மக்களோடு மக்களாக (Be with the People)

இலங்கை நாடாக நாம் ஓர் பாரிய அரசியல்,பொருளாதார,சமூக நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் இக்கட்டுரையை எழுதும் போது, 38வது நாளாக அமைதியான ரீதியில் போராட்டம் காலி முகத்திடல், கொழும்பில் நடைபெற்று வருகின்றது. ஓரு நாட்டு மக்களாக இனம், மதம், மொழி, ரீதியான பாகுபாடுகளை கடந்து களைந்து, சிறுவர்கள், வாலிபர்கள், தாய்மார், தந்தைமார் மற்றும் பெரியவர்களாக அநீதி, ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கின்றனர். இப்போராட்டம் ஓரு மக்கள் போராட்டம், அரசியல் தலைவர்களின் வழிகாட்டல் இல்லாமல் சாதாரண மக்களின் வேதனைகளை உலகறிய செய்த மக்கள் போராட்டம். இலங்கையின் கிராமங்கள், நகரங்கள் என  எல்லா இடங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் காலி முகத்திடலை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்,

ஏன் வருகின்றனர்? எதற்காக வருகின்றனர்? முழு நாட்டுக்காக குரல் கொடுக்கும், போராடும் மக்களோடு தம்மை அடையாளப்படுத்தவும், தமது ஒத்துழைப்பையும், அன்பையும் அம்மக்களோடு பகிர்ந்து கொள்ள அவர்கள் காலி முகத்திடலில் ஒன்று கூடுகிறார்கள். இவ்வகையில் ஆரம்பம் முதல் அறவழியான போராட்டத்திற்கு மதத்தலைவர்கள் தமது பூரண ஒத்துழைப்பை கொடுத்தனர். எல்லா மதமும் மக்களை சரியான பாதையில் வழிநடத்தவும், அவர்கள் வாழ்வை வளப்படுத்தவுமே கற்பிக்கிறது. அநீதியான ஊழல் நிறைந்த தலைவர்கள்   தமது பதவிகளில் இருந்து நீக்க படவும், விளிம்பு நிலை மக்களின் வாழ்வு வளமாக்கப்படவேண்டும் என்றும், மீண்டும் நாடு  சிறப்பான ரீதியில்  வளர்ச்சி அடைய வேண்டும் என மதத்தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

கிறிஸ்தவ பார்வையில் என்னை நோக்கி வந்த சில கேள்விகள்,

கிறிஸ்தவ குருவானவர்கள் போராட்டங்களில் பங்கு பெறலாமா? அவர்கள், மக்களோடு சேர்ந்து அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது சரியா?

இக்கேள்வி இக்காலத்திற்க்கு ஏற்ற கேள்வி. அரசியல் என்ற சொல் ஆங்கிலத்தில் Politics என அழைக்கப்படும். இவ்வார்த்தை Polis என்ற கிரேக்க அடிச்சொல்லிலிருந்து வருகிறது. Pழடளை என்றால் நகரம் உவைல் நகரத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் விடயங்களை (affairs in the city) என்று கிரேக்க வல்லுநர்கள் அழைத்தனர். Politika  என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து Politics என்ற ஆங்கில வார்த்தை உபயோகத்திற்கு வந்தது. அத்தோடு காலப்போக்கில் Polis  என்ற வார்த்தை குடியுரிமை, நாட்டின் குடிமக்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக அறிகிறோம்.

நகரங்களில் நடக்கும் விடயங்களுக்கு மனிதன் சம்பந்தப்படுகிறான், மனிதர்களின் முயற்சியோடு நகரங்களில் பல விடயங்கள் நடைபெறுகின்றன. மனிதன் ஓர் அரசியல் என அரசியல் விஞ்ஞானத்தின் தந்தை அரிஸ்டாட்டில் கூறுகிறார். அரசியல் காரணிகளில் இருந்து மனிதன் தன்னை பிரித்து கொள்ளமுடியாது. இவ்வாறான காரணங்களினால் மனிதன் தன்னை அறிந்ததோ அறியாமையினாலோ அரசியலில் ஈடுபடுகின்றான். 

திருமறைக்கு அமைவாக துன்பப்படும், துன்புறுத்தப்படும், துயரப்படும் மக்களின் வாழ்வை பார்த்து கடவுள் அமைதி காப்பதில்லை. கடவுள் ஓர் பார்வையாளர் அல்ல,மாறாக எம் கடவுள் செயற்படுகின்ற கடவுள், எம்மத்தியில் செயலாற்றுகின்ற கடவுள். அநீதி, ஊழல், மனிதநேயமற்ற சமூக கட்டுக்களிருந்து எம்மை விடுதலை செய்யும் விடுதலையாளர். விடுதலைப்பயணத்தை படிக்கும் பொழுது ஓர் அரசியல் தலைவன், மக்களை அடிமைப்படுத்தி அவர்களில் ஒடுக்கி, நசுக்கி வாழ்ந்து வந்தான். கடவுள் இவ்

மக்களின்  வாழ்வை பார்த்து துன்பப்படுகிறார், கடவுள் தம் மக்கள் மேல் கரிசனை கொண்டவராய் அவர்களை விடுதலை செய்ய ஓர் தலைவனை தெரிவுசெய்கிறார். அரசியலிற்குள் கடவுள் ஊடுருவுகிறார்,  

"எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே, எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு,அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்". 

(விடுதலைப் பயணம் 3:7).

கடவுள்  ஓர் பார்வையாளர் அல்ல

மாறாக செயல்படும் ஆண்டவர். துன்பத்தில் தவிக்கும் மக்களை விடுவிக்க அவர் இறங்கி வருகிறார், அத்தோடு வரலாற்றில் தமது மக்களிடம் பேச, அவர்களை வழிநடத்த, அரசியல் காரியங்களில் ஈடுபட பல மனிதர்களை கடவுள் பயன்படுத்தியிருந்தார். இறைவாக்கினர்கள் இதில் விசேடமானவர்கள், கடவுளின் வாய் mouth piece of God என அழைக்கப்பட்ட இவர்கள் கடவுளின் வழிநடத்துதலினால் கடவுளின் மனதையும், விருப்பத்தையும் அறிந்தவர்களாய் மக்களிடம் பேசினர். தூய ஆவியாரின் தூண்டுதலால் மக்களுக்கு நன்மையானதை போதித்து, தவறுகளை சுட்டிக்காட்டி, எச்சரித்து வழிநடத்தினர்.  உதாரணமாக் நாபோத் என்ற மனிதனின் திராட்சை தோட்டம் ஆகாபு அரசனின் அரண்மனை அருகில் இருந்தது, ஆகாப் அரசன் அந்நிலத்தை நாபோத்திடம் கேட்டான்,ஆனால் தனது மூதாதையரின் நிலத்தை அரசனிடம் விற்க அவன் விரும்பவில்லை, இதன் காரணமாக கவலை அடைந்த அரசன் உணவருந்தாமல் கவலையோடு இருப்பதை அவதானித்த அவனது மனைவி அரசி ஈசபேல், நாபோத் மீது பொய் குற்றம் சாட்டி, அவனை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிட்டாள். அரசனும்,அரசியும் சேர்ந்து ஓர் அப்பாவியை கொன்று போட்டார்கள், கடவுள் கோபப்ட்டார், தனது ஊழியரான எலியாவினுடாக ஆகாபு அரசனோடு பேசுகிறார், நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும். அரசியல் காரியங்களில் கடவுள் செயற்பட்டதயும், அரசர்களையும்,அரசியல் தலைவர்களை எச்சரித்ததையும், தமது பணியாளர்களூடாக சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியதை நாமும் வரலாற்றில்; காணக்கூடியதாக உள்ளது. (1 அரசர்கள் 21)

ஆண்டவராகிய இயேசுவின் வாழ்வை பார்க்கும் பொழுது, இயேசுவுக்கு ஓர் சமூக அரசியல் பார்வை இருந்ததை அவரின் வார்த்தைகளிலும் செயல்களிலும் அறிகிறோம். உரோமைய ஆதிக்கத்தின் கீழ் சமுதாயத்தில் கீழ்மட்ட யூதனாக பார்க்கப்பட்ட இயேசு, சிறுவயது முதல் அரசியல், சமூக சமய, பொருளாதார, கலாச்சார ரீதியாக பல வித சவால்களையும், தடைகளையும், ஒடுக்குமுறைகளை சந்தித்து இருக்கிறார். அவ் அனுபவங்களுடாக இயேசு

சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களையும், அநீதிகளையும் கண்டு அமைதி காக்கவில்லை. மாறாக தைரியமாக சமூக அநீதிகளுக்கு எதிராக பேசினார். யூத சமுதாயத்தில் காணப்பட்ட ஆணாதிக்க சிந்தனைகளையும், ஒடுக்குமுறைகளையும்; ஏழை எளியவர்க்கு நடந்த அநியாயங்களை எதிர்த்து இயேசு கேள்வி கேட்டார்,வாதிட்டார். சமூகத்தால் வெறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட மக்களோடு இயேசு பயணித்தார்; அவர்களை தைரியப்படுத்தினார். அரசியல் லாபத்திற்காக மக்களை ஒடுக்கும் தலைவர்களை இயேசு பொது வெளியில் சாடுகிறார்,

மாற்கு 12:17க்கு அமைவாக

‘சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்றார்’. விளிம்பு நிலை மக்களின் உழைப்பை அதிகம் ஏமாற்றி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழும் அரசியல் தலைவனான எரோதை பார்த்து, ‘இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்’ என்றார். இயேசு ஓர் நீதிக்கான போராளி, அவரின் அரசியல் சிந்தனைகள் புதிய நெறியைச் சார்ந்த ஆண் மற்றும் பெண்களை உருவாக்கியது.(திருத்தூதர் பணிகள் 9:2 )      

உலக வரலாற்றை ஆராயும் போது கடவுளின் பணியாளர்கள் பலர்,கடவுளின் துணையோடு அரசியல் காரியங்களிலும்,சமூக சீர்த்திருத்தங்களிலும் ஈடுபட்டுள்ளனர். விசேடமாக William Wilberforce வில்லியம் வில்பபோர்ஸ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர், இவர் அடிமைவியாபாரத்தையும், அடிமை சந்தையையும் பலமுறைகள் முயற்சித்து 1807 முற்றாக ஒழித்தார். William Carrey  வில்லியம் காரி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, இந்தியா சமூகத்தில் காணப்பட்ட தவறான சடங்கான சதி (sati pooja) கொடுமையை முற்றாக ஒழித்தனர்,சதி என்பது ஒரு கைம்பெண் தன் இறந்த கணவரின் இறுதிச் சடங்கின் மேல் அமர்ந்து தன்னைத் உயிரோடு தியாகம் செய்வதாகும். (உயிரோடு நெருப்பில் குதித்தல், உடன் கட்டை ஏறுதல்)   

கடவுள் தமது பணியாளர்களை சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராட, வாதாட, ஒன்றாய் சேவை செய்ய அழைக்கிறார்.  

இறைபணியாளர்களாக அழைக்கப்பட்ட நாம், அநீதியான சந்தர்ப்பங்களை பார்த்து அமைதியாக இருக்க கூடாது, இயேசுவின் சீடர்களாக

நாம் சமூக அநீதிகளை வெறுத்து அதற்கு எதிராக தைரியமாக பணிசெய்ய வேண்டும். இயேசுவின் நாசரேத் அறிக்கை இவற்றையே கூறுகிறது,

‘ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் எனமுழக்கமிடவும்  ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்’. 

Luke 4: 18, 19

இக்காலப்பகுதி நம் நாட்டின் மிக தீர்க்கமான காலமாகும், எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலமாக இது அமையப்போகின்றது. அநீதியான ஊழல் நிறைந்த இவ்அரசாங்கம் சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை சிதைத்திருக்கிறது. மூன்று வேலை உணவு இல்லாமல் மக்கள் பசியால் வாடுகின்றனர். நாளாந்தம் உயரும் விலைவாசியினால் அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசியல்வாதிகள் தமது லாபத்திற்காக பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள்,அத்தியாவசியமான பொருட்கள், மருந்துவகைகள் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள், நீண்ட வரிசைகளில் வாழ்வு கழிகிறது,  இவ் அநீதிகளை கண்டும் காணாமலும் நாம் வாழமுடியாது. இயேசுவை போன்று துன்புறும் மக்களை நாம் தைரியப்படுத்தவேண்டும் ,அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெபம் மட்டும் சமூகத்தை மாற்றாது மாறாக ஜெபத்தோடு செயல் முழு சமூகத்தையும் மாற்றும் போராடும் மக்களோடு நாமும் நமது நாட்டிற்கு போராடவே இக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore ) எழுதிய கிதாஞ்சலி என்கிற கவிதைத் தொகுப்பிட்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ 1913 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இக்கவிதை தொகுப்பில்,

இறைவன் எங்கிருக்கிறான் இக்கவிதையின் வரிகளை நாம் உற்று நோக்குவோம்,

துதி பாடி, தோத்திரம் பாடி,

கையால் ஜெபமாலை உருட்டி

உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை

நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில்,

கதவுகளை மூடி, கண்களை மூடிக் கொண்டு

காரிருளில் நீ யாரைப் பூஜிக்கின்றாய்?

கண்களைத் திறந்துபார்,

உன் இறைவன், உன் முன்னிலையில் இல்லை என்பதை!

மெய்வருந்தி, இறுகிப் போன வயலை

உழவன் எங்கே, உழுது கொண்டு இருக்கிறானோ,

வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்

எங்கே கல்லுடைத்து வருகிறானோ

அங்கே உள்ளான் இறைவன்!

வெட்ட வெயிலிலும், கொட்டும் மழையிலும்

தூசி படிந்த ஆடையுடன்,உழைப்பாளி

கூடவே குடியுள்ளான் இறைவன்!

புனிதமான உன் காவி மேலங்கி

உடையை எறிந்து விட்டு புழுதி நிரம்பிய

பூமிமேல் கீழிறங்கி உழவரைப் போல்

உன் பாதங்களைப் பதித்திடு!

அங்கே உள்ளார் இறைவன் !

தியானத்தை நிறுத்தி விட்டு வெளியே வா!

தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,

அகர் பத்திகளின் நறுமணப் புகை அனைத்தையும்

புறக்கணித்து விடு! உன் ஆடைகள்

கறைபட்டுக் கந்தலானால் என்ன?

தீங்கென்ன நேரும் உனக்கு?

மெய்வருந்திப் பணிசெய்யும், உழைப்பாளியை

சந்தித்து நில் அவனருகே நீ,

நெற்றி வேர்வை நிலத்தில்

சிந்தி! இறைவனை காண்பாய் நீ,

அடித்தட்டு மக்களோடு மக்களாக,

அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மக்கள்

மதம், மொழி, இனம்,கடந்து மனிதத்துவத்திற்காய்,

வாழும் மக்கள் வாழும் இடத்தில்

இருக்கிறார் இறைவன்.   

கடைசி வரிகள் நம் நாட்டு போராட்டங்களை மனதில் வைத்து எழுதப்பட்டது, கடவுள் துன்புறும் மக்களோடு இருக்கின்றார், அவர்களோடு அவர் வாழ்கின்றார். எமது பாதங்களிலும் எம்மண் பதியட்டும், எமது மக்களின் குரல்கள் எம் காதிற்கு கேட்கட்டும், அவர்களின் அவலங்கள் எம் கண்களுக்கு தெரியட்டும்.

கடவுள் தாமே தமது இறைவாக்கு பணியை செய்ய எமக்கு அருள் புரிவராக. 

<strong>ரா. ரூபன் பிரதீப்</strong>
ரா. ரூபன் பிரதீப்

இலங்கை.