30 ஒக்டோபர் 2022

கடவுளின் மாண்பை கொண்டாடுதல், நீதியும் அமைதியும்

யோவான் 18:33-38

• சீர்த்திருத்தம் சமயங்களுக்குள்ளும் திருச்சபைகளுக்குள்ளும் ஏற்பட்டது. இந்து சமயத்திற்குள் பிரமானிய ஆதிக்கம், ஆணாதிக்கம், சாதியக்கொடுமை போன்றவற்றை சீர்த்திருத்த கௌதம புத்தர் முற்பட்டார். இதன் விளைவாகவே பௌத்த சமயம் உருவாகியது. யூத சமயத்துக்குள் காணப்பட்ட சீர்க்கேடுகளை இயேசு அகற்ற முற்பட்டதன் விளைவாகவே கிறிஸ்தவ சமயம் உருவாகியது. திருச்சபைக்குள் காணப்பட்ட சீர்க்கேடுகளை அகற்ற
முற்பட்டதன் விளைவாகவே திருச்சபை பிரிவுகள் ஏற்பட்டன. மேலும், அரசியலின் ஆதிக்கத்துக்கு எதிராக கடவுளின் ஆட்சியை ஏற்படுத்த முற்படுவதும் சீர்த்திருத்தத்தின் ஓர் ஆரம்பமாகும்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி மோசே பார்வோனிடத்தில் சென்று இஸ்ரவேல் மக்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகின்றார். ஏனெனில், அவர்கள் வனாந்திரத்திற்கு வழிபாட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறுகின்றார். இங்கே, கடவுளுக்குரிய மதிப்பையும்,
மரியாதையையும் ஒரு மனிதனோ சமூகமோ அடிமைத்தனத்திலிருந்து செலுத்தமுடியாது. மாறாக, வழிபாடு சுதந்திர உணர்வுடன் ஆற்றப்பட வேண்டும்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ரோமர் 13:1-7ல் பவுல் உரோம அரசின் அதிகாரங்களுக்கு கீழ்ப்படியுமாறு கூறுகின்றார். ஆரம்ப காலத்தில் திருச்சபைக்கும் உரோம அரசுக்குமிடையே நல்லுறவு காணப்பட்டது. இதனாலேயே, பவுல் தன்னுடைய வழக்கு சீசர் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். பிற்பட்ட காலப்பகுதியில் உரோம அரசு அரசனையே ஆண்டவர் எனக் கூறிய வேளையில் மாற்றுக் கலாசாரத்தை உருவாக்கி
இயேசுவையே ஆண்டவர் என அறிக்கையிட்டார். இதன் காரணமாகவே, இவர் நீரோ மன்னனினால் சிரைச்சேதம் செய்யப்பட்டார்.

• வாசிக்கப்பட்ட நற்செய்தியின்படி யோவான் இப்பகுதியில் ஆண்டவர் இயேசு பிலாத்துவுக்கு முன்பதாக தன்னுடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று எனக் கூறி மாற்றுக் கலாசாரத்தை முன்வைக்கின்றார். அதாவது, கடவுளுடைய ஆட்சியை இப்பூமியில் ஏற்படுத்தவே
தான் வந்ததாக குறிப்பிடுகின்றார் (மாற்கு 1:14-15). இக்கடவுளின் ஆட்சியைப் பற்றியே திருப்பாடலும் கூறி நிற்கின்றது (திருப்பாடல் 89:1-18).