15 ஏப்ரல் 2022

யோவான் 19:23-30

• இன்று பெரிய வெள்ளிக்கிழமை பொதுவாக ஆலயங்களில் 3 மணி நேர தியானங்கள் நடைபெறும். 7 வார்த்தைகளும் திருமறையிலிருந்து எடுக்கப்பட்டு திருச்சபையில் தொகுக்கப்பட்டன.

• வாசிக்கப்பட்ட முதலாவது உடன்படிக்கை பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை செங்கடலை கடக்கும் நிகழ்வு பதியப்பட்டுள்ளது. (யாத்திராகமம் / விடுதலைப்பயணம் 14:15-22) இப்பகுதியை பற்றி எகிப்திய ஏடுகளாகிய மாரி அல்லது நுசி போன்றவைகள் எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், இப்பகுதியில் ஆண்டவர் எவ்வாறு இஸ்ரவேல் மக்களை தண்ணீரிலிருந்தும் எகிப்தியரிடமிருந்தும் மீட்டுக்கொண்டார் என்பதை அறிகிறோம்.

• திருப்பாடல் 22ல் தாவீது துன்பத்தின் மிகுதியால் “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்” எனக் கதறுகின்றார். இதே கதறலை மாற்கு 15:34-35ல் ஆண்டவர் இயேசு சிலுவையிலே “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்” என கதறுகிறார். இக்கதறல் ஓர் வரலாற்று கதறலாகும். மேலும், ஆண்டவர் இயேசு கைவிடப்பட்ட மக்களின் கதறல்களை புரிந்துகொள்ளும் வகையில் பிதாவானவரால் கைவிடப்பட்டார். அத்துடன், ஆண்டவர் இயேசுவின் மன்றாடலுக்கு பிதாவானவர் மௌமாக இருந்தார். மௌனமும் எங்கள் மன்றாடல்களுக்கான பதிலுரையாகும். இவ்வார்த்தை பொதுவாக 4ம் வார்த்தையாக சிலுவைத் தியானத்தில் இடம்பெறுகின்றது.

• புதிய உடன்படிக்கை பகுதியில் எபிரேயர் 13:8ல் இயேசுவின் மாறாத்தன்மையை ஆசிரியர் எடுத்துக் காண்பிக்கின்றார். இதன்மூலம், அவரின் இரட்சிக்கும் பணி தொடர்கின்றது. அப்பணியில் நாம் பங்குதாரர்கள் ஆக வேண்டும் என்பதை கடவுள் எதிர்ப்பார்க்கின்றார்.

• நற்செய்தி பகுதியில் யோவான் 19:23-30 வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசுவின் பாடுகள் பகிரப்படுவதை நாம் பார்க்கின்றோம். பொதுவாக, யூதர்கள் ஐந்து விதமான ஆடைகளை அணிவர். மேலாடை, உள்ளாடை, இடைக்கச்சை, தலைப்பாகை, மிதியணி போன்றவைகள் ஆகும். மேலாடையை தவிர ஏனையவற்றை போர்வீரர்கள் சீட்டுப்போட்டு எடுத்துக் கொண்டார்கள். இப்போது மேலாடையையும் எடுத்துக் கொள்ளுகின்றார்கள். இவ்வேளையிலேயே ஆண்டவர் இயேசு, ‘’தாயே இதோ உன் மகன். யோவானே இதோ உன் அன்னை’’ என்ற புதிய உறவுக்குள் இருவரையும் சிலுவையின் ஒளியின் கீழ் அழைக்கின்றார்.

மரியாள் கலிலேயா நாட்டை சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி. யோவான் எருசலேம் நகரத்தைச் சேர்ந்த கற்றறிந்த செல்வந்தன். எனவே, ஏழைப் பெண்மணியாகிய மரியாளை கற்றறிந்த யோவானை உன் மகனாக ஏற்றுக் கொள்ள முடியுமா? மறுகரையில், யோவானைப் பார்த்து, ஏழைப் பெண்மணியை உன் தாயாக ஏற்றுக்கொள்ள முடியுமா என சவால் விடுகிறார். இன்றும் இச் சவால் உயிருள்ளதாகும். அதாவது, பெற்றோர்கள் அற்ற பிள்ளைகளை எமது பிள்ளைகளாகவும், அவர்களின் தாய்மார்களை எமது தாய்மார்களாகவும் எம்மால் உரிமை பாராட்ட முடியுமா? இது இன்றைய போர்க்காலத்துக்கு பின்னான சூழலில் புதிய ஒப்புரவாக்குதலை ஏற்படுத்துவதற்கான அழைப்பாகும். இதனூடாக, உறவிழந்தவர்களுக்கான பராமரிப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஆக்கம்: அற்புதம்