14 ஆகஸ்ட் 2022
திருமுழுக்கு மேலிருந்து பிறத்தல்

Baptism – Born from Above
யோவான் 3:1-8

• திருமுழுக்கு என்பது பெப்டிசோ என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாகின்றது. இதன்படி நீராடுதல், கழுவுதல் எனக் பொருள்படுகின்றது. இது பாவமன்னிப்பின் அடையாளமாகவும் (லூக்கா 3:1-17), ஒப்புரவாகுதலின் அடையாளமாகவும் (1கொரிந்தியர் 1:10-14), பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைக்கும் அடையாளமாகவும் காணப்படுகின்றது.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் 8:1-14 இறைவன் மனிதர்களின் பாவத்தினிமித்தம் வேதனையடைகின்றார் (ஆதியாகமம் அல்லது தொடக்கநூல் 6:5). எனினும், தனது மீட்புத் திட்டத்தின்படி நோவாவை ஓர் பேழையின் மூலம் காப்பாற்றுகின்றார். இதனை, பொதுவாக திருமுழுக்கு வழிபாட்டின்போது நாம் நினைந்து கொள்கின்றோம். ஒரு சிலர் அந்த பேழையே திருச்சபை எனக் கூறுகின்றனர்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி கொலோசேயர் 3:1-11 இப்பகுதியில் பவுல் கொலோசேய மக்களை பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்விற்கு அழைக்கின்றார். நீதிச்சட்டத்துக்கு அடிமைகளாயிருந்த மக்களை அதிலிருந்து விடுதலைப் பெற்று புதிதாய் பிறக்கும் அனுபவத்திற்குள் அழைக்கின்றார்.

• சங்கீதம் அல்லது திருப்பாடல் 25ல் தாவீது இறைவனை நோக்கி தனது இளவயதின் பாவங்களை எண்ணாதிருக்குமாறு கூறுகின்றார். மேலும், தமது பாவத்திற்கான மனந்திரும்பிய சம்பவத்தை திருப்பாடல் அல்லது சங்கீதம் 51ல் நாம் படிக்கின்றோம். இது ஓர் தனிமனித மனந்திரும்புதலாக நாம் காணலாம். ஆனால், யோனா புஸ்தகத்தில் நினிவே நாட்டு மக்கள் அனைவரும் மனந்திரும்பிய நிகழ்வை ஓர் கூட்டு மனந்திரும்புதலாக நாம் பார்க்கின்றோம்.

• வாசிக்கப்பட்ட நற்செய்தி பகுதியில் யோவான் 3:1-8ல் இயேசுவுக்கும் நிக்கோதேவுக்குமான உரையாடலை நாம் பார்க்கின்றோம். இங்கு நிக்கோதேமு யூத சமயத்தின் பிரதிநிதியாக அல்லது இருளின் பிரதிநிதியாக ஒளியாகிய கிறிஸ்துவினிடத்திற்கு வருகின்றார். எனவேதான், இவர் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வருவதாக யோவான் கூறுகின்றார். ஆண்டவர் இயேசு நீரினாலும் ஆவியினாலும் திருமுழுக்கு பெறுமாறு அழைக்கின்றார். இந்நிகழ்வு கிறிஸ்து பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்பதற்கும் பிதா அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றவர் என்பதற்குமான உதாரணமாகும். மேலும், 1 கொரிந்தியர் 10ம் அதிகாரத்தில் பவுல் இஸ்ரவேல் மக்கள் செங்கடலினூடாக கடந்து சென்ற நிகழ்வை திருமுழுக்குடன் ஒப்பிடுவதையும் நாம் அறிகின்றோம்.