுகையின் முன்சுவையாகவும் பார்த்தனர். இந்த அற்புதமான நிகழ்வுகளைக் கண்ட சக யூதர்கள், பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

வசனங்கள் 44-45 நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.  நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.

பரிசுத்த ஆவியின் ஆற்றல் பெற்ற ஆரம்பகால விசுவாசிகள் ‘விசுவாசிகள் ஒன்றாக கூட்டுறவு சமூகமாக இருந்தார்கள் வாழ்ந்தார்கள்’ அந்;த  ஒற்றுமை, ஆரம்பகாலத்தில் கிறிஸ்துவின் வருகை உணர்வை மேம்படுத்தி வலுப்பெற செய்தது, அதனால் தனிப்பட்ட சொத்துக்களை விற்றனர். அவர்கள் ‘எல்லாவற்றையும் பொதுவாகக் கொண்டிருந்தனர்’, அவர்கள் தங்கள் உடைமைகளை அனைவருக்குமான உடைமையாக, சொத்தாகக் கருதினர். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பிறரின் தனிப்பட்ட தேவைக்கேற்ப பிரித்துக் கொண்டனர்.

ஆயினும்கூட, அவர்கள் தங்கள் வீடுகளையும் வணிகங்களையும் (எ.கா. மீன்பிடி படகுகள்) வைத்திருந்ததாகத் தெரிகிறது, அதனால் அவர்கள் பொதுவாக வைத்திருந்த மிகையான, உபரி சொத்துக்களை மட்டுமே விற்றிருக்கலாம். இந்த கூட்டுகுடும்ப வாழ்க்கை முறை காலப்போக்கில் மங்கிவிட்டது, எ.கா. 4:32-5:11.

46 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள்.

47 அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.

விசுவாசிகள் பொது வழிபாட்டிற்காக கோவிலில் தவறாமல் கூடினர், வெளிப்புற முற்றத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலமோனின் மண்டபத்தில் கூடினர். ‘ஒருலை உணவு’ கலாச்சரத்தை மையப்படுத்தும் ஒரு யூத வாழ்க்கை முறையான ஹபுராவாக செயல்பட்டனர், அவர்கள் ‘வீடுகளிலும்’ சந்தித்தனர். இவை அனைத்தும் ஆண்டவரை நினைவுகூறும் உணவாகவே இருந்தது.

இந்த முன்மாதிரியான ஆதிகால கிறிஸ்தவ சமூகம் மகிழ்ச்சியையும், தாராள மனப்பான்மையையும்,  நல்லெண்ணத்தையும் அனுபவித்தது. அவர்கள் கடவுளைப் புகழ்வதில் கவனம் செலுத்தினர், மேலும் அவர்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் வளர்ந்தனர். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களைக் கடவுள் ஏற்றுக்கொண்டார் என்ற அர்த்தத்தில் ‘கடவுள் அவர்களுடைய எண்ணிக்கையைச் பெருக செய்;தார்’ – அவர் காப்பாற்ற நினைத்த, மீட்டுக்கொள்ள நினைத்தவர்களை  மீதியானவர்களிடம் இருந்து திருச்சபையில் சேர்த்தார்.  கிறிஸ்தவ சமூகம் புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றது.

கிறிஸ்தவ சமூகத்தின் கோட்பாடுகள்

எனவே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட திருச்சபைக்கு ஒரு தொடக்ககால கிறிஸ்தவ சமூகம் முன் மாதிரியாக செயல்படுகிறது.

திருச்சபை, மனந்திரும்புதலிலும், ஆண்டவராகிய இயேசுவின் மீது நாம் வைத்த விசுவாசத்தின் அடித்தளத்தில் கட்டப்பட்டது. விசுவாசிகள் ‘அவருடைய (பேதுருவின்) செய்தியை ஏற்றுக்கொண்டனர்’,

•             நற்செய்தியை ஏற்றுக்கொண்டனர்.

•             ‘பாவ மன்னிப்பின் நிச்சயத்தை ‘அனுபவித்தார்கள்

•             ‘பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றார்கள்’.

அப்போஸ்தலர்களின் அதிகாரபூர்வமா போதனையின் மூலம் திருச்சபைக் கட்டமைக்கப்பட்டது. திருமறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சத்தியத்தை, உண்மையை வெளிப்படுத்துவது திருச்சபையின் ஊழியத்திற்கு அடிப்படையானது.

திருச்சபை கூட்டுறவை வலியுறுத்தியது. அன்பின் விருந்து என்பது ஒரு கூட்டுறவு உணவாகும், ஆண்டவர் கிறிஸ்து இயேசு நமக்காக பட்டப்பாடுகளை நினைவுபடுத்தியது.

திருச்சபை பிறர்பால்  அக்கறையுள்ள சமூகமாக இருந்தது. பெந்தெகொஸ்தே தினத்தைத் தொடர்ந்து திருச்சபையில் ‘ உடைமைகள் விற்று பிறருக்குக் கொடுக்கப்பட்ட பழக்கம்’ இதை உறுதிசெய்கிறது. திருச்சபை ஒரு மகிழ்ச்சியான சமூகமாக இருந்தது.

திருச்சபைக்குப் புதிதாக வரும் வெளிநபரை நட்புறவோடு, மகிழ்ச்சியாக வரவேற்கும் பண்புடையதாக காணப்பட்டது.

திருச்சபை ஒரு இறைவேண்டலின் சமூகமாக இருந்தது. அவர்கள் ஜெபவாழ்கையில் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தார்கள். அவர்கள் கடவுளுடைய சித்தத்தைத் தேடி, ஜெபத்தோடு அதை நம்பினார்கள்.

இறுதியாக அன்பான எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே  நீங்களும் நானும் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருக்கிறோமா?  அப்படி இருந்தோம் என்றால் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது.  நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியை நம்புகிறவர்களாக மாற வேண்டும்  பாவ மன்னிப்பின் நிச்சயத்தை சாவதற்கு முன் பெற்றுக்கொள்ள வேண்டும்  அப்போதுதான் நாம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறமுடியும்.  எமது வாழ்க்கையின் அடிப்படை திருமறையே. எமது திருச்சபை வாழ்வு, குடும்ப வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு கிறிஸ்துவில் வேரூன்றிய வாழ்வாக இருக்கவேண்டும்.

கடவுளின் திருச்சபையாகிய இவ்வுலகில் பிறர்பால் அக்கறைக்கொண்டு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுவோம்  இறைவேண்டலின் சமூகமாக நாம் மாறுவோம், கடவுளுடைய சித்தத்திற்கு எம்மை ஒப்படைத்து இறையாளுகையான பரலோகராஜ்யத்தை இம்மண்ணில் நிறுவுவோம்.