தற்கால கிறிஸ்தவம் ஜெபித்துவிட்டால் நம் ஆவிக்குரிய ஜீவியம் சரியாக செல்கிறது என்ற மாயைக்குள் சிக்கியிருக்கிறது. விவிலிய வாசிப்பும் வசன தியானிப்பும் குறைந்து தொலைக்காட்சி பிரசங்கங்களை கேட்டு, அந்த ஜெபங்களில் பங்குகொண்டாலே போதும் என்ற நிலையில் திருப்திப்பட்டுக்கொள்கிற போஷாக்கற்ற ஆவிக்குரிய ஜீவியமே தற்போது வலம்வருகிறது. நம் நோய்க்கு நாம் தான் மருந்துண்ணவேண்டும். நியாயத்தீர்ப்பில் கடவுளிடம் நம் சபையையோ, பாஸ்டரையோ குறைகூறி தப்பித்துக்கொள்ள இயலாது.

சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1:3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
ஆனால் இன்று ஜெபித்துவிட்டாலே நாம் செய்வதெல்லாம் வாய்த்துவிடும் என்ற பகல்கனவுகளே மேலோங்கியிருக்கின்றன.

நம் ஜெபங்கள், தொடர் வேதவாசிப்பு மற்றும் தியானம் அற்ற ஜெபங்களாக மாறி, பெயருக்கு வேதத்தை நுனிப்புல் மேய்ந்துவிட்டு வெறும் பாடல்களைப் பாடி ஜெபிப்பதிலேயே முடிந்துவிடுகிறதாக இருக்கின்றன.
நாம் அறிந்தபடி ஜெபம் என்பது நாம் ஆண்டவரோடு பேசுவது, வேதவாசிப்பு என்பது ஆண்டவர் நம்மோடு பேசுவது. அப்படியிருக்கையில், நாம் ஜெபங்களை மட்டுமே செய்துக்கொண்டிருந்தால் அது ஒருவழித்தொடர்பாக மட்டுமே இருக்கும். அதாவது “ஆண்டவர் பேசுவதை நான் கேட்கமாட்டேன், ஆனால் ஆண்டவர் நான் சொல்வதை கேட்டாகவேண்டும்” என்று ஆண்டவரை நிர்பந்திக்கிற ஜெபங்களாக நம் ஜெபங்கள் இருக்கின்றன.

தனிப்பட்ட வேதவாசிப்பும் தியானமும் தான் நம் வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கிறது. இந்த லெந்து காலங்களை சடங்காக கழிக்காமல் வேறு யாரோ சமைத்த பிரசங்கங்களை மத்திரமே புசித்துக்கொண்டிருக்காமல் ஆவிக்குரிய வாழ்வில் எலும்பும் தோலுமாக இருக்கிற நாம், “நானே வானத்திலிருந்து வந்த ஜீவ அப்பம், இந்த அப்பத்தை புசிக்கிறவன் என்றென்றும் பிழைப்பான்” என்ற வார்த்தையானவரின் வார்த்தைகளை புசித்து ஆவிக்குரிய வாழ்வில் பெலன்கொள்வோம். நாமும் கடவுளும் மாத்திரம் செலவு செய்கிற நேரங்களுக்கு முன்னுரிமை அளிப்போம், ஆண்டவர்தாமே உங்களை ஆவியில் பெலப்படுத்தி வழிநடத்துவாராக!
———————————————

படிக்க:

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்”
(மத்தேயு 11:29)
“இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்”.
(யோவான் 8:31)
———————————————

<strong><sub>அருட்பணி. கிறிஸ்து அடியான்.</sub></strong>
அருட்பணி. கிறிஸ்து அடியான்.