தலைமை குருக்களும், மூப்பர்களும் ”எங்களுக்கென்ன, அது உன்பாடு” என்றார்கள் (மத்தேயு 27:4)

விவிலியத்தில் பார்க்கப்போனால் சீடத்துவத்தின் பல்வேறு கோணங்கள் உண்டு. யாக்கோபு, யோவான், பேதுரு, யூதாஸ், தலைமை குருக்கள், பிலாத்துவின் மனைவி என பல்வேறு கோணங்கள். இங்கு கடவுளை (யாவேயை) தலைவராக ஏற்றுக்கொண்டு இறுதிவரை மனம் வருந்தாமல் மற்றவர்களை தீர்ப்பிட்டுக்கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஒரு குழுவினரை இன்று காண்போம்.

அவர்கள் தலைமை குருக்களும், உடன் பணியாளர்களுமாய் இருந்தனர். இப்பகுதி மத்தேயுவில் ஒரு சிறப்புப் பகுதி. இவரது பணி என்ன? தோராவில் சொல்லப்பட்ட சமய சடங்குகளை எழுத்துப் பிசகாமல் அப்படியே யூத மக்களிடம் எதிர்பார்ப்பது, அறிவுறுத்துவது, தவறியோரை தண்டிப்பது மட்டுமே. ஆனால் தாங்கள் எந்தவொரு மனமாற்றத்தையும் தங்களிடம் ஏற்படுத்த விரும்பாதவர்கள்.

இயேசுநாதரின் தொடக்க பள்ளிக்கூடமும் பரிசேயரின் குழுதான். ஆனால் அவர் பரிசேயரின் புரிதலில் இருந்து தனித்து நின்றார். ஓய்வுநாள், மணவிலக்கு, உண்ணாநோன்பு, கடவுள், மேசியா, உரோம ஆட்சி – இப்புரிதலில் தனக்கென தனி பாணியைக் கடைபிடித்தார். அவர்களுக்கு இயேசு ஒர் எத்தனாக, மோசக்காரனாக தென்பட்டார் (27:62). இருப்பினும் இவர் பின்னால் மக்கள் கூட்டம் அதிகரித்தது (12:19; யோ.11:45-50). இப்படியே சென்றால், உரோமர்கள் பாலஸ்தீன நிலத்தையும், திருக்கோவிலின் சமய வாழ்வையும் கூட கையில் எடுக்க வேண்டிவரும். எனவே இவரே முதல் எதிரி. இவரை கொலை செய்வதுதான் முதல் வேலை. தங்களுக்குள் நேரடியாகப் பேசித்தீர்க்க வேண்டிய செயல்களை, மாற்றுக் கருத்துக்களை மிக எளிதில் அடக்க முனைந்தனர், திட்டம் தீட்டினர்.

யூதாசும் சதித்திட்டத்திற்கு தன்னார்வத்தோடு முன் வந்தார். முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இயேசுவை காட்டிக்கொடுத்தான். அவன் நினைத்தபடி இயேசுவின் முடிவு நடக்கவில்லை. மனம் வருந்தினான், அழுதான். தலைமை குருக்களிடம் ஒடினான். சதித் திட்டத்திலிருந்து பின்வலித்துகொள்ள விரும்பினான். கூட்டு சதித்திட்டத்திலிருந்து ஒருவர் மட்டும் தப்ப வாய்ப்புள்ளதா என்ன? ஆனால் அவனுக்கு வந்த பதிலோ ‘காசு வாங்கிவிட்டாயா, வேலை முடிந்ததா? போய்கொண்டே இரு” என்பதாகும். காசுக்காக யாரையும் விலைக்கு வாங்குவோரின் பொது மனப்பான்மையும் அதுதான். காசுக்காக, மதுவுக்காக, உணவுக்காக மட்டும் வாழும் கூலிப்படைகளின் கடைசிக்கதியும் அதுதான்.

கடவுள் பயமில்லாத, மனசாட்சியில்லாத ஒரு சமயக்கும்பல், இரத்த வெறிபிடித்த மதக்கும்பல் ஒன்றிற்கு அதிகாரம், நீதிமன்றம் போன்றவை தேவைப்படுகின்றன, அரசு தேவைப்படுகிறது. இவர்கள் காசுகொடுத்து சாட்சிகளை சோடித்து தம் நோக்கத்தை, நினைத்த நீதியைப் பெற முடிகிறது. பொய் சாட்சிகளால் இயேசுவைக் கொலை செய்ய தம் முயற்சிகளை முழு மூச்சாக பயன்படுத்தி, பொய் சாட்சிகளால் சோடித்து நம்ப வைக்கக்கூடிய திறமைகளைப் பெற்றிருந்தனர் (28:12-15). நேற்றுவரை ஒரு தனிநபர் யூதாசின் உதவி இவர்களுக்குத் தேவைப்பட்டது. அவன் உறவு தேவைப்பட்டது, அவர் கூட்டொருமைப்பாடு தேவைப்பட்டது, ஒரே நொடியில் அவன் உறவை இப்போது வெட்டிக்கொண்டனர். ‘உனக்கு மனசாட்சி உறுத்தியதா? எனக்கு கவலையில்லை, நீ செய்த வேலைக்கு காசை வாங்கிவிட்டாய். நம் உறவு முடிந்துவிட்டது’ என்பதுதான் அவர்கள் பதில். தாம் கடவுள் பற்றுக்கொண்டவர் எனக்கூறும் ஒரு கொலைவெறி கூட்டத்திற்கு காசு, பணம், துட்டு மட்டுமே போதும். மனசாட்சியைப் பற்றியோ, மனவருத்தத்தைப் பற்றியோ, கடவுளின் திருசித்தம் என்ற கவலையோ, கூச்சமோ, தயக்கமோ, உறுத்தலோ இல்லை.

இவர்களது ஒரே நோக்கம், ஒரே குறிக்கோள் இயேசுவை கொலை செய்வதுதான். இதற்காக மக்களை தூண்டிவிட்டனர் (27:20). பொய்சாட்சி, தூண்டிவிடுதல், கொலை செய்தல் என்பதுதான் கடவுளின் பெயரால் நடத்தப்படும் இறை சித்தமா? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பத் தயாராக இல்லை.

யூதாஸ் மனமுடைந்து முப்பது வெள்ளிக்காசுகளை திருக்கோவிலில் விட்டெறிந்து சென்றான். யூதாஸ் வெறும் காசுக்காக மட்டும் காட்டிக் கொடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. தான் நினைத்த மேசியாவாக இயேசு இல்லாமல், சிலுவையைப் பேசும் ஒரு மேசியாவாக அவர் காணப்பட்டார். எனவே விரக்தி, ஏமாற்றம். மேலும், ஒருவேளை நான் அவரைக் காட்டிக் கொடுத்தால்கூட அவர் தப்பிவிடுவார் எனவும் நினைத்திருக்கக்கூடும்.

யூதாஸ் எறிந்த காசுளை தலைமை குருக்கள் எடுத்து அந்நியரைப் புதைக்க இடம் வாங்கினர். ஏனெனில் இது இரத்தப் பழி கொண்ட பணமாம். இந்தப் பணம் திருக்கோவிலின் காணிக்கை உண்டியலில்கூட இருக்கக்கூடாதாம். இந்த இரத்தப்பழி பணத்தை நேற்றுவரை அவர்கள் வைத்திருந்து யூதாசோடு பேரம் பேசினபோது இது தெரியவில்லையா? இன்று யூதாஸின் கைபட்ட பிறகுதான் பணம் சாபமாகிவிட்டதா? மாசுபட்டுவிட்டதா? காசுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மரியாதை ஏன் மனிதருக்கு கொடுக்கப்படவில்லை? கொலைவெறி நேரத்திலும் பணத்தின் தூய்மை குறித்த சிந்தனை இவர்களிடம் எப்படி வந்தது? கடவுளைப்பற்றி ஒரு துளிகூட அக்கறை இல்லாதோரிடம் தூய்மை, தீட்டு குறித்த சிந்தனை எப்படி ஊறியுள்ளது என்பதற்கு இவர்களே சாட்சி.

அந்த காசுகளை எடுத்து முத­லீடு செய்கின்றனர். அதிலே தெளிவாக இருந்தனர். யூதரல்லாத மக்களுக்கு கல்லறைத் தோட்டம் வாங்கினராம். இந்தக் கும்பலுக்கு கடவுளோ, ஆண்டவரோ, மெசியாவோ அவர்கள் மையம் அல்ல. சமயத்தை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு, காசுகொடுத்து எல்லாவற்றையும் நடத்தலாம் என்ற சிந்தனையுள்ள ஒரு சமயக் கும்பலுக்கு கடவுளைக் குறித்த சிந்தனை அவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் இவர்கள் தாம் விரும்பும் ‘நியாயத்தை’ நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கும் கூட்டம். சாட்சிகளை வாங்கலாம் என்ற அபார நம்பிக்கை. உரோம அரசு சமய அதிகாரத்தில் தலையிடாதவரை அதனையும் நண்பராக வைத்துக் கொள்ளலாம் என்ற தைரியம்.

எதிர்தரப்பு பிலாத்து, அவன் மனைவி போன்றோரிடம் இருந்த நெஞ்சின் ஈரம் கூட இவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து சமய மன்றங்களை ஆளுகிறார்கள். இவர்களுக்கு உண்மையாகவே யார் தெய்வம்? அதிகாரம், பதவி, ஆணவம், சமய நிறுவனம் இவைகள்தான் தெய்வம். இப்படிப்பட்டோரை பவுல் கூறும்போது இவர்களுடைய தெய்வம் வயிறு என்கிறார் (உரோ.16:8, பிலிப்.3:19). வயிற்றுக்கு ஊழியம்? கிறிஸ்துவுக்கு ஊழியம்? – இவை இரண்டுமே நமக்கு முன்பு கொடுக்கப்பட்ட அறைகூவல். இப்படிப்பட்ட நேரங்களில் ‘எங்களுக்கென்ன அது உன்பாடு” என கழன்று கொள்ளலாம்.

ஆண்டவருக்காக உயிரைக் கொடுப்போம் என்ற பேதுருவுக்கு மறுதலிக்க வேண்டிய ஒரு கட்டாயம். ஏழைகளைப்பற்றிய அதிக கரிசனை கொண்டவராகக் காட்டிய யூதாஸ் தற்கொலை செய்து கொண்டார். இவைகளையும் தாண்டி சமய அரசியலில் தேறிய ஒரு சமயக் கும்பலுக்கு தொடர்ந்து தம் விருப்பப்படியே செயல்பட முடிகிறது. இன்று திருச்சபைப் பணியில் நாம் யாராக மாறுகிறோம்?
எப்படிப்பட்ட சீடத்துவத்தை தெரிகிறோம்?

மனிதரை மனிதராக்கும் பணியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சொல்வதெல்லாம் இருக்கட்டும், அது எங்களுக்குத் தேவையில்லை ”எங்களுக்கென்ன அது உங்கள் பாடு, உங்கள் சித்தாந்தம்” என மாணவர்கள் நாளைக்கே நம்மிடம் கேட்க முடியும். எபிரேயர் 6:4-6 இன் படி, ஒரு முறை கடவுளின் அன்பை ருசித்து அனுபவித்தவர், திரும்ப முடியாதபடி மாறிச் சென்றால் மீண்டும் மாறுவது கடினம். அது சில நேரங்களில் இவர்களுக்கு மனமாற்றம் என்பது இயலாத ஒரு செய்தியாககூட மாறிவிடலாம்.

உள்ளம் மெதுவாக இறுகிய பின் இளக வாய்ப்பு குறைவு. அதுதான் எகிப்திய பார்வோனின் பிரச்சனையும் கூட. அவன் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றும், அவனது இதயம் இளக முடியாதவாறு இறுகியது. இன்றைய திருச்சபை அமைப்புகள் செக்குமாட்டு ஊழியத்தில் ஒருவித இயக்கத்தைக் கொண்டிருக்கிறது. கடவுளின் விடுதலைக் கூறுபாடுகள் ஒவ்வொரு ஆயர் வட்டத்திலும் உள்ளதா? இல்லையா? என்பதைப் பார்க்க முடியாமல் திருச்சபை சட்ட அமைப்பு முறையை தக்க வைப்பதற்காகவே இயங்குவதாக காண முடிகிறது. இதுபோன்ற சூழல்களில்தான் தலைமைக் குருக்களும், மூப்பர்களும், பரிசேயரும், சனகரிம் சங்கங்களும் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் மனமாற்றம் இல்லாமலே தொடர்ந்து மதத்திலே செயல்படும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இன்றும் மதம் என்ற போர்வையில் சிலநேரங்களில் நீதிமன்ற நியாயங்கள் கூட விலை பேசப்படுகின்றன. அரசுகள் கூட பேரம் பேசப்படுகின்றன.

எனவே கடவுளின் பணிகளில் ஈடுபடுவோர் மனம் வருந்த வேண்டிய நேரங்களில் மனம் வருந்தி கடவுள் அருகில் செல்வது அவசியம். இல்லாவிடில் கடவுளை நம் சட்டைப்பையில் வைத்துக்கொண்டிருப்பது போல நாடகமாடி, கடவுளின் தூய திருவுளத்தை தூக்கி வீசி விடலாம். மதம் என்ற அமைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு நம் பிழைப்பைத் தேடி விடலாம். இச்சூழலில் மதத்தைத் தாண்டிய கடவுளையும், மனிதத்தையும் காண விவிலியம் காட்டும் கடவுள் நமக்குத் துணைபுரிவாராக!

சாலமன் விக்டஸ்,
சாலமன் விக்டஸ்,

இறையியலாளர், தென்னிந்தியா.