(சகரியா 9:9-12,மாற்கு 11:1-11)

50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் உயர்நிலை பள்ளி படித்து கொண்டிருந்த காலம். சைக்கிள் ரிக்சா அன்றுதான் பயன்பாட்டுக்கு வந்தது. மக்களில் பலர் பலவிதமாக பேசினர். சென்னையில் என் கிறிஸ்தவ தமிழாசிரியர் ஒருவர், மனிதரே இன்னெரு மனிதரை இழுத்து செல்வது அறத்திற்கு மாறானது என நினைத்து காசு கொடுத்துவிட்டு, இறங்கி அவரே சைக்கிள் ரிக்சாவைத் தள்ளினாராம். இது இந்நூற்றாண்டு வரலாறு.

2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் இயேசுவின் கடைசி கட்ட ஊர்வலத்தைக் குறிப்பதுதான் குருத்தோலை திருநாள். பலர் இதனை வெற்றிப்பயணம் எனவும் விளக்குவர். அப்படியல்ல, இது சிலுவையை எதிர்பார்த்த ஒரு நிகழ்வு, வரலாற்றுப் பயணம். பெத்தானியா ஏற்கனவே இயேசுவுக்கு மிகவும் அறிமுகமான ஊர். நண்பர்கள் லாசரு, மார்த்தாள், மரியா அங்குதான் வாழ்ந்தனர். இதனால் மக்கள் இயேசுவின் பயணத்தில் இணைந்தனர். இயேசுவின் ஊர்தியும், பயணமும் இதுவரை இல்லாத புதுமையை, ஆரவாரத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. இன்று நம்மிடையே பலம், அதிகாரம், செல்வாக்கு நிருபிக்க எத்தனை ஊர்வலங்கள் நடக்கின்றன.

கிராமத்திலிருந்து கிளம்பிய அரசர் (மாற்கு11:2,18):-

அன்று கிராமத்திலிருந்து நகரத்துக்கு சிலரே சென்றிருக்கும் வாய்ப்புகள் உண்டு. இங்கு இதுவரை ஆரவாரத்தை விரும்பாத ஒருவர் தன்னை ஒரு அரசர் போன்று பாவித்து, தனக்கும் ஒரு நல்லவர்களின் கூட்டம் உண்டு என உலகுக்கு வெளிப்படுத்த விரும்பினார் (மாற்.11:10). நல்லவர்கள் கரைந்து போய்விடக்கூடாது. அவர்களுக்குள் ஒரு கூட்டொருமைப்பாடு கட்டிஎழுப்பப்பட வேண்டும். போர்க் குதிரையை வெறுக்கும் ஓர் அரசர் (சகரி.9:10). கட்டப்பட்டிருந்த கழுதை அவிழ்க்கப்பட்டது. ஆண்டவருக்கு தேவை என கூறப்பட்டது. கழுதைமீது துணிகள் போட்டு அலங்கரிக்கப்பட்டது. செடிகொடிகள், புற்கள் வழிகளிலே பரப்பட்டன. முனóனும் பின்னும் ‘ஒசன்னா’ எனும் கோசங்கள், முழக்கங்கள். ‘ஒசன்னா’ எனும் இச்சொல் பழைய ஏட்டில் அரசர்களுக்கு பயன்படுத்தப்பட்டது (2சாமு.14:4). அதன் பொருள், எங்களை மீட்டருளூம் ஆண்டவனே என்பதாகும். தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கும், நல்லவர்களுக்கும் ஆரவாரம், கொண்டாட்டம் முற்றிலும் இல்லை என்ற உணர்வை இயேசு மாற்றினார். இந்த ஊர்வலம் பெத்தானியா பகுதி எளிய மக்களை உற்சாகப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக இவ்விடத்து கிராமத்தார் எருசலேம் நகரத்தாரைப் பார்த்து கவலைப்படுகின்றனர்.

உணர்வுகளை வெளிப்படுத்திய அரசர் (லூக்.19:40-41):-

எளிய மக்களும், சீடரும் கடவுளைப் புகழ்ந்து பாடினர். இதனைக் கண்டிக்குமாறு பரிசேயர் ஆண்டவரிடம் வலியுறுத்திக் கூறினர். ஆனால் ஆண்டவர் அதற்கு பதிலடி கொடுத்தார். ‘இவர்கள் பாடவிடில் கற்கள் பாடும்’ என்றார். முழு மக்களும் உணர்ச்சி ததும்ப நின்றனர். எருசலேம் நகரைப்பார்த்து ஆண்டவர் கண்ணீர்விட்டார். ‘உன் நகர அழகில் மயங்கிவிடாதே, இந்நகருக்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி வீழும் அழிவு வரப்போகிறது. அதற்கு முன்பே சமாதானத்தின் செய்திகளைத் தெரிந்துகொள்’ என்ற எச்சரிப்பு விடுத்தார்.
மாற்.11:12-இல் வரும் இயேசுவின் அதீத பசி, கனி தராத அழகிய அத்திமரம் பட்டுப்போதல் ஆகியவை அடையாளபூர்வமாக முன்குறிப்பாகக் காட்டப்பட்டன. மாற்.11:15-இல் காசுக்காரர்களை அடித்துத் துரத்தினார். அவர்களது பெட்டிகளைக் கவிழ்த்துப் போட்டார். பலிகளுக்கான புறாக்களை துரத்திவிட்டார். அனைத்து இனமக்களின் இறைவேண்டலுக்கான ஓர் இடத்தை கள்வர் குகையாக மாற்றியதை நினைத்துக் குமுறினார். மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒர் அரசராக அங்கு காட்சியளித்தார்.
கோவிலின் அதிகார கும்பலின் நடுவே தம் தைரியத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்திய ஆண்டவர், பாவத்தையும், நீதியையும், தீர்ப்பையும் கூறி கண்டித்து உணர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தார் (யோ.16:8). நீதியைக் குறித்து பிறரோடு தொடர்ந்து பேசுவதால் ஏராளமான நஷ்டங்கள் உண்டு, உறவுகள் இழப்பு உண்டு.

சிலுவையை எதிர்பார்த்து முன்னேறிய அரசர் (மத். 21:15,23):-

நகருக்குச் செல்லாமல், எதையும் மாற்றமுடியவில்லை. வெற்றியை, சுயநல வருமானத்தை, புகழை மட்டுமே வைத்து முன்னேறும் அரசர்கள் நடுவே, புதிய கொள்கையைக் கொண்ட ஒர் அரசர் எழும்பியுள்ளார். இவரிடம் சுயநலம் இல்லை, புகழ்பாடும் கூட்டம் இல்லை, அடிவருடிகள் இல்லை. மாறாக ஏழைகள், பாலினத்தால் ஒரங்கட்டப்பட்டோர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர், நோயாளிகள், விதவைகள் ஆகியோர் பின் சென்றனர். இவர்கள் வாழ்வுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒரே அரசர் இவரே.
தியாகத்தினைச் செய்து மக்களை மீட்கும் அரசர் இவர். இவர் செயல்பாடுகள் ஆளுவேருக்கு எரிச்சலைக் கொடுத்தன (யோ.12:19). தம் செயல்கள் வீண் என பரிசேயர்கள் தமக்குள்ளே புலம்ப ஆரம்பித்தனர். அவர்களது வியாபாரம், காணிக்கை, காசுபெட்டியைக் கொண்டதொரு பிழைப்பைத் தொட்டதுதான் கடுமையான கோபத்தைக் கிளப்பியது. லாசரு குடும்பத்தால் இயேசு நாதருக்கு புகழ்வருகிறது என்று நினைத்ததால் லாசருவையும் சேர்த்துக் கொல்லத் திட்டமிட்டனர் (யோ.12:10-11). எவ்வளவு மிக மோசமான ஒரு கொலைக் கூட்டத்தின் நடுவே ஆண்டவரின் பணி அமைந்தது என்பதை அங்கு புரிந்து கொள்ளலாம். ஒவ்வொருநாளும் சிலுவைகளின் நடுவே நம் பயணம், ஊர்வலம் வழியே முன்னேறிச் செல்ல அழைக்கப்படுகிறோம். இது ஒரு போருக்கான ஆயத்தம் அல்ல, மாறாக நீதியர்களின் இணைவின் தொடக்கம்.

முடிவுரை:

குருத்தோலை திருநாளில் ஆலயத்திற்கு வந்திருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்மை சோதனை செய்துகொள்ள இது ஒரு நல்லநேரம். நாம் வழிபடும் ஆண்டவரின் செயல்பாடுகள் ஆண்டவரை ஒரு வித்தியாசமான அரசராக புரிகிற கூட்டத்தை சேர்ந்தவராக இருக்கிறோமா? அல்லது வாய்ப்பு கிட்டினால் செழிப்பின் வழிபாட்டையும், பொற்கன்றுக்குட்டியை உருவாக்கி வழிபட முயலவும் (யாத்.32:1), வணிக வளாகங்கள் மூலம் சுய வருமானத்திற்கு வழி செய்யவும், இலாபம் ஈட்டவும் முனையும் கூட்டத்தினராக இருக்கிறோமா?

நம்மை ஆளுகிறவராக ஆண்டவராகிய இயேசுவைப் பார்க்க வேண்டுமெனில் எந்த சூழ்நிலையில் இருப்பினும் நம்மை ஏற்றுக்கொண்டு வழிநடத்துகிறவர் எனும் நம்பிக்கை வேண்டும். உணர்வு பூர்வமாக செயல்பாட்டில் ஈடுபடலே வேண்டும். சிலுவையை எதிர்பார்த்தே நன்மைகளைச் செய்ய வேண்டும். சிலுவையைத் தவிர்க்க பல யோசனைகள் பல கோணங்களில் வரலாம். யாரால் வருகிறது என்பதை தெளிவுபெற்று, அதனை அகற்றிட வேண்டும்.

ஆண்டவரின் நிரந்தர அமைதிக்குரிய ஊர்தியாக நாம் இயங்க விரும்புகிறார் ஆனால் நாம் ஆண்டவரின் இப்பயணத்தில் பங்கு பெற விரும்புகிறோமா? அவர் பந்தியில் பங்கு பெற விரும்புகிறோமா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அருட்பணி. முனைவர். சாலமன் விக்டஸ்,
அருட்பணி. முனைவர். சாலமன் விக்டஸ்,

இறையியல் பேராசிரியர்,
தமிழ்நாடு.

2 thought on “குருத்தோலை திருநாள்”

Comments are closed.