முழக்கம் 01

கிறிஸ்தவத்தில் பாகுபாடு, பிரிவினைகள் இல்லை என்கின்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் எமது இந்திய, இலங்கை கிறிஸ்தவ திருச்சபைகளிலும், அதன் நிறுவனங்களிலும், தனிமனித வாழ்விலும், சாதியம் எனும் எதிர் கிறிஸ்தவ கருத்தியல் பரவலாக விரவி கிடப்பது நிதர்சனமான உண்மை.

கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பது கிடையாது?

என்ற கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்கவேண்டும்
என்றால் தயவுசெய்து கீழ்கண்ட கேள்விகளுக்கு உண்மையான மறுமொழியை நீங்கள் உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

  • சாதிக்கொரு ஆலயம் உங்கள் ஊரில் இருக்கிறதா?
  • உங்கள் ஆலயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் திருச்சபையின் நிர்வாக பொறுப்புகளில் அங்கம் வகிக்கிறார்களா?
  • எத்தனை ஒடுக்கப்பட்ட ஆயர்களை உங்கள் திருச்சபை உருவாகியுள்ளது
  • உங்கள் குடும்பத்தில் திருமணத்தில் சாதி பார்க்கப்படுவதுண்டா ?
  • உங்கள் திருச்சபையை சார்ந்த ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய, கூலி வேலைசெய்யும் மக்கள் வீட்டில் அன்புறவோடு நீங்கள் தேநீர் குடித்து, உணவருந்தியதுண்டா?

இதை போல பலகேள்விகளை எம்மால் எழுப்ப முடியும்.

கிறிஸ்து பிறப்பதற்கு குறைந்தது 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து சட்டத்தின் அதிகாரபூர்வமான புத்தகமான மனுஸ்மிருதி, ‘சமூக ஒழுங்கின் அடிப்படையாக சாதிய அமைப்பை ஒப்புக்கொண்டு நியாயப்படுத்துகிறது’. சாதி அமைப்பு இந்துக்களை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கிறது – பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்.
படைப்பின் இந்து தெய்வமான பிரம்மாவிடமிருந்து இந்தக்குழுக்கள் தோன்றியதாக பலர் நம்புகிறார்கள்.


படிநிலையின் உச்சியில் பிராமணர்கள் இருந்தனர், அவர்கள் முக்கியமாக ஆசிரியர்கள், அறிவுஜீவிகள், பிரம்மாவின் தலையிலிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. பின்னர் சத்திரியர்கள் எனும் போர்வீரர்கள், ஆட்சியாளர்கள், பிரம்மாவின் கைகளில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவது வைசியர்கள் பிரம்மாவின் தொடைகளிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள், இவர்கள் வணிகர்களாக இருந்தனர் . அந்தக் குவியலின் அடியில் பிரம்மாவின் காலடியில் இருந்து வந்த சூத்திரர்கள் எல்லா அடிமை வேலைகளையும் செய்து வந்தனர்.

இந்து சாதி அமைப்புக்குள் அடங்காதத்தோராக பஞ்சமர், சிறுபான்மை சமூகத்து மக்கள், தலித்துகள், தீண்டத்தகாதவர்கள் இருந்தனர். அடக்குமுறையை எதிர்ப்பவர்களே இக்குழுவினர். ஆக சாதியம் என்பது இந்துசமய கோட்பாடு.

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தூய யோவான் 17: 21 எனும் கிறித்துவின் திருமொழிகளுக்கு ஏற்ப திருமுழுக்கின் வழியாக பழைய பாவ இயல்புகள் களையப்பட்டு புதிதாக்கப்பட்டு கிறிஸ்துவின் ஒரு குடும்ப திருச்சபையில் இணைக்கப்பட்ட நாம், எதிர் கிறித்தவ கருத்தியலும், விக்கிரக ஆராதனையுமான சாதியை உயர்த்திப் பிடிப்பது எவ்வகையில் நியாயம் ?

சாதியம் கிறிஸ்துவுக்கு எதிரான கோட்பாடு 
என்பதை உரக்க சொல்லுவோம் !!

சாதிய மறுப்பு கிறிஸ்தவத்தின் 
நிபந்தனை உலகறிய செய்வோம் !!

#திருச்சபையில்சாதியை ஒழிப்போம்

ஜெபசிங் சாமுவேல்
ஜெபசிங் சாமுவேல்

அருட்பணியாளர், இலங்கை.

One thought on “சாதியம்= விக்கிரக ஆராதனை”
  1. இது உன்மை தான் எல்லாபகுதிகளிலும் இதுபோன்ற சாதிய பாகுபாடு உள்ளது..

Comments are closed.