இலங்கை மலையக மக்களில் ஒருவராக இயேசு

19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட பொருளாதார அமைப்பில் சிக்குண்ட உழைக்கும் மக்கள் பண்ணையார் மற்றும் ஜமீன்தார்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் வேலை செய்தனர். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் சுரண்டப்பட்ட மக்களாய் உரிமையற்ற சமூகமாய் இவர்கள் காணப்பட்டனர், ‘பஞ்சம்,பசி, கடன், குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலை, சாதிக்கொடுமை, சுரண்டல், கடுமையான உழைப்பு, மன உளைச்சல், சுதந்திரமின்மை, தண்டனைகள்,பிள்ளைகளும் அடிமைகளாக நடத்தப்படல், உழைப்பவர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படல், குடும்ப பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம்’ போன்ற பலவித ஆதிக்க காரணங்களால் இவர்கள் நாளுக்கு நாள் கொடுமை படுத்தப்பட்டனர்.

எப்படியாவது இந்த அந்தகாரமான பாதாளத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஏங்கிய மக்களுக்கு கிடைத்த வெளிச்சமே, ”கண்டிச்சீமையிலே பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கின்றன, தேங்காயும், மாசியும் மண்ணில் விளைகின்றது. தேனும், தினை மாவும், பருப்பும் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கிறது. யார் வேண்டுமானாலும் அவற்றை அள்ளிக் கொள்ளலாம், அதிகமான வேலை வாய்ப்புகள் அங்கு இருக்கின்றன, சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழலாம். தேவையான பணத்தை சம்பாதித்த பிறகு ஊர்களுக்கு போகலாம்; கடனை கட்டலாம், நகைகள் செய்யலாம், சொந்த காணி வாங்கலாம், மரியாதையாக சொந்த ஊரில் வாழலாம்” போன்ற வாக்குறுதிகள்; ஏக்கத்தில் இருந்த மக்களுக்கு ஓர் மீள் நம்பிக்கையை கொடுத்தது. எனினும், ‘கொதிக்கும் பானையில் இருந்து நெருப்புக்குள் குதித்த கதையாய்’ இவை நடைபெறும் என்று எவரும் நினைக்கவில்லை. வாழ்க்கையே மாறிப் போகும் என தம் பயணத்தை ஆரம்பித்த மனிதர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. எல்லா பிரச்சனைகளையும் வெல்லலாம் என உற்சாகத்தோடு வந்தவர்கள், உருகுலைத்து போனார்கள். ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம் எங்கு போனாலும் ஏமாற்றம் நிழலை போல இவர்களை துரத்தியது.

200 ஆண்டுகள் கடந்தும்; சமுதாயத்திலும், நாட்டிலும் ஓரங்கட்டப்பட்டவர்ககளாவும், மறக்கப்பட்டவர்களாகவுமே மலையக மக்கள் பார்க்கப்படுகின்றனர். அரசியல், பொருளாதார, சமூக, சமய, கலாச்சார, ரீதியாக ஒடுக்கப்பட்டு இன்னும் லயன் காம்புராக்களில் வாழும் கூலிகளாகவே இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களே சமூகத்தின் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மக்கள்.இப்பின்னணியில் இயேசுவின் வாழ்வை பார்க்கும் பொழுது, இயேசுவும் இவர்களில் ஒருவர் என நாம் அறிந்து கொள்கிறோம்.

இயேசுவும் இவர்களில் ஒருவர் தான். (Life of the Margins) விளிம்பு நிலை வாழ்வு இயேசுவுக்கு புதிதான ஒன்று அல்ல, ஏனெனில் அவரும் அவ்வாறான ஒரு சமூகத்திலேயே வாழ்ந்து வளர்ந்தார். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த இயேசு, சமூகத்திலே ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களோடு பழகினார் அவர்களோடே வாழ்ந்தார். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மறைக்கப்பட்ட விளிம்புநிலை மக்களோடே இயேசு தனது பணியை ஆரம்பித்தார் (யோவான் 4:16-22).

பாவிகளின் நண்பன் என்று பரவலாக அழைக்கப்பட்ட இயேசு (மாற்கு 2:13-17), சமூகத்தின் பார்வையில் தீயவர்கள், அசுத்தமானவர்கள், பாவிகள் என ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள், வரி வசூலிப்பவர், நோயாளிகள், மீனவர்கள், சாதாரண கூலி தொழில் செய்யும் தொழிலாளர்கள், ஏழைகள், சமூகத்தால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்கள்” போன்ற அனேகரோடு அன்பாகவும், பண்பாகவும், சமமாகவும் பாகுபாடுகள் இன்றியும் பழகினார்.

(லூக்கா 19;1-10,யோவான் 4 , மத்தேயு 4:18-21, மத்தேயு 8:1-16, மாற்கு 1:21-34, மாற்கு :10-13-16)

எந்நாளும் ஒதுக்கப்பட்ட வாழ்வு; வாழ்ந்த இம்மக்களுக்கு இயேசுவின் அன்பு ஒரு புதுத்தெம்பையும், தைரியத்தையும் கொடுத்தது. பல்வேறு கசப்பான அனுபவங்களால் உடைக்கப்பட்ட மக்களுக்கு இயேசு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தார். தமது கிராமங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பேசினார். அடிமைத்தன பிடியில் இருக்கும் பெண்களுக்காகவும், சிறு பிள்ளைகளுக்காகவும் குரல் கொடுத்தார். சுரண்டலுக்கும்,ஆதிக்க, அதிகார வர்க்கத்திற்கு எதிராக விடுதலை சிந்தையோடு போராடினார். உடைக்கப்பட்ட மக்களோடு இயேசு தன்னை அடையாளப்படுத்தினார். இதனால் சமூகத்தின் உயர்தட்டு மக்களுக்கும், அரசுக்கும் இயேசு எதிரியாக விளங்கினார். விடுதலையை விரும்பிய இயேசுவை சமூக தலைவர்கள்; ஓரு கலகக்காரனாகவும், தீவிரவாதியாகவுமே சித்தரித்தனர்.

சிறுபிராயம் முதல் இயேசு நாசரேத்து ஊரில் வளர்ந்தார், கலிலேய ஊரில் அதிகமாக பணி செய்தார். இவ் இரண்டு ஊர்களும் யூதர்களால் மதிக்கப்படாத, கேவலமாக கருதப்பட்ட ஊர்களாகும்.

யோவான் 1:46

“நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?”

யோவான் 7 52.

“நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்”

இவ் உதாரணங்கள் மூலம் நமக்கு வெளிப்படுவது, யூதர்கள் இவ் ஊர் மக்களை மக்களாக மதிக்கவில்லை. அம்மக்கள் வாழ்வில் வளர்த்து, வருவது அதிகார வர்க்கத்தினருக்கு எரிச்சலாக இருந்தது, இதுவே கசப்பான உண்மையாகும்.

நாசரேத்து, கலிலேயாவை போன்று இலங்கையிலும் மலையக மக்கள்; வரலாற்றில் பல முறை சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். யூதர்கள் எவ்வாறு கலிலேயரை வெறுத்தனரோ அவ்வாறு அதிகார அரசியல்வாதிகளினால் இவர்கள் வெறுக்கப்பட்டனர், வரலாற்றில் நொறுக்கப்பட்டனர். ஆனால் விடாமுயட்சியும் கல்வியினாலும் மலையக சமூகம் இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறது, தம்மை கேலிக்கு உட்படுத்திய மனிதர்கள் முன் தலை நிமிரும் சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் நண்பனான இயேசு மலையக மக்களோடு தன்னை அடையாளப்படுத்துகிறார். அவர்களின் துன்பம் நிறைந்த வாழ்வில் தன்னை சேர்த்துக் கொள்கிறார்.மலையகத்தில் இருக்கும் மக்கள் இயேசுவை தம் மத்தியில் பிறந்தவராகவே பார்க்கின்றனர், வரலாற்றில் உடைக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இயேசு, இன்றும் எம் மத்தியில் வாழ்கிறார் எமக்காகவும் செயல்படுகிறார் என அவர்கள் நம்புகின்றனர். இயேசுவை மக்கள், தங்களின் நண்பராகவும் தம்மோடு இருப்பவராக புரிந்து கொள்கின்றனர்.

காட்டை தோட்டமாக்கி அத்தோட்டத்தில் வாழும் இம்மக்கள் இயேசுவை அவர்களில் ஒருவராக இனங்கண்டு கொள்கின்றனர்.

''திரண்டிருந்த மலையக மக்களை அவர் கண்டபோது, அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்'' 
மத்தேயு 9:36 (மீள்வாசிப்பு (re-reading from my context))


ரூபன் பிரதீப் ராஜேந்திரன்,
ரூபன் பிரதீப் ராஜேந்திரன்,

அருட்பணியாளர்,
புனித மகதலேனாமரியாள் தேவாலயம்,
அம்பாறை,
இரக்கமுள்ள கிறிஸ்து நுகேலந்தா .

அருட்பணியாளர் ரூபன் பிரதீப் ராஜேந்திரன் அவர்களின் ஊழிய தளம்