1 மே 2022
திருமறையை உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஒளியில் மீளவும் கற்றல்
லூக்கா 24:13-27

• இன்றைய இறையியல் உலகத்தில் திருமறையை பலருடைய பக்கத்திலிருந்து மீள வாசிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, பெண்கள் பக்கத்தில் இருந்து, ஒடுக்கப்படுவோர் பக்கத்திலிருந்து அங்கவீனத் தன்மையுள்ள மக்கள் பக்கத்திலிருந்து வாசிக்கப்படுகின்றன. ஆனால், இன்று உயிர்த்தெழுந்த ஆண்டவருடைய ஒளியின் பக்கத்திலிருந்து திருமறையை வாசிக்க அழைக்கப்படுகின்றோம்.

• முதலாம் உடன்படிக்கையின்படி 2 நாளாகமம் / 2 குறிப்பேடு 34:29-33 யோசியா அரசன் உடன்படிக்கை புஸ்தகத்தை வாசித்து அதனொளியில் மக்களின் வாழ்க்கையை சீர்த்திருத்தம் செய்யுமாறு அழைக்கின்றார். மேலும், இப்பேர்ப்பட்ட பணியை பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ராயேல் மக்கள் மத்தியில் எஸ்றா ஆற்றுவதை நாம் பார்க்கின்றோம். இதனையே, திருப்பாடலில் ஆசிரியர் திருப்பாடல் 19:7-14ல் கூறுகின்றார். அதாவது, ஆண்டவருடைய வார்த்தை ஞானமானது. அதனொளியில் வாழுமாறு அழைக்கின்றார்.

• திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 8:26-40 பகுதியில் சமாரியாவில் திருத்தூதுவர்களின் பணியை நாம் பார்க்கலாம். இங்கு குறிப்பாக எத்தியோப்பிய அண்ணகர், ஏசாயா பகுதியை வாசிக்கின்றார். ஆனால், அவரால் இப்பகுதியை புரிந்துக் கொள்ள முடியவில்லை. உடனே, தூய ஆவியர் பிலிப்புவை நோக்கி, தேர் அருகில் சென்று விளங்காமல் வாசிக்கின்ற மனிதருக்கு விளக்கமளிக்க கேட்கின்றார். இங்கு, திருமறையை புரிந்துகொள்ள தூய ஆவியரின் பலம் அவசியம் என தெரிகின்றது. மேலும், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் உதவியையும் நாம் புறக்கணிக்க முடியாது. அத்துடன், இந்த எத்தியோப்பிய அண்ணகர் விளக்கம் பெற்று திருமுழுக்கைப் பெற்ற பின்னர், இலங்கைக்கு வந்து நற்செய்தியை அறிவித்ததாக வாய்மொழிப் பாரம்பரியம் கூறுகின்றது.

வாசிக்கப்பட்ட நற்செய்தி லூக்கா 24:13-27ல் ஆண்டவராகிய இயேசு எம்மாவூருக்கு பயணப்படுவதை நாம் பார்க்கின்றோம். எம்மாவூரிலேயே மிகப்பெரிய இராணுவத்தளம் காணப்பட்டது. இங்கிருந்தே மக்களுக்கு மரண தண்டனைகளும் விதிக்கப்பட்டன. எனவே, வன்முறை மிக்க இப்பகுதிக்கு நிராயுதபாணியாகிய இயேசு அமைதியின் சமாதானத்தின் செய்தியை எடுத்துக் கூற செல்கின்றார். இவ்வொளியிலேயே இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய பகுதிகளை வாசித்தறியுமாறு ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்கு குறிப்பிடுகின்றார்.

ஆக்கம்: அற்புதம்