கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரல் வாழ்த்துகள்.
குருத்தோலை ஞாயிறு என்பது கிறிஸ்துஅரசர் முடிசூட்டு பெருவிழாவின் முதல்நாள் கொண்டாட்டம் ஆகும்.


இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவுக்கு அரசர், இறைவாக்கினர், ஆசாரியர் என்ற மும்மைத் திருப்பணி நிறைவிற்கான அருட்பொழிவு நடைபெறும் ஒரு நிகழ்வைக் குறித்து அகழ்வாய்வு முறைமையிலான செய்தியை அருளுரையாக சிந்திப்போம்.

பெத்தானியா ஒரு சிறு கிராமம். எருசலேம் நகருக்கு அருகில் உள்ள நகர-கிராம சூழலுடைய கிராமம். சீமோன் இயேசுவால் சுகம் பெற்றவர்களுள் ஒருவர். ஒரு பெண் இயேசுவின் அருகில் வந்தார். பெரும்பாலும் அவர் லாசருவின் சகோதரியான மரியா என்றே சொல்லப்படுகிறது.

(யோவான் 11:1-2)


அலபாஸ்டர் எனும் நறுமண தைலம். கிரேக்க மொழியில் “பிஸ்டிகொஸ்” என்பதாகும். அதன் பொருள் “உண்மையானது” அல்லது “நேர்மையானது” என்பதாகும். போலியானதோ கலப்படமானதோ அல்ல. மேலும் விலையுயர்ந்தது ஆகும். நறுமணத்தைக் காத்து வைத்திருந்த அந்த குடுவையின் முத்திரையை உடைத்தார். இயேசுவின் மீது ஊற்றினார். அடக்கம் செய்வதற்கு அடையாளமாக அருட்பொழிவு செய்ததாக பேசப்பட்டது. பொதுவாக இறந்தபின் அடக்கம் செய்யப்படும் போது ஊற்றப்பட வேண்டிய நறுமணத் தைலத்தை உயிருடன் இருக்கும் போதே ஊற்றுகின்றார். மரியாவுக்குள் இருந்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கை சோதித்தறியப்பட்டதாக உள்ளது. உயிர்த்தெழுதல் நிகழும் முன்பே உயிர்த்தெழுதலின் மீது நம்பிக்கை உடைய ஒரே நபர் மரியா தான் என்பதாக காணப்படுகிறார்.

மரியா நறுமணத் தைலத்தை இயேசுவின் மீது ஊற்றியதைக் கண்டவர்களில்/ சீடர்களில் ஒருவன் மாத்திரம் அதாவது யூதா ஸ்காரியோத்து மட்டும் அது விலையுயர்ந்தது என்றும் ($10,000 – 7.5இலட்சம் ரூபாய்) அதை வீணாக்காமல் விற்று பணமாக்கியிருக்கலாம் என்றும் கூறுகிறான். உண்மை என்னவென்றால், கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் வீணாகாது, மற்றபடி பயன்படுத்தப்படும் உலகின் பெரும்பாலான வளங்கள் உண்மையில் வீணடிக்கப்படுகின்றன.

தொடக்க முதலே யூதாஸ்காரியோத்து மனதில் பொதுவாக ஒரு எண்ணம் இருந்தது, அது திருடுகின்ற அல்லது ஏமாற்றிக் கொள்ளையிடுகின்ற செயலே ஆகும். அதாவது யூதாஸ் தொடக்க முதலே ஏழைகளின் மீது அக்கறையுடையவனாக காண்பித்து கொள்ளையிடுகின்றவனாக இருந்தான் (யோவான் 12:4-6). முணுமுணுப்பு அல்லது முறுமுறுப்பு என்பது எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்தப்படவில்லை அல்லது வேதத்தில் கடவுளால் அனுமதிக்கப்படவில்லை. மேலும் செயல்பாடுகளை மோசமாக்க, காரணம் சரியாக இல்லை.

யோவான் 12:7 திருமொழியில் நின்று பார்க்கையில் ஆண்டவர் இயேசு தாம் யார் என்பதை யூதாஸ்காரியோத்துக்கு தெளிவாக எடுத்துரைக்கிறார். மேலும் முறுமுறுப்பைக் குறித்து கேள்வி எழுப்புகிறார். அதோடு மரியாவைத் தொந்தரவு அல்லது தடை செய்ய முயற்சித்ததை தடுத்தாள்கிறார். அங்கு இருந்தவர்களுக்கு புரியாவிட்டாலும் கூட மரியாவின் செயல் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதல் மீதான நம்பிக்கையைக் காண்பித்தது.

ஏழாம் திருமொழியில் ஏழைகள் எப்பொழுதும் உங்களோடு இருக்கிறார்கள் என்கிற துயரமான, கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் ஏதேன் தோட்டத்தில் வீழ்ந்து போன பட்டறிவின் விளைவையும் அதன் அவலம் எல்லா காலங்களிலும் இருக்கிறது என்பதையும் ஆண்டவர் இயேசு முணுமுணுத்தவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

இந்த சமூகம் சமத்துவத்தையும் சகோதரத்துவ விரும்பாமல் எப்பொழுதும் ஏழை-பணக்காரன் என்ற படிநிலை அமைப்புடையதாக இருப்பதையே விரும்புகின்றது. ஆண்டவர் இயேசு தம்முடைய பார்வையில் நின்று தம்மை ஏழைகளோடு (உணவு, உடை, இருப்பிடம் இன்றி நோய், தனிமை, சிறையிருப்பு போனற நிலைகளில் இருப்பதை) ஒப்புமைப்படுத்தும் ஒரு காட்சி மத்தேயு 25:40-45 பகுதியில் இடம்பெற்றுள்ளது.


எட்டாம் திருமொழியில் அந்த பெண் (மரியா) தன்னால் இயன்றதை செய்தார் என்பது அப்பெண் தூயஆவியாரின் தூண்டுதல் பெற்று இந்த அருட்பொழிவு நிகழ்வைச் செய்கிறார். ஆண்டவர் இயேசுவின் உடல் பலரது பாவங்களுக்கு கழுவாயாகவும், பலியாகவும் கடவுளால் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது (எபிரேயர் 10:5).

ஆண்டவர் இயேசு இங்கே ஒரு முன்னறிவிப்பைக் கொடுக்கிறார். இந்த நற்செய்தி முழு உலகின் கடையெல்லை வரை செல்லும். அப்பொழுதெல்லாம் இந்நிகழ்வு அப்பெண்ணின் செயலுடன் தொடர்புடையதாய் இருப்பதால் அது ஒருபோதும் மறக்கப்படுவதில்லை என்ற ஆற்றல்மிகு செய்தியை முன்னறிவிக்கிறார்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே!
ஆண்டவர் இயேசுவின் வாழ்வு முழு மானுடத்தின் மீட்புக்கான கழுவாய் ஆகும். இத்தகைய நிலையில் ஆண்டவர் இயேசுவினிடத்தில் எதிர்ப்பார்ப்புகளோடு வந்த மக்கள் கூட்டத்தில் ஆண்டவர்க்காக விலையேறப் பெற்ற நறுமணத் தைலத்தைக் கொண்டு வந்து அவரை அருட்பொழிவு செய்தவர் இந்த மரியா மட்டுமே. இது செல்வத்தை ஆண்டவர்க்காகப் படைக்க வேண்டும், தனிமனித உள்ளத்தைப் படைக்க வேண்டும். உயிர்த்தெழுதலில் நம்பிக்கை உடையவராய் இருக்க வேண்டும் என்பதை இச்செயல் உணர்த்துகிறது.
உலகத்தின் பதவி, அதிகாரம், ஆசைகள், இச்சைகளுக்காக நம் செல்வத்தை செலவிடுகிறோம். ஆனால் ஆண்டவருக்காக ஒன்றைச் செய்ய அழைக்கப்படுகின்ற போது முறுமுறுக்கின்ற மக்களாகவே இருக்கின்றோம். நம்முடைய பாவங்களை அறிக்கையிடுகின்ற போது அவர் நம்மை மகிழ்ச்சி எனும் தைலத்தினால் அருட்பொழிவு செய்ய ஆண்டவர் திருவுளம் கொண்டவராக இருக்கின்றார்.


அரசராக வந்திருக்கும் ஆண்டவரைக் கனப்படுத்தி நம்மை நாம் ஒப்புவிப்போம். தூய ஆவியார் தாமே ஆற்றல் வழங்கிக் காப்பாராக.

மூவொரு கடவுளின் அன்பும் அருளும் ஆசியும் நம்மை நிறைத்து காப்பதாக.

<strong>டால்டன் மனாசே</strong>,
டால்டன் மனாசே,

அருட்பணியாளர், எழுத்தாளர்,
ஆற்காடு லுத்தரன் திருச்சபை, இந்தியா.