(மத்தேயு 26:47-56, மாற்கு 14:43-59, லூக்கா 22:47-53, யோவான் 18:3-12)

காட்டிக்கொடுப்பது என்பது பல்வேறு சூழலில் பல்வேறு பொருளைக் கொடுக்கும். முகவரிக்குச் சரியான ஆளைச் சுட்டிக்காட்டிக் கொடுப்பது என்பது பெரும்பாலான நேரத்தில் நல்லதொரு பணிதான். ஆனால் சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்து பழிவாங்கத் துடிக்கும் ஒரு கும்பலுக்கு தன்னார்வத்துடன் சென்று ‘நீங்கள் விரும்பும் ஆளை நான் காட்டிக்கொடுக்கிறேன்’ எனப் பேரம் பேசி பணம்பெறும் ஒரு பச்சைத் துரோகத்தை நாம் இன்று திருவிவிலியம் வாயிலாகக் காண இருக்கிறோம். காட்டிக் கொடுக்கப்படும் அனுபவம் என்பது புதிய அனுபவம் அல்ல. திருவிவிலியத்திற்கு முன்பும் பின்பும் நடந்து வரும் துரோகச் செயல்தான். இருப்பினும் இந்த காட்டிக்கொடுக்கப்படல் எனும் அனுபவத்தை இயேசுநாதர் மட்டுமின்றி இன்றைய அனைத்து நீதிமான்களும் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வைக் காணலாம். இதன் மூலம் இன்று தொடர்ந்து இயேசுநாதரும் காட்டிக் கொடுக்கப்படுகிறார்; சிலுவையில் அறையப்படுகிறார் என்பதை புரியமுடியும்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தலைமைக் குருக்கள் வேத அறிஞர்கள் 'இயேசுவைப் பிடித்து கைது பண்ணவேண்டும் அவரைச் சிறையிலிட வேண்டும்' எனக் கடுமையாக முயன்றனர். மறைமுகமாக பலரை ஏவினர். உரோம காவலர்களையும், கோவில் காவலர்களையும்கூட தூண்டி விட்டனர். இருப்பினும் இயேசுநாதருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் மக்கள் கூட்டம் அவரை நெருங்க முடியாதவாறு பாதுகாத்தன. இச்சூழலில் இயேசுவோடு நெருங்கிய சீடருள் மெத்த படித்தவன் ஒருவன், 'பேராசைக்காரன்' என பெயர்பெற்ற யூதாஸ் காரியோத் என்பவர் இயேசுவின் வாழ்வில் விளையாடி இலாபம் பெற நினைத்தான். திட்டமிட்டான், எதிரிகளைச் சந்தித்தான், தீவிரமாகச் செயலில் இறங்கினான். இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். 
  1. பணத்திற்காக காட்டிக்கொடுத்தவர் (மத்.26:15)
    இயேசுநாதரோடு நட்புறவோடு வாழ்ந்த ஒருவர் இயேசுவின் வாழ்விலும், நோக்கிலும் மூன்று வருடங்களாக உடன்படாமலே வாழ்ந்து வந்துள்ளார் என்பதுதான் பெரிய ஆச்சரியம். மிகத் திறமைமிக்க, படைப்பாற்றல் கொண்ட, செல்வாக்குள்ள ஒரு குழுவில் உறுப்பினராக இருக்கும் யூதாசுக்கு அதனால் தனக்கு ஏதாவது இலாபம் உண்டா என்று தனக்குத்தானே அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இயேசுவின் வழியும், வாய்மையும், வாழ்வும் தன் பொருளாதாரப் பெருக்கத்திற்கு எந்த பயனுமில்லை’ எனக் கண்டுகொண்ட யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க நினைத்ததில் எந்த வியப்பும் இல்லை. எனவே இயேசுவின் வழியாக ஆதாயம்பெறத் துடித்துக் கொண்டிருந்தவருக்கு இயேசுநாதரின் எதிரிகள்தான் அவர் நினைவுக்கு வந்தது. அவர்களிடம் சென்றான். தானாக முன்வந்து அவரைக் காட்டிக்கொடுக்கத் தயார் எனக்கூறுகிறான். இது அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பும்கூட. ஏனெனில் இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரே தன்னார்வத்துடன் வருவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் மகிழ்ந்தனர் (லூக்.22:4-5). அவர்கள் மகிழ்ந்து பணம் கொடுக்க ஒத்துக்கொண்டனர். பணத்திற்காக யோசேப்பை விற்ற சகோதரர்களும் இங்கு நினைவு கூறப்பட வேண்டியவர்களே. ஒப்படைப்பு இல்லாத வாழ்வு, சீரிய நோக்கு இல்லாத வாழ்வு, பிடிப்பற்ற பற்றுறுதி இல்லாத வாழ்வு ஆகிய அனைத்தும் எப்போதும் பணத்தை நோக்கியே தாவும்.
    நம்முடைய கிறித்தவ வாழ்வில் இயேசுநாதரின் வாழ்விலும், வழியிலும், வாய்மையிலும் உடன்பாடு இருப்பது போன்றுக் காட்டிக்கொள்ள முனைகிறோம். ஆனால் நாம் நினைத்தவாறு ஆசீர்வாதங்கள் பெறாதபோது, நினைத்த வளர்ச்சி நம் குடும்பத்தில் இல்லாதபோது, நம் ஒப்படைப்புகளை காட்டிக் கொடுத்து காசு சம்பாதிக்க, குறுக்கு வழியில் செல்ல நம்மை ஆயத்தப்படுத்துகிறோம். எந்த உறவு இலாபமாக உள்ளதோ அதையே கெட்டியாகப் பிடிக்க தயாராகிரோம். சிலுவைப்பாடுகள் நிறைந்த இயேசுநாதரைவிட, செல்வாக்குமிக்க ஒரு பணக்கார இயேசுவையே நாம் எதிர்பார்க்கிறோம். அப்படிப்பட்ட சம்பாத்தியத்தினை ஒரு சிலை வணக்கமாகவே பார்க்க முடியும். இயேசுவை காட்டிக் கொடுத்து பணத்தைச் சிலையாகப் பணிய நம்மையறியாமலே தூண்டப்படுகிறோம். இந்தச் சோதனைகள் தெளிவாக உள்ளபூர்வமாக நிராகரிக்கப்படாதவரை இயேசுவைப் பின்பற்றுதல் இயலாது.
  2. இறைவேண்டல் நேரத்தில் காட்டிக்கொடுத்தவர் (யோ.18:1-2)
    இயேசுவும், சீடரும் கெதரோன் நீரோடைக்கு அப்பால் அடிக்கடி செல்வதுண்டு. யூதாசுக்கும் இந்த இடம் பழக்கமான ஒன்றுதான். இறைவேண்டல் நேரமும், கடவுளோடு தியானிக்கும் நேரமும் ஆண்டவர் இயேசுவுக்கு மிக முக்கியம். இப்பகுதி இரத்தம் வியர்வையாகச் சிந்தும் அளவிற்கு அவரது இறைவேண்டல் அமைந்த இடம். இந்த இடத்தை யூதாஸ் தன் சதித்திட்டத்திற்காக தெரிவு செய்தது மட்டுமின்றி இறைவேண்டலின் நேரத்தையும்கூட காசு சம்பாதிக்கக் காட்டிக்கொடுக்கத் தெரிந்த ஒரு சீடராகிவிட்டார். கடவுளோடு உறவாடும் நேரம் ஒரு கள்ளம் கபடமற்ற நேரம். உலகியல் வாழ்வை சிந்திக்காத நேரம். அமைதியான நேரம். ஆனால் இந்த நேரம்தான் சதித்திட்டத்திற்காக தெரிந்தெடுக்கப்பட்ட வசதியான நேரமாக அமைந்தது. ஏனெனில் அப்படிப்பட்ட நேரங்களில் பெரிய தடைகள் வர வாய்ப்பில்லை என்றுதான் யூதாஸ் கணித்திருக்கக்கூடும். காட்டிக்கொடுக்கத் திட்டமிட்ட நேரம், இறைவேண்டலின் நேரம் என்பது எத்தனை வன்மம் நிறைந்த திட்டமாக இருந்தது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. எந்த இறைவேண்டலை இயேசு கிறித்து சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்தாரோ அந்த இறைவேண்டலின் நேரத்தை இயேசுவின் எதிரி சிந்தனையாளருக்கு அவர் சீடனான யூதாஸ் விலை பேசத் தயங்கவில்லை. இது போன்றத் துரோகச் செயல்கள் இன்றும் நம்மிடையே தொடர்கின்றன.

இன்றும் தேவாலயங்களுக்குச் செல்லும் நேரங்களில், வழிபாடு முடித்தபின் இதுபோன்ற துரோகச் செயல்களும், வன்முறைகளும், வழக்குகளும் இன்றும் தொடரத்தான் செய்கின்றன. சில நல்ல ஆயர்கள் ஆயர் உடையுடன் இருப்பதால் இது போன்ற வன்முறைகளைத் தாமே தாங்கிக் கொள்கின்றனர். ஆயர் உடையில் இல்லாமலிருக்கும்போது தாக்குதல் நடத்துவது இயலாது என்பது நமக்குத் தெரியும். திருச்சபை நேரத்தை, ஆன்மீக நேரத்தை வன்முறைக்காக பயன்படுத்துவோர் இன்று அதிகரித்து வருகின்றனர். இதர சமய வெறியர்களும் இதில் உள்ளடக்கம். யூதாஸ் இறைவேண்டல் நேரத்தை ஒரு யுக்தியாகவே தெரிந்தெடுத்தார். ஆன்மீக நேரத்தைப் பலவீனமான நேரமாகவே அவர் கணித்துவிட்டார் போலும்!

  1. பாசத்தைப் பொழிந்து காட்டிக்கொடுத்தவர் (மத்.26:49-50)
    யூதாஸ் இறைவேண்டல் நேரத்தில் பழிவாங்கத் திட்டமிட்டிருந்தான். ‘இரபீ வாழ்க’ எனக்கூறி முத்தமிட்டான். இவன் காசுக்காகவே முத்தமிட்டு வாழ்க என்றான். உண்மையில் ‘ஒழிக’ என்பதற்காகவே முத்தமிட்டான். இது போன்றோரின் உதடுகளில் பிறக்கும் வாழ்த்துக்கள், இதயத்துக்குத் தொடர்பின்றி போய்விடுகிறது. முத்தம் என்பது உணர்வுப் பூர்வமான ஒர் அடையாளம். எல்லா வயதினரும் பயன்படுத்தும் அன்பின் அடையாளம். முதிர்ச்சியான ஓர் அன்பின் அடையாளம். இந்த அன்பின் அடையாளம் இங்கு துரோகத்தின் குறியீடாக மாற்றப்படுகிறது. இஸ்ரயேல் நாட்டில் முத்தம் என்ற பண்பாடு உணர்வுபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு பரவலாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. பவுலடிகளார் தம் எழுத்துக்களில் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துக்கள் எனவும் (1கொரி.16:20, உரோ.16:16), பேதுரு, அன்பின் முத்தத்தோடு வாழ்த்துக்கள் எனவும் கூறுகின்றார் (1பேது.5:14).

இயேசுநாதரின் வாழ்வில்கூட அன்பின் முத்தங்கள் அடிக்கடி பரிமாறப்பட்டன. பாவியானப் பெண்மணி இயேசுவின் காலில் ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் (லூக்.7:45) எனவும், அவர் தமக்கு விருந்து கொடுத்தவரைப் பார்த்து ‘நீ என்னை முத்தமிடவில்லை அவள் என்னை ஓயாமல் முத்தமிட்டாள்’ என இயேசு கூறியதிலிருந்து முத்தமிடும் பண்பாடு யூதர்களின் நடுவே வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று எனப்புரிகிறது. விவிலியம் முழுவதும் இந்தப் பண்பாட்டைப் பார்க்கலாம். ஆனால் இம்முத்தத்தை துரோகச் செயலுக்காக பயன்படுத்திய வரலாறு யூதாசிடமிருந்தே ஆரம்பிக்கிறது. ஆண்டவராகிய இயேசுவும் இம்முத்தத்தினை ஒரு துரோகச் செயலாகப் பார்க்காமல், ‘நண்பனே எதற்காக வந்துள்ளாய்?’ என்கிறார் (லூக்.26:49-50). முத்தத்தை ஒருவர் கொச்சைப்படுத்துவார் என இயேசுநாதர் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் மத்தேயு ஆசிரியரின் குறிப்புப்படி, அவர் மிக விரைவில் புரிந்துகொண்டு, ‘முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்?’ என வினவினார்.

இன்றும் நம்மிடையே அளவுக்கு மிஞ்சி புகழ்ந்து, வாழ்த்திப் பேசும் வழக்கம் உள்ளது. அப்படிப் புகழுபவர்கள் அனைவரும் திறந்த மனதோடு செய்வதில்லை. பொடிவைத்து பேசுவதும், பாசாங்கு செய்வதும், அவர்கள் அகன்றபின், அவர் முதுகில் குத்துவதும் கொடிய வார்த்தைகளால் இகழுவதும், காட்டிக் கொடுப்பதும் போன்றவைகளைத் தந்திரமாகச் செய்கின்றனர். இன்றும் மேற்கு நாடுகளில் நடிகைகளை வாடகைக்கு அமர்த்தி தேர்தல் காலங்களில் வாக்காளர்களை முத்தமிட்டு தம் கட்சியினருக்கு வாக்களிக்கச் செய்கின்றனர். தங்களுக்குச் சாதகமானச் செயல்களைச் செய்ய பிறரை நம்பவைக்கின்றனர். தம்முடைய வார்த்தைகளுக்கும் செயல் பாட்டுக்கும் தொடர்பு இல்லாமலே போய்விடுபரைக் குறித்து பலர் கவலைப் படுவதில்லை. தந்திரமாகப் பேசி நம் கடமைகளை நிறைவேற்றி காலம் கடத்திவிடுகிறோம். மனசாட்சியைக் கொன்று, குழிதோண்டி புதைத்து விடுகிறோம். பல நேரங்களில் யூதாசின் ஆவி நம்மில் பலரிடம் குடிகொண்டுள்ளதால் பாசத்தைக்காட்டி, முத்தமிட்டு காட்டிக்கொடுக்கவும், இலாபமடையவும் தயங்குவதில்லை. நம் வார்த்தைகளில் உண்மை இல்லாவிடில் மாய்மால யூதாசின் ஆவியை அணிந்துள்ளோம் என்றுதான் பொருள்.

முடிவுரை

முதல் மூன்று நற்செய்தி நூற்களும், யூதாஸ் இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்தார் எனக் கூறினாலும், யோவான் நற்செய்தி நூல் ஆசிரியர் ‘இயேசுவைக் காட்டிக்கொடுக்க முடியவில்லை என்கிறார். மாறாக இயேசுதான் தன்னார்வமாக யூதாசின் முயற்சிக்கு தன்னை இருமுறை ஒப்படைத்தார்’ எனக்கூறுவதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் (யோ.18:4-9). ஆண்டவரின் உதவியின்றி யாரும் ஆண்டவரைக் காட்டிக்கொடுக்க முடியாது என்ற உண்மையை வேறு கோணத்தில் காணலாம். யூதாசின் மேல் ஆண்டவருக்கு கடைசிவரை கரிசனை இருந்தது. ஒரு பாவிகூட கெட்டுவிடக்கூடாது என்பதில் அவர் குறியாக இருந்திருக்கலாம்.

காட்டிக்கொடுத்தல் என்றப் பண்பை இன்று பலரும் அணிந்திருக்கின்றனர். தேர்தல் நேரங்களில் நம்பியவர்களை பலர் எளிதில் ஏமாற்றிவிடுவர். வெளிப்படையாக பேசுபவர்கள் சில நேரங்களில் வெறுப்புடையோர் போன்று பிறருக்குக் காணப்படுவர். ஆனால் இனிமையாக பேசுபவர்கள்தான் எளிதில் இதுபோன்ற காட்டிக்கொடுத்தலைச் செய்துவிட முடியும். நம்பிக்கைக்கு உரியவர்களாக காணப்படுபவர்கள் தமது பதவிக்காக, உயர்வுக்காக, பணத்துக்காக காட்டிக்கொடுப்பதுதான் உச்சகட்டத் துரோகம். கிறித்தவ வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் அறைகூவலும் இவைகள்தான்.

நம் கிறித்தவ வாழ்வில் விழித்திருக்க வேண்டிய நேரத்தில் தூங்குதல், பாதுகாக்கவேண்டிய நேரத்தில் அநியாயமாக அபகரிப்பது, துன்புற வேண்டிய நேரத்தில் ஓடி ஒளிந்துகொள்ளல், கூட்டொருமைப்பாட்டுடன் துணிந்து நிற்க வேண்டிய நேரத்தில் மறுதலித்தல் போன்ற அனுபவங்களை இயேசுவும் சிலுவை வழியாய் தாங்கினார். நாமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தால்தான் பல சிலுவைகளைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில் இயேசுநாதரின் தோழமையைவிட, யூதாசின் தோழமையையே நாம் தெரிந்தெடுக்கிறோம் என்றுதான் பொருள். ‘யூதாசே முத்தத்தினாலேயோ என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்? என்ற இயேசுவின் குரல் இன்னும் நம்மிடம் தொடர்ந்து கேட்கிறது.

சாலமன் விக்டஸ்,
சாலமன் விக்டஸ்,

அருட்பணியாளர்
இறையியலாளர், இந்தியா.