முழக்கம் 08

நல்ல சமாரியன் இயேசு

“நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே” என்ற அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடிய பாடலை பல ஆண்டுகள் முன் கேட்டதுண்டு. இயேசுவை உயர்குல யூதனாக “யூத ராஜசிங்கம்” என்று கம்பீரமாக பாடி புளங்காகிதம் அடைந்துக்கொண்டிருந்த கிறிஸ்தவக் கூட்டத்திற்குள், யூதர்கள் புறந்தள்ளின சாதாரண ‘சமாரியனாக’ இயேசுவை உருவகப்படுத்தி பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் எழுதியிருப்பது உண்மையில் புரட்சிகரமானது.

வசைச் சொல்

இன்றைக்கு “சண்டாளா” என்று பயன்படுத்தப்படும் வசைபாடும் சொல் உண்மையில் வங்காள மாநிலத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் துப்புறவு செய்யும் சாதியின் பெயரே ஆகும். அன்று வங்காளத்தில் மற்ற முற்படுத்தப்பட்ட சாதியினர் தங்களுக்குள் ஒருவரை இழிவாக திட்டுவதற்கு இந்த ‘சண்டாளார்’ என்ற சாதிப்பெயரை பயன்படுத்துவது வழக்கமாகி இன்று இந்தியா முழுவதும் அது பரவிவிட்டது.

அவர்களை தொட்டதும் தீட்டுதான்

இதேபோல் ஹரிஜன், தலித், SC, சேரி போன்ற தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொற்களும், குறியீடுகளும் கூட சிலர் காதுகளுக்கு கேட்க கெட்டவார்த்தைகளாக கூசுகின்றன. ஹரிஜன் என்பது கடவுளுடைய மக்கள் என்றும், தலித் என்பது உடைக்கப்பட்டவர்கள் என்றும், SC என்பது Schedule Castes அதாவது பட்டியல்படுத்தப்பட்ட இனத்தவர் என்றும், ‘சேரிமக்கள்’ என்பதில் ‘சேரி’ என்பது ‘சேர்ந்துவாழும் குடி’ என்றும் பொருள் தருகின்றன. இந்த சொற்கள் அனைத்துமே நல்லவைதான் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கஷ்டத்தினை எடுத்துரைப்பவைதான் எனினும் அது தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட்ட பெயர்கள் என்பதாலேயே அப்பெயர்களும் தீட்டாகி திட்டும் வார்த்தையாகிப்போவது என்பது எவ்வளவு அவலமானது!?

இயேசுவும் திட்டப்பட்டார்

தாழ்த்தப்பட்ட சாதியின் பெயரை சொல்லி திட்டி இழிவுபடுத்தும் இந்த மரபு உலகின் பல்வேறு சமூகங்களிலும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அது இயேசு வாழ்ந்த சமூகத்திலும் கூட வழக்கமாக இருந்திருக்கிறது. இயேசுவை இழிவுபடுத்துவதற்காக அவரை “சமாரியன்”என்று யூதர்கள் திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் (யோவான் 8:48) என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம்.

மாண்பளித்த இயேசு

இப்படி அன்று ஒருவரை இழிவாக திட்ட பயன்படுத்தப்பட்ட “சமாரியன்” என்ற அடைமொழிச்சொல்லை கடவுளுக்கு இணையானவரை குறிக்க பயன்படுத்தப்படும் மதிப்பிற்குரிய சொல்லாக பாடலில் பாடுமளவிற்கு ஏற்பட்டிருக்கிற தலைகீழ் மாற்றத்திற்கான மூலகாரணம் நம் ஆண்டவர் இயேசு என்று சொன்னால் அது மிகையாகாது. இயேசு தம் வாழ்வில் சமாரியர்களுக்கு சம அந்தஸ்தளிக்கவேண்டும் என்று யூதர்களிடம் போய் கெஞ்சிக்கொண்டிராமல், சமாரியர்கள் யூதர்களைவிட நற்பண்பிலும், நன்றியுணர்விலும், விசுவாசத்திலும் உயர்ந்தவர்களாகக் காட்டி பெருமிதத்தோடு யூதர்களுக்கு முன்பாக நிறுத்தினார். இவ்வகையில் யூதர்களையும் சமாரியர்களையும் ஒப்புறவாக்கும் திருப்பணியை ஆண்டவர் இயேசு செய்ததை நற்செய்திநூல்களின் பல இடங்களில் நாம் காணலாம். அதில் குறிப்பாக ஒரு நியாய சாஸ்திரியினுடன் ஏற்பட்ட உரையாடலில் “நல்ல சமாரியன்” உவமை வழியாக யூதர்-சமாரியர் ஒப்புறவாக்கும் பணியை கனக்கச்சிதமாக இயேசு செய்திருப்பார். அந்த உவமையில் இயேசு குறிப்புணர்த்தும் செய்திகளை தொடர்ந்து தியானிப்போம்.

பின்புல உரையாடல்

“நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று இயேசுவிடம் கேட்டது சாதாரண நபரல்ல, யூத விவிலியத்தையே கரைத்துக்குடித்திருந்த நியாயசாஸ்திரி என்பதால் இயேசு அவராக பதில் சொல்லாமல் கேட்டவரையே பதில் சொல்ல வைக்கிறார். அதற்கு அவன், “கடவுளிடத்தில் முழுமையாக அன்புகூர்ந்து, உன்னைப்போலவே பிறனையும் நேசிக்க வேண்டும்” என்று விடையளித்து, மேலும் அவன் ‘தன்னை நீதிமானாய் காண்பிக்க விரும்பி’ தான் சொன்ன யூத சட்டத்தில் வரும் “என்னைப்போலவே நான் நேசிக்கவேண்டிய அந்த ‘பிறன்’ யார்?” என்று இயேசுவிடம் கேட்கிறார். ஆனால், ஒவ்வொரு யூதனுக்கும் ஒரு யூதன் தான், அதுவும் தீட்டற்ற ஒரு யூதன் தான் ‘பிறனாக’ இருக்கமுடியும் என்ற விடையை மனதில் வைத்துக்கொண்டே அந்த யூத சட்ட வல்லுனரான நியாயசாஸ்திரி இயேசுவிடம் இந்த வினாவை எழுப்பினார்.

தன்னை நீதிமானாககாட்ட

தெரிந்துகொண்டே வினா எழுப்பிய காரணம், “யூதனாகிய நான் யூத சட்டப்படி யூதர்களை மட்டுமே பிறனாகக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீரோ ‘துன்மார்க்கரின் ஆலோசனையில் நடவாமலும், பாவிகளின் வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்’ என்ற திருமறை வசனங்களுக்கு எதிராக பாவிகளோடும், புறஇனத்தாரோடும், வேசிகளோடும், ஆயக்காரரோடும் நட்பு பாராட்டி அவர்களோடு விருந்துண்கிறீர்” என்று இயேசுவை இழிவுபடுத்தி “தன்னை நீதிமானாக காட்டிக்கொள்ளவே” உண்மையில் இந்த வினாவை எழுப்பினார். இதை புரிந்துகொண்ட ஆண்டவர் அவனுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் ஒரு கதை சொன்னார்.

இயேசுவின் உக்தி

எரிகோவுக்கு போகும் வழியில் யூதர்களுக்கு அடிக்கடி நிகழும் வன்முறைச்செயலையே இயேசு கதைக்களமாக்கியதின் மூலம், கள்வர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராய் இருந்த அந்த யூதனோடு, அந்த நியாயசாஸ்திரி ஒரு யூதனான தன்னை எளிதாக அடையாளப்படுத்திக்கொள்ளும்படியாக செய்து கதைக்குள் வலுக்கட்டாயமாக இயேசு அவனைத் தள்ளுகிறார்.

ஏன் காப்பாற்ற முடியவில்லை?

சுயநினைவற்று, இரத்த வெள்ளத்தில், உயிர் இருக்கிறதா? இல்லையா? என்று பிணம்போல இருக்கும் நிலையில் அந்த யூதனை, அவனுக்கு அயலானாக இருக்கும் மற்றொரு யூதன் தொட்டு காப்பாற்ற முடியுமா? என்பதுதான் இக்கதையில் நியாயசாஸ்திரிக்காக இயேசு ஒளித்துவைத்துள்ள முரண்வினா. ஏனெனில் அந்த கதையில் யூதகுல ஆசாரியனும், லேவியனும் அடிபட்டிருந்த யூதனை காப்பாற்றாமல் கடந்து சென்றுவிடுகின்றனர். ஏன் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை? இதற்கான விடை அந்த நியாயசாஸ்திரிக்கே தெரியும். ஆம், ஒரு யூதன் பிணத்தை தொட்டாலும் இரத்தத்தை தொட்டாலும் ஏழு நாட்கள் தீட்டாயிருப்பான் என்பது அவர்களின் சட்டம் (எண்.19:11-22). அச்சட்டத்தின்படி தீட்டுப்பட்டவர் ஏழு நாட்கள் ஆலயத்திற்கோ யூத பொது நிகழ்வுகளுக்கோ செல்லமுடியாமல் அவர் விலக்கப்பட்டிருப்பார்.

உலக வழக்கங்களின் கோரமுகம் காட்டும் இயேசு

யூதகுலம், எந்த தீட்டுத்தூய்மை சட்டங்களை வைத்து தன்னை தூய்மையானதாகவும் உயர்ந்ததாகவும் காட்டிக்கொள்கிறதோ அதே தீட்டுத்தூய்மை சட்டம் தான் ஒரு யூதனின் ஆபத்தில் மற்றொரு யூதன் உதவமுடியாதபடி தடுத்துவிடுகிறது. உனக்கு பெருமை என்று நீ நினைக்கும் சட்டமே உன் உயிரை பறிக்கும் உயிர்க்கொல்லியாகவும் இருக்கிறது என்று அந்த சட்டவல்லுநருக்கு இக்கதைமூலம் உணர்த்தி யூதகுலம் தன்னை உயர்த்திக்கொள்ள பயன்படுத்தும் தீட்டுத்தூய்மை சட்டத்தின் முகத்திரையை கிழித்து அதின் கோரமுகத்தை ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார். எந்த சட்டத்தில் தனக்கு புலமை அதிகம் என்று அந்த சட்டவல்லுநர் கர்வம் கொண்டாரோ அந்த சட்டம் மானுடத்திற்கும், ஏன் அந்த சட்ட வல்லுநருக்குமே ஆபத்தானதாக இருக்கிறது என்பதை இயேசு விளக்குகின்றார்.

ஏன் காப்பாற்ற முடிந்தது?

மேலும் அக்கதையில் திடீரென ஒரு சமாரியனை அறிமுகம் செய்து அவன் அந்த யூதனைக் கண்டு, மனதுருகி, அருகில் சென்று இரத்தம் வழியும் காயங்களை தொட்டு எண்ணைவார்த்து, காயங்களை கட்டி, தன் சொந்த வாகனதில் ஏற்றிசென்று சத்திரத்தில் தங்கவைத்து, இரவு முழுதும் அவனோடு தங்கி, மறுநாள் விடைபெறும்போது கூடுதலான தொகையை சத்திரக்காரனிடம் அளித்து தொடர்ந்து பராமரிக்க கேட்டுக்கொண்டதோடு மேலும் செலவானால் மீண்டும் வரும்போது தருவதாக வாக்களித்து கடந்து செல்கிறான் என்று இயேசு கூறியது அந்த நியாயசாஸ்திரிக்கு சாட்டையில் அடித்ததை போன்று இருந்தது. அந்த சமாரியன் மட்டும் எப்படி காப்பாற்ற முடிந்தது? காரணம் அந்த நியாயசாஸ்திரிக்கே தெரியும், ஒரு சமாரியன் பிறரின் ஆபத்தில் உதவுவதற்கும் மற்ற பிறரோடு இணைந்து வாழ்வதற்கும் எந்த தீட்டுத்தூய்மை சட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, பொருளாதார நிர்பந்தங்களோ, நேரவிரய பயமோ அற்ற சுதந்திர மனிதன் என்று.

நியாயமான நியாயசாஸ்திரி

குற்றுயிராய் கிடந்த யூதனை பிற இனத்தார் காப்பாற்றிய இப்படிப்பட்ட பல நிகழ்வுகள் உண்மையிலேயே அன்று நடந்து இருப்பதால் தான் சமாரியனை இயேசு இக்கதையின் நாயகனாக மையப்படுத்தினார். அதனால் தான் இதை வெறும் கதையாக மட்டும் அந்த நியாய சாஸ்திரியால் பார்த்து கடந்து செல்ல முடியவில்லை. கதையின் முடிவில் குற்றுயிராயிருந்து பின் வாழ்வுபெற்ற அந்த யூதனுக்கு யார் பிறனாயிருக்க் முடியும் என்ற வினாவை அந்த நியாயசாஸ்திரியின் முன் வைக்கிறார். வேறு பதில் சொல்ல தெரிவற்றவனாக (Option), “சமாரியனே” என நேரடியாகக்கூற மனம் வராமல், “அவனுக்கு இரக்கம் காட்டியவனே” என்ற நியாயமான பதிலை அந்த நியாய சாஸ்திரி கூறுகின்றார். என்னதான் இருந்தாலும் நியாய சாஸ்திரியல்லவா? அவருக்குள் ஒரு பெரிய மாற்றத்தை வெற்றிகரமாக தொடங்கிவிட்டார் என்பதை உணர்ந்தவராக இயேசு, “நீயும் போய் அந்தபடியே செய்” என்று ஒரு யூதனை, “அந்த நல்ல சமாரியன் போல நீயும் செயல்படு” என்று சொல்லி அனுப்பியது அக்கலச்சூழலில் எப்பேர்பட்ட புரட்சி என்பதை வார்த்தைகளால் கூற இயலாது.

நல்லசமாரியன் இயேசு

இயேசுவும் அந்த சமாரியனைப்போலவே பிறரின் ஆபத்தில் உதவுவதற்கும் மற்ற பிறரோடு இணைந்து வாழ்வதற்கும் எந்த தீட்டுத்தூய்மை சட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, பொருளாதார நிர்பந்தங்களோ, நேரவிரய பயமோ அற்ற சுதந்திர மனிதராக வாழ்ந்தார். இதற்காகவே அவர் கன்னி வயிற்றில் பிறந்தார். ஆம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அனைத்துமே தந்தையின் இரத்தத்தின் வழியாகவும், ஆணின் பாரம்பரிய பெருமையின் வழியாகவும் ஊணியல்பின் வழியாகவும் வருவதால் தான் அவர் இரத்தத்தினாலோ மாம்ச சித்தத்தினாலோ புருஷனுடைய விருப்பத்தினாலோ பிறவாமல் கடவுளாலே பிறந்தார் (யோவான் 1:13). தம்மை விசுவாசிப்பவர்களும் அவ்வாறே மீண்டும் பிறக்க வலியுறுத்தினார். ஆவியினாலே பிறந்தவர்கள் காற்றைப்போல அது வந்த இடமும், போகும் இடமும் தெரியாத நிலையில் (உலகத்தொடர்பிலிருந்த தம்மை விடுவித்துக்கொண்ட தூயநிலையில்) தம்மை விசுவாசிப்பவர்களும் இருக்கவேண்டும் என்று ஆண்டவர் இயேசு போதித்ததின் அர்த்தமே இதுதான் (யோவான் 3:8).

முடிவுரை

காற்றைப்போல மாறு

இயேசு அப்படி ஒரு நல்ல சமாரியனாக இருந்ததால் தான் குற்றுயிராயிருந்த நம்மைத் தேடிவந்து தொட்டு அணைத்து மீட்க முடிந்தது. நாமும் அவர் வழியில் ஒரு நல்ல சமாரியனாக காற்றைப்போல, உலகபாவத்தொடர்பை அறுத்து, இரத்தத்தினாலோ, மாம்ச சித்தத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ பிறவாமல் கடவுளால் பிறந்தவர்களாக மாற்றம் பெற்றால் தான் கடவுளை “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்போம். அப்படியே திகழ்ந்து இயேசுவின் வழியில் இறையரசை கட்டும் துணிவையும் ஆற்றலையும் கடவுள் நமக்கு அருள்வாராக!

#திருச்சபையில்சாதியைஒழிப்போம்

அருள்திரு.பா.கிருஸ்து அடியான்
அருள்திரு.பா.கிருஸ்து அடியான்

CSI சென்னைப் பேராயம்

One thought on “நல்லசமாரியன் Vs யூதராஜசிங்கம்”

Comments are closed.