29 ஜுன் 2022
அப்போஸ்தலரும் இரத்த சாட்சியுமாகிய பேதுரு
மத்தேயு 16:13-19

• இன்று நாம் திருத்தூதுவராகிய பேதுருவின் வாழ்விற்கும் பணிக்கும் கடவுளுக்கும் நன்றி செலுத்துகின்றோம். இவர் பெயர்மாற்றம் பெற்று இயேசுவின் சீடனாக பணியாற்றி கி.பி.64ம் ஆண்டளவில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார். இயேசுவின் மரணத்தை அடுத்து இவரே திருச்சபையின் தலைவராகவும் காணப்பட்டார்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (எரேமியா 16:16-21) கடவுளின் அழைப்பைப் பற்றி எரேமியா இறைவாக்கினர் கூறுகின்றார். இங்கு பேதுருவும் மனிதர்களைப் பிடிக்கவே இயேசுவினால் அழைக்கப்டுகின்றார். அதாவது, கடவுளின் அழைப்பு தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கிய அழைப்பாகும்.

• நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 16:13-19) பிலிப்பு செசரியா பட்டணத்தில் ஆண்டவர் இயேசு தன்னை யாரென நீங்கள் கூறுகிறீர்கள் எனக் கேட்டப்போது பேதுரு நீர் ஜீவனுள்ள கடவுளுடைய குமாரனாகிய கிறிஸ்து எனக் கூறுகின்றார். இதன்மூலம், இயேசுவை மெசியா என அறிக்கையிட்டார். அத்துடன், இயேசுவின் மரணத்திற்கான காரணத்தை பெந்தேகோஸ்தே நாளில் பகிரங்கமாக அறிக்கையிட்டார் (அப்போஸ்தலர் 2:23-38). அத்துடன், கி.பி.49ல் எருசலேம் பொதுச்சங்கத்தில் திருச்சபை திறந்த மனதுள்ளதாக அனைவரையும் உள்வாங்கும் தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார் (அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகள் 15:1-20). மேலும், இவர் புதியவைகளைக் கற்றுக் கொள்ளவும் மனமாற்றமடையவும் தயங்கவில்லை (அப்போஸ்தலர் 10:34-43)

• பேதுரு, தன்னுடைய வாழ்வைப் போன்று வாசகர்களும் நல்நடத்தை உள்ளவர்களாக வாழ வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றார் (2 பேதுரு 3:14-18).