10 ஏப்ரல் 2022

குருத்தோலை ஞாயிறு
ஆண்டவரே எங்களை இரட்சியும்

லூக்கா 19:29-40

• குருத்தோலை ஞாயிறு அல்லது பவனி ஞாயிறு ஆண்டவர் இயேசுவின் பணியின் இறுதி வார நிகழ்வு என பொதுவாக திருச்சபையினால் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில், இயேசுவின் பாடுகள், மரணம் போன்றவற்றிற்கான ஆயத்தத்தோடு அவரின் உயிர்த்தெழுதலை மகிழ்ச்சி கொள்ளவும் நாம் தயாராகின்றோம்.

• பழைய உடன்படிக்கையின்படி சகரியா 9:1-12 வரையுள்ள பகுதியில் இறைவாக்கினர் சகரியா, மெசியா கழுதையின்மீது பவனியாக எருசலேமுக்குள் நுழைவார். இதனையே, திருப்பாடல் 118ம் கூறுகின்றது. எனவே, ஆண்டவர் இயேசு எருசலேமுக்குள் நுழையும் காட்சியின் மூலம் தன்னை மெசியா என வெளிப்படுத்துகின்றார். இங்கு நடைபெறும் அலங்கரிப்புக்களும் கைகளில் ஏந்துகின்ற குருத்தோலைக் காட்சிகளும் கி.மு. 168ம் ஆண்டில் எருசலேம் ஆலய மீள் அர்ப்பணிப்பு விழாவின்போது தெயோஸ் எப்பிபானஸ் என்பவரால் ஆற்றப்பட்ட சடங்குக்கு சமமாகக் காணப்பட்டது.

வாசிக்கக்கேட்ட நற்செய்தி பகுதியில் ஓசன்னா அல்லது இன்றே இரட்சியும் என்ற பாடல் மெசியாவின் வருகையின்போது பாடுவதற்காக வைத்திருந்த பாடலாகும். ஆனால், அப்பாடலை இப்போது மக்கள் இயேசுவுக்காக பாடியபோது, சமயத் தலைவர்கள் ஆத்திரம் அடைந்தனர். எனவேதான். இயேசு நீங்கள் பாடாதப் பட்சத்தில் கற்கள் பாடும் எனக் குறிப்பிடுகின்றார். மேலும், ஆலயத்திற்குள் நடைபெறும் சுத்திகரிப்பு, புறவினமக்கள் வழிபாட்டில் கலந்து கொள்வதற்கும் ஏழைகளின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கும் சமத்துவத்திற்குமான அழைப்பாகும். இதற்கான விளக்கத்தை முன்னரே எழுதியுள்ளேன். மேலும், இந்நிகழ்வு எருசலேம் நகரத்திற்கான இறுதி சமாதான அழைப்பாகும். மேலும், ஆலயத்திற்கான நியாயந்தீர்ப்பு இப்போதே அறிவிக்கப்படுகின்றது.

• இரண்டாம் உடன்படிக்கையின்படி பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது இறைவார்த்தையில் நிலைத்திருக்குமாறு கூறுகின்றார். இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள இறைவாக்குகளில் நாம் நிலைத்திருக்க அழைக்கப்படுகின்றோம்.

• குருத்தோலை நிகழ்வின்போது இயேசு பவனியாக சென்ற நிகழ்வை திருச்சபை வரலாற்றில் தவறாக பயன்படுத்தியுள்ளனர். கி.பி.1096ல் புனித பேதுரு கழுதையில் அமர்ந்து சிலுவையை கரத்தில் ஏந்தி சிலுவை யுத்தத்திற்கு மக்களை அழைக்கும் பணியில் பவனியாக சென்றதை நாம் மறக்கக்கூடாது. பின்னர் திருச்சபை திருச்சபைக்குள் மக்களை அழைப்பதற்காகவும் இம்மாதிரியையே பயன்படுத்தியது.

ஆக்கம்: அற்புதம்