6 மே 2022


திருத்தூதுவரும் நற்செய்தியாளனுமாகிய யோவான்

யோவான் 21:20-25

• ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராக இவர் காணப்படுகின்றார். மேலும், சின்னாசியா, எபேசு போன்ற பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து பின்னர் கி.பி. 96ம் ஆண்டளவில் தொமித்தியன் அரசன் காலத்தில் கொதிக்கும் எண்ணெய்க்குள் இவர் போடப்பட்டார். அது இவருக்கு எதுவும் செய்யாதபடியால் ஆத்திரமடைந்த அரசன் இவரை பத்மோஸ் என்ற தீவுக்கு நாடுகடத்தினார். அங்கிருந்தே இவர் திருவெளிப்பாடு அல்லது வெளிப்படுத்தினவிசேஷம் என்ற நூலை எழுதியுள்ளார். மேலும், இவர் யோவான் நற்செய்தி, யோவானின் நிருபங்கள் போன்றவைகளையும் எழுதியுள்ளார் என திருச்சபை நம்புகின்றது.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி விடுதலைப்பயணம் அல்லது யாத்திராகமம் 33:18-23 இப்பகுதியில் கடவுள் தன்னுடைய மாட்சிமையை மோசேக்கு வெளிப்படுத்துவதை நாம் காண்கின்றோம். இப்படியான மகிமையை கடவுள் கிறிஸ்துவின் மூலம் யோவானுக்கு வெளிப்படுத்தினார். இதனையே, திருப்பாடலில் நாம் பார்க்கின்றோம். இவ் வெளிப்பாடு பொதுவான வெளிப்பாடாக காணப்படாமல் சிறப்பு வெளிப்பாடாக அமைகின்றது.

• புதிய ஏற்பாட்டு பகுதியில் 1 யோவான் 1:1-4ல் இந்நிருபத்தை எழுதிய யோவான் கடவுளின் மகிமையை பற்றி மறுபடியும் பேசுகின்றார். அந்த மகிமையின் அனுபவத்தையே எழுத்து வடிவில் வடித்துள்ளார். சிறப்பாக, அக்காலத்தில் நிலவிய ஞானவாதக் கொள்கையினருக்கு எதிராக இந்த முதலாம் நிருபத்தை எழுதி நாம் எல்லோரும் பாவிகள் என்பதை உணர்த்துகின்றார். ஏனெனில், ஞானவாதக் கொள்கையினர் தாங்கள் பாவிகள் இல்லை எனக் கருதினர். அத்துடன், அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தை உண்மையான சரீரம் என நம்பவில்லை. இதற்கு எதிராக மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர் அந்திக்கிறிஸ்துக்கள் அதாவது, கிறிஸ்துவுக்கு விரோதிகள் என 2ம் யோவானில் குறிப்பிடுகின்றார். 3ம் யோவானில் திருச்சபைக்கு இடையே நிலவ வேண்டிய ஒற்றுமையைப் பற்றி பேசுகின்றார்.

• நற்செய்தி பகுதியில் யோவான் 21:20-25ல் நற்செய்தியாளனாகிய யோவான் தனது திருப்பணியின் தன்மை, நிறைவு போன்றவற்றைக் குறித்து இயேசு கூறிய வார்த்தைகளை ஞாபகப்படுத்துகின்றார். அதாவது, இவரே அதிக வயதாகி இயற்கை மரணம் தரித்தவர் என வரலாறு கூறுகின்றது. எனினும், நீரோ மற்றும் தொமித்தியன் போன்றவர்கள் காலத்தில் கிறிஸ்தவர்கள் துன்பப்பட்ட வேளையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக அடையாளச் சின்னங்கள் ஊடாக இறைவாக்குரைக்கும் வகையில் திருவெளிப்பாட்டை எழுதினார்.

ஆக்கம்: அற்புதம்