8 மே 2022

யோவான் 20:19-23

•            திருமறையில் அநேகரை கடவுள் அபிஷேகித்து பணிக்காக அனுப்புகின்றார். உதாரணமாக, சவுலை சாமுவேல் அபிஷேகிக்கின்றார். மெசியா என்பதற்கு ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ என்பதே பொருளாகும். “தந்தை என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகின்றேன்” (யோவான் 20:21). இவ் அனுப்புதல் இன்றும் தொடர்கின்றது.

•            முதலாம் உடன்படிக்கை நூலின்படி எரேமியா 9:1-10ல் எரேமியாவின் அழைப்பு, அபிஷேகம், அனுப்பப்படல் போன்றவற்றைப் பார்க்கின்றோம். இதையொத்த அழைப்பு எரேமியா 1:1-8ல் நாம் காணலாம். தாயின் கருவில் இருந்தே தெரிவு செய்யப்பட்டவர் கட்டவும், இடிக்கவும், பிடுங்கவும், நடவும் கடவுளால் அழைக்கப்படுகின்றார். அழைப்பு பொதுவாக கட்டுவதற்கும் நடுவதற்கும் மாத்திரமல்ல தவறானவைகள் இடிக்கப்படுவதற்கும் பிடுங்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனையே, திருப்பாடல் 47லும் நாம் காணலாம்.

•            இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 1 தீமோத்தேயு 4:6-16 பவுல் தன் உடன் உழைப்பாளியாகிய தீமோத்தேயுவை அபிஷேகம் செய்து அனுப்புகின்றார். அதாவது, அவனின் பணியில் இறைவார்த்தையில் தங்கி இருக்குமாறு புத்தி கூறுகின்றார்.

•            நற்செய்தி பகுதியில் யோவான் 20:19-23 உயிர்த்தெழுந்த ஆண்டவர் சீடர்கள் மத்தியில் தோன்றி அவர்களுக்கு அமைதியின் வாழ்த்துதலை பகிர்ந்து கொண்டு பணிக்கு அனுப்புகின்றார். இங்கு, ஆண்டவர் இயேசு தமது ஆவியை அவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். யோவான் நற்செய்தியின்படி இதுவே பெந்தேகோஸ்தே திருவிழா. இங்கு, சீடர்கள் தாம் அனுபவித்த பாவமன்னிப்பை பிறருடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

•            இவ் அனுப்பும் பணி கடவுளுக்குரியதாகும். ஆனால், பிற்பட்ட காலப்பகுதியில் இப்பணிக்கு சொந்தக்காரராக திருச்சபைக் காணப்பட்டது. எனினும், 1952ம் ஆண்டு வெலிங்டனில் இடம்பெற்ற மகா நாட்டின் மூலம் மறுபடியும் கடவுள் மையத் திருப்பணி வலியுறுத்தப்பட்டது.

ஆக்கம்: அற்பதம்