தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய்,

இல்லாட்டி மாடு மேய்க்க போடா……..
நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற?
நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல,

இங்க வந்து என் உயிர எடுக்காதீங்கடா
என கோபமாக கத்தினார் ஆசிரியர்……

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?
தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?

இவ்வார்த்தைகள் மணியின் மனதை துளைத்துகொண்டே இருந்தது, தனது நண்பர்கள் முன்னே தன்னை ஆசிரியர் இவ்வாறு பேசியது

அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மனக்கஷ்டத்தையும், அவமானத்தையும் அடக்கிக்கொண்டு சகஜமாக தனது கல்வி காரியங்களில் ஈடுபட முயற்சித்தான்.

மலையகத்தில் கல்வி கற்ற,கல்வி கற்கும் நிறைய மாணவர்களுக்கு இக்கேள்வி ஓர் புதிய கேள்வி அல்ல, தனது பெற்றோர் படும் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது வெளியே வர துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் இவ் அனுபவங்களை தாண்டி வந்திருப்பார்கள். கல்வியின் மூலமே எமக்கு எதிர்காலம் உண்டு என்பதனை உணர்த்த மாணவர்கள், பல தடைகளை தாண்டி இன்று மலையகத்தில் கஷ்டப்பட்டு படிக்கிறார்கள். காலையில் பாடசாலையிலும் மாலையில் தோட்டத்திலும், கடைகளில் வேலை செய்தும் தமது கனவை அடைய முயற்சிக்கிறார்கள்.

Paintings by Jebasingh Samuvel.


யார் இந்த தோட்டக்காட்டு மக்கள் ?

காட்டை தோட்டமாக்கி அத்தோட்டத்தினுடாக நம் நாட்டை உலகளவில் முன்னிறுத்திய உழைப்பாளர்களே இம்மக்கள். இலங்கை தேயிலைக்கு உலக சந்தையில் தனி பெயரை பெற்றுக் கொடுக்க காரணமானவர்கள் இவர்களே. தமது வியர்வையாலும், ரத்தத்தாலும், உழைப்பாலும் மலைகளை குடைந்து பாறைகளை உடைத்து ரயில் பாதைகளையும், போக்குவரத்து பாதைகளை உருவாக்கியவர்கள் இம்மக்கள். பசப்பு வார்த்தைகளாலும் பொய் வாக்குறுதிகளினாலும் வஞ்சிக்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டில் உழைக்கும் வர்க்கமே இம்மக்கள்.

உழைக்கும் அடித்தட்டு மக்களை நாம் வஞ்சிக்க கூடாது, அடிமைத்தனத்தாலும் திட்டமிட்ட சூழ்ச்சிகளினாலும் இவர்களை கல்வியில் வளர விடக்கூடாது என இருளில் தள்ளப்பட்ட கொடுமைகள் வரலாற்றில் அரங்கேறியுள்ளன.

”தோட்டக்காட்டு பயலே, கள்ளத்தோணி” போன்ற சாதிய வசைச்சொற்கள் மாணவர்களின் மனதை அதிகம் காயப்படுத்தி மனோரீதியாகவும்

அவர்களை பாதிக்கிறது. கல்வி அனைவருக்கும் சமம், நீ மட்டும் தான் படிக்க வேண்டும், நீ படிக்க கூடாது என யாரும் ஒருவர் மற்றவரை இங்கே ஒடுக்க முடியாது. ஒடுக்கிய, ஒதுக்கிய காலமும் இனி இங்கு நிலை.

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்’ என்று முழக்கமிட்ட அம்பேத்கர், கல்வியையே முதன்மைப்படுத்தினார். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நீதியையும், அறநெறிகளையும் உருவாக்கக்கூடியது கல்வி என்றழைத்தார். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மனிதர்களை வகைப்படுத்தும் சமூகத்தையெல்லாம் கல்வியின் மூலமே, விழுமியங்களை மதிக்கும் உயர்ந்த சமூகமாக மாற்ற முடியும் என முழக்கமிட்டார்.குலத்தொழில் வழக்கத்தை மாற்றும் செயல் வடிவமாக கல்வியை உருவகித்தார். ஆகவேதான், “ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பித்துத் தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தன்னுடைய உரிமைக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவது கல்வி” என்றார்.

மலையக சமூகம் இன்னும் மாறவேண்டும், இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு மற்றும் கல்வியினுடாகவே வாழ்வை ஜெயிக்கலாம் என்பதனை இச்சந்ததியர் புரிந்து கொள்ள வேண்டும்.வேதனைகளை சாதனையாக மாற்ற வேண்டும் என்ற வாழ்வின் ஓட்டத்தில், மணி ஓட ஆரம்பிக்கிறான். விடா முயற்சியினால் வாழ்வில் வென்றவர்களை மனதில் வைத்துக் கொண்டு அனுதினமும் தீவிர முயற்சியில் கல்வி கற்கிறான்.

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு? என அவமானப்படுத்தப்பட்ட மணி, பாடசாலைக்கு தயாராகிறான்…மாணவனாக அல்ல ஆசிரியராக…
வானொலியில் மனிதன் பட பாடல் இவ்வாறு பாடுகிறது,


முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

ஆயிரம் தடைகளை
உன் முன்னே காலம் இன்று
குவித்தாலும் ஆயிரம் பொய்களை
ஒன்றாய் சோ்ந்து உன்னை
பின்னால் இழுத்தாலும்

முன் செல்லடா
ஓகே முன் செல்லடா
முன் செல்லடா யே
முன் செல்லடா

முன் செல்லடா
முன்னே செல்லடா

இது ஒரு உண்மைச் சம்பவம்

ரூபன் பிரதீப்
ரூபன் பிரதீப்

அருட்பணியாளர்,
இலங்கை திருச்சபை.