6 ஆகஸ்ட் 2022

The Transfiguration of Christ
கிறிஸ்துவின் மறுரூபமாகும் திருநாள்
லூக்கா 9:28-36

• ஆசியா நாட்டில் உருவாகியுள்ள சமயங்களில் மலை முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இஸ்லாம் சமயத்தில் முகம்மது நபி ஹீரா என்ற மலையில் கடவுளின் வெளிப்பாட்டைப் பெற்றார். யூத சமயத்தில் கடவுள் மோசேக்கு வெளிப்பாட்டை சீனாய் மலையில் கொடுத்தார். அதேவகையில் கிறிஸ்தவ சமயத்தில் கடவுளின் வெளிப்பாட்டை இயேசு மறுரூப மலையில் பெறுகின்றார்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி விடுதலைப்பயணம் அல்லது யாத்திராகமம் 24:12-18 இப்பகுதியில் இறைவன் மோசேக்கு தரிசனம் ஆகின்றார். மோசேக்கு கடவுள் பல இடங்களில் தரிசனம் கொடுத்ததாக வேதாகமத்தில் படிக்கின்றோம் (விடுதலைப்பயணம் 3:14). கடவுளின் பிரகாசத்தை மோசேயால் பார்க்க முடியவில்லை எனப் படிக்கின்றோம்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்துக்கு வரும்போது 2 பேதுரு 1:12-21 இப்பகுதியில் பேதுரு இயேசுவின் மறுரூபமலை சம்பவத்தை கண்ணாரக் கண்டதாகக் கூறுகின்றார். அத்துடன், அந்நிகழ்வு தமது வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறுகின்றார்.

• ஒத்தமை நற்செய்திகளில் இயேசுவின் மறுரூபமலை நிகழ்வைப் பற்றி ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிகழ்வில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய சீடர்கள் இயேசுவுடன்கூட இருந்ததாக கூறுகின்றனர். மேலும், இந்நிகழ்வு இயேசு தனது பாடுகளை அனுபவிக்கப் போவதற்கான ஆயத்த நிகழ்வாகக் காணப்படுகின்றது. இயேசுவின் பாடுகளை ஊக்கப்படுத்துவதற்காக மோசே, எலியா போன்றவர்கள் அங்கு கூடியுள்ளனர். மோசே கடவுளிடமிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெற்று மக்களுக்கு கொடுத்தவர். எலியா விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர். அவர் மறுபடியும் வருவார் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் காணப்பட்டது. மேலும், இயேசு உருமாறிய வேளையில் பேதுருவின் அறிக்கை ஓர் உணர்வினால் ஏற்படும் அறிக்கையாகும். இப்பேர்ப்பட்ட அறிக்கைகளை நாம் லூக்காவில் படிக்கின்றோம் (லூக்கா 9:18-21). மேலும், எப்பொழுதும் மலையில் அமர்ந்திருப்பது அல்ல, அவர்கள் அடிவாரத்திற்கு வரவேண்டும். அப்பொழுதே அதிக சவால்கள் அவர்களுக்கு காத்திருக்கின்றன என்பதற்கு பிசாசு பிடித்த மகனுடைய நிகழ்வு ஓர் உதாரணமாகக் காணப்படுகின்றது.

ஆக்கம்: அற்புதம்