g189883069a4dd928afd3c7b3066ca2dc543b6cd4a624bdaebea081bc224b1ee5475a15a12190be00e4b4a3c67906e8132a3e07b677ea0d4e6c83d4964135a5ff_1280-1894125.jpg

யோவான் 4:15-26

• கடவுளுக்குரிய மாட்சிமையை ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கொடுப்பதே வழிபாடு ஆகும். இவ்வழிபாடு வார்த்தையினூடாகவோ அல்லது அடையாளச் சின்னங்களினூடாகவோ கடவுளுக்கு தெரியப்படுத்தலாம். எனவே, இவ்வழிபாடு ஆவியோடும் உண்மையோடும் நடாத்தப்பட வேண்டும் அல்லது வழிபடவேண்டும் என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்படுகின்றது.

• ஏசாயா 6:1-8ல், ஏசாயாவின் அழைப்பைப் பற்றி நாம் இங்கு காண்கிறோம். உசியா அரசன் மரணத்திற்குப் பின்னர் நிலவும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் தாங்கியவராக ஆலயத்திற்குள் சென்ற ஏசாயா இறைவனிடமிருந்து அமைதியைப் பெறவில்லை. மாறாக, கடவுள் தன்னுடைய பாரத்தை ஏசாயாவோடு பகிர்ந்துக் கொள்கின்றார். எனவே, வழிபாட்டில் நாம் அமைதியைப் பெறுவது மாத்திரமன்றி இறைவனின் பாரத்தை சுமந்து செல்லவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஏசாயா 6:8ன் படி, “இதோ நானிருக்கின்றேன். என்னை அனுப்பும்” என கூறுகின்ற ஏசாயாவின் வாக்கு சிறப்பு மிக்கதாகும். அது அழைப்பில் விளங்கும் பொறுப்புத் தன்மையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.

• திருப்பாடல் 139ல், இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் மானிட சமூகம் காணப்படுகின்றது. இங்கு ஓர் மனிதனின் உட்காருதல், எழுந்திருத்தல், அவனின் அசைவுகள் அனைத்துக்கும் கடவுள் பொறுப்பானவர். அவரின்றி அணுவும் அசையாது என்ற வாக்கு இதற்கூடாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதுவே வழிபாட்டில் இன்னுமொரு நிலையாகும். நாம் இறைவனை வழிபடுவது அவர் எம்மீது பாராட்டிய அன்புக்கான ஒரு பதிலீடு ஆகும் என நாம் கூறலாம்.

• யோவான் நற்செய்தியில் தூய ஆவியருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. தூய ஆவியர் புதிய வழிபாட்டை எம்மிடத்திலிருந்து எதிர்ப்பார்க்கின்றார். அதுவே ஆவியோடும் உண்மையோடும் இறைவனை வழிபடுதல் ஆகும். இத்திருமறைப் பகுதியின் பின்னணியைப் பார்க்கும்போது, சமாரியர்கள் யூதர்களால் வெறுக்கப்பட்டப் பின்னணியில் தோரா என்ற பஞ்சாகமத்தின் உதவியுடன் சீகார் என்னும் மலையில் வழிபட்டு வந்தனர். மறுகரையில் யூதர்கள் தமது வழிபாட்டை எருசலேம் ஆலயத்திற்குள் நடாத்தினர். இங்கே இரண்டு பெரும் பாரம்பரியங்கள் மோதுவதை நாம் காணலாம். எருசலேம் பாரம்பரியம் மற்றும் சீகாரின் பாரம்பரியம் ஆகிய இரண்டு பாரம்பரியங்கள் மோதுகின்றன. இப்பேர்ப்பட்ட பின்னணியில் இவர்கள் இருவரும் கடவுளை உரிமைச் சொத்தாகப் பாராட்டுகின்றனர். தாமே சரியான முறையில் வழிபடுகின்றனர் என வாதிட்டு நின்றனர். இவர்கள் இருவரையும் ஒப்புரவாக்கும் நோக்குடனேயே ஆண்டவர் இயேசு இறைவன் ஆவியாய் உள்ளார். அவரைத் தொழுதுகொள்பவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கிறார்.

ஆவி எல்லாப் பாரம்பரியங்களையும் தாண்டிச் செல்லத் தக்கது. யாரும் உரிமைப் பாராட்டி விடவும் முடியாது. அத்துடன், யோவான் நற்செய்தியில் உண்மை என்பது ஓர் முடிவில்லா வாழ்விற்கான ஊடகமாகும். யோவான் 17:3ல், ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிப்பதே முடிவில்லா வாழ்விற்கான காரணமாகும். தூய ஆவியர் மறுபடியும் வரும்போது அவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் வலியுறுத்துவார். அவருக்கு ‘உண்மையின் ஆவி’ என்றும் இன்னுமொரு பெயர் உண்டு. எனவே வழிப்பாட்டில், “ஆவியோடும் உண்மையோடும் வழிபடுவதே ஓர் உண்மையான வழிபாடு” என யோவான் நற்செய்தியாளர் கூறுகின்றார். இதுவே ஓர் புதிய வழிபாடாகும். இதன் பின்னணியிலேயே யோவான் 7:35-37ல், “ஆவியர் எமது உள்ளத்திலிருந்து புதிய ஊற்றாக வெளிப்படுகின்றார்” என்ற செய்தி காண்பிக்கப்படுகின்றார்.

ஆக்கம்: அற்புதம்