கிறிச்து பிறப்பு : கடவுள் தரும் அருளின் மேல் அருள்
நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக.


கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பது விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒன்றல்ல மாறாக, அது கடவுள் மானுடத்தின் மீதும் உடன்படைப்புகள் அனைத்தின் மீதும் கொண்ட பேரன்பின் காரணமாக கொடையாகத் தரப்பட்ட ஒன்றாகும். அருளின் மேலே எனும் போதும் யோவான் முதலாம் பிரிவு பதினாறாம் திருமொழியில் “இயேசுவின் நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.” என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இயேசுவின் வழியாக கடவுளின் அருளை விலையின்றிக் கொடையாகப் பெற்றுள்ளோம். இந்த அடிப்படை நம்பிக்கையுடன் கிறிஸ்து பிறப்பும் கடவுளின் அருளும் குறித்து கொடுக்கப்பட்டுள்ள திருமறைப் பகுதிகளுக்குள்ளிருந்து நற்செய்தியைப் பெற்றுக் கொள்வோம்.

1.இணைச்சட்டம் (DEUTORONOMY) 06:01-09 இல்லறவாழ்வில் கடவுளின் அருள்

கடவுள் ஆபிரகாமை அழைத்தப்போது கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த முதல் வாக்குத்தத்தம் “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.” (தொடக்கநூல் 12:2).
பிள்ளை இல்லாதிருந்த ஆபிரகாமுக்கு “இது எப்படி ஆகும்?” என்ற கேள்வியை எழுப்பவே இல்லை. காரணம் ஆபிரகாமின் பற்றுறுதி அப்படிப்பட்டதாயிருந்தது. இப்படியிருக்க, ஒரேயொரு தம்பதியராய் இருந்த ஆபிரகாம் சாரா தம்பதிக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தம் ஆபிரகாமுடன் நின்று போகாமல் தலைமுறைதோறும் இஸ்ரயேலுக்கு கடவுள் வாக்களித்தார் என்பதை கொடுக்கப்பட்டுள்ள இந்த இணைச்சட்ட நூலின் திருமறைப் பகுதியின் வழியாய் நாம் அறிந்துகொள்ள முடியும்.
“நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.” (இணைச் சட்டம் 6:2). என்ற திருவசனத்தில் முழுநிறைவான ஆசி என்பது கடவுளின் அருள் என்பது ஒரு தனிநபருடன் நின்றுவிடாமல் அந்த வாக்குத்தத்தத்தை தாம் தெரிந்துகொண்ட ஆபிரகாமின் வழிமரபினர் அனைவருக்குமானதாக கடவுள் அருளுகிறார்.


ஆபிரகாமுக்கு கடவுள் பாராட்டின அருள் அளவற்றது. இப்படியிருக்க “பிள்ளைகளும் பிள்ளைகளுடைய பிள்ளைகளும்” என்று சொல்லுகிற போது, இது “தலைமுறைதோறும்”, “என்றென்றைக்குமான”, “முடிவிலாதது” என்ற செய்தியை நமக்கு தருகிறது. “ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.” (திருப்பாடல்கள் 100:5) என்ற திருக்கவியும் கடவுளின் முடிவிலா பேரன்பையும் கடவுளின் பேரருளையும் வெளிப்படுத்துகிறது.
ஆக, கடவுளின் அருள் நிலைத்திருக்கின்ற ஒன்றாகவும் பலுகி பெருகுகின்ற ஒன்றாகவும் உள்ளது. அத்தகைய அருள்நிறைவை கடவுள் மனுக்குலத்தின் மீது வெளிப்படுத்தி வருகிறார் என்பதை நினைவில் கொள்வோம். பிள்ளையற்றவராயிருந்த சாராவை அரசர்களின் தாயாக மாறும்படி கடவுள் தம் அருள்நிறைவை சாராவின் மீது பொழிந்தருளினார்.

2. திருப்பாடல் PSALM 127 – குழந்தை பிறப்பில் கடவுளின் அருள்

“அன்னாள்” என்ற தமிழ் பெயரின் எபிரேய பொருள் “கடவுளின் அருள்” என்பதாகும். தன் இனத்தாராலும், குடும்பத்தினராலும், உறவினராலும் பிள்ளையற்றவர் என இழித்துரைக்கப்பட்டவர் அன்னாள். ஆண்டுகள் தோறும் தவறாமல் சீலோவுக்கு சென்று கடவுளின் திருமுன்னிலையில் தம் கசந்த உள்ளத்தை ஊற்றினார். கடவுளின் அருள் அன்னாளின் மீது ஊற்றப்பட்டது. அதுதன் கடந்த கால வாழ்வின் கசப்புகளை எல்லாம் துடைத்துப்போட்டது. ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அன்னாள் முதலாவது கடவுளின் நீதிக்கு முன்னுரிமைக் கொடுத்தார். கடவுள் தனக்குக் கொடுத்த முதற்பேறானவனை கடவுளுக்குக் கொடுக்கத் துணிந்த ஆபிரகாம்-சாராவைப் போல, இங்கு உண்மையாகவே அன்னாவும்-எல்க்கானாவும் தங்கள் முதற்பேறானவனைக் கடவுளுக்காகக் கொடுத்துவிட்டார். அந்தக் குழந்தையைத் தாம் கடவுளுடன் செய்துகொண்ட பொருத்தனையை நிறைவேற்ற ஒப்புக்கொடுத்த போது கடவுள் அதை நீதியாக எண்ணினார்.
ஆகவே, கடவுள் தம் அருள்நிறைவை அன்னாவின் மீது ஊற்றினார். சாமுவேலை இஸ்ரயேலின் மீதும் சுற்றிலுமிருந்த நாடுகளின் மக்களுக்கு முன்பாகவும் திருக்காட்சியாளராகவும், இறைவாக்கினராகவும், அரசர்களை திருநிலைப்படுத்தும் ஆசாரியராகவும் உயர்த்தி வைத்தார். இது அன்னாவை முன்னிட்டு கடவுள் தாமே அருளின் மீது அருளை ஊற்றினார் என்பதை வெளிப்படுத்துகிறது. இப்படியிருக்க, “பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.” (திருப்பாடல்கள் 127:3) என்ற திருவார்த்தை பிள்ளைகள் கடவுளின் அருள்நிறைவின் அடையாளம் என்பதை நமக்கு தெளிவுப்படுத்துகிறது. நாம் அழகிய பெண்/ஆண், பொருளாதாரத்தில் செல்வாக்குடைய, சமூகத்தில் உயர்பொறுப்பில், உயர்வகுப்பில் உள்ள பெண்ணை/ஆணைத் திருமணம் செய்திருக்கலாம். ஆனால், பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் என்பதில் கடவுளின் அருள்நிறைவு உள்ளது. கணவன் மனைவி இசைந்திருப்பதால் மட்டுமே பிள்ளைகளைப் பெற்றுவிட முடியாது. மாறாக, கடவுளின் அருளின் மீது பற்று உடையவர்களாய் நாம் இல்லற வாழ்வை மேற்கொள்ளும் போது தான் கடவுளின் நிறைவான அருள் பிள்ளை பேறு என்ற ஆசியைக் கொண்டு வருகிறது. ஆகையால் கடவுளின் மீது பற்றுள்ளவர்களாய் நாம் இருக்கின்ற போது கடவுளின் அருள் பொங்கி பெருகி வருகிறது. அது ஆரோனின் தலைமீது வடியும் தைலம் போன்றது என்ற சிந்தனையுடன் நாம் ஆண்டவரின் அருளை முன்னிட்டு ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

3. எபேசியர் EPHESIANS 02:04-09 மனித செயலில் கடவுளின் அருள்


நாம் வாழும் உலகில் அறிவியல் என்பதும், பகுத்தறிவு என்பதும் அவசியமானவையாகும். எந்த அறிவியலும் பகுத்தறிவும் விடுதலைக்கானதாக இருத்தல் வேண்டும்.
நாம் வாழும் இந்தியச் சூழலில் நாம் இன்று பெற்றிருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் நம் முன்னோர்களின் உழைப்பினால் கிடைக்கப் பெற்ற கொடைகளாகும். நமக்கு அவை விலையில்லாமல் கிடைத்துள்ளது என்பதால் விடுதலை என்பது இலவசமானது அல்ல. மாறாக, நம்முடைய முன்னோர்கள், சுதந்தரப் போராட்டத் தியாகிகள், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் அதற்கு பின்னால் அவர் சந்தித்த கசப்பான வாழ்வியல் போராட்டங்கள், நீதிக்கானக் கலகங்கள், எண்ணற்ற தலைவர்களின் அறப்போராட்டங்கள், பெரியாரின் பார்ப்பனிய சாதிமறுப்பு போராட்டங்கள், ஆலய நுழைவுப் போராட்டங்கள் என எண்ணற்றோரின் உழைப்புகள் அதில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, பிறரது வாழ்வின் நலனுக்காக தம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கிறிஸ்துவின் சிந்தை அவர்களுக்குள் இருந்தது.


நம்முடைய மீட்பு என்பது நமக்கு விலையற்ற கொடையாகும். ஆனால், உண்மையில் மீட்பு என்பது இலவசமானது அல்ல. அது கிறிஸ்து இயேசுவின் உடல் பிட்கக் கொடுக்கப்பட்டதாலும், இயேசுவின் உதிரம் சிந்தப்பட்டதாலும் நமக்கு மீட்புக் கிடைத்தது. பவுல் சொல்லுகின்ற போது “நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்” (உரோமையர் 5:8) என்ற திருவசனத்தின் படி நம்முடைய மீட்பு என்பது கடவுளின் அன்பும், இயேசுகிறிஸ்துவின் அன்பும் என இருமடங்கு அன்பு நம்முடைய உழைப்பு இல்லாமலேயே நமக்கு கொடையாய் அருளப்பட்டுள்ளது. இந்த விலையில்லாமல் கொடுக்கப்பட்டக் கொடை தான் கடவுளின் அருள் ஆகும். ஆக, கடவுளின் வார்த்தை என்பது கடவுளின் அருள் ஆகும். கிறிஸ்துவின் பிறப்பு எனும் மனுவுருவேற்றல் என்பது கடவுளின் அருளின் பலுகிப் பெருகுதல் ஆகும். ஆண்டவர் இயேசுவின் உடலையும் உதிரத்தையும் திருவருட்சாதனமாகக் கொண்ட திருவிருந்து என்பது கடவுளின் அருளின் நிறைவு ஆகும். இவ்விதமாக, கடவுளின் அருள் பலுகி பெருகுகிறது. அவரது நிறைவினால் அருளின் மேல் அருள் பெறுகிறோம்.

4. மத்தேயு (MATTHEW) 02:13-23 குழந்தை வளர்ப்பில் கடவுளின் அருள்

இயேசுவின் வளர்ப்பு என்பது மிகவும் இடர்பாடு நிறைந்த சூழல்களால் நிறைந்தது. இயேசு பிறந்த காலம் என்பது ரோமையர் அரசியல் வல்லாதிக்கம் செய்த காலம்ஆகும். யூதேயா நாடும் பாலஸ்தீனாவும் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது ஏரோது ரோமப்பேரரசுக் கப்பம் கட்டும் கால்பங்கு அரசனாக இருந்தான். அந்நாட்களில் எகிப்து பாலஸ்தீனக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இடமாயிருந்த படியால் ஏரோது எகிப்துக்குள் நுழையவும் கூட முடியாத ஒரு சமூக, அரசியல் சூழல் இருந்தது. எனவேதான், இயேசுவின் பெற்றோர் பாலஸ்தீன எல்லைக்குள் இருக்கும் பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு செல்கின்றனர்.
இயேசு பிறந்த சில மாதங்களிலேயே ஏரோது அரசன் இறந்து போகிறான். அத்தகைய சூழலில் தான் குழந்தை இயேசுவும் அவரது பெற்றோரும் எகிப்திலிருந்து திரும்புகின்றனர். அப்போது ஏரோதுவின் மகன் கொடுங்கோல் அரசனாக இருந்தான். பெத்லகேம் ஏரோதுவின் ஆளுகைக்குட்பட்ட பாலஸ்தீன் எல்லை என்பதால் செபுலோன் நாட்டின் எல்லைகளுக்குள்ளான நாசரேத் என்னும் இடத்திற்கு புலம்பெயர்ந்து அகதிகளாக செல்கின்றனர். அங்கே அவர்கள் அனைத்து குடியுரிமைகளோடும் வாழ்கின்றனர்.
இன்றைய சூழலில், இந்திய மக்கள் ஏரோதுவைப் போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களாக இருந்து கொண்டு சமயத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் கலவரங்களைத் தூண்டி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, மனித உரிமைகளையும், மனித மாண்பையும் இழந்து பிறந்த மண்ணில் அகதிகளாய் வாழும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சூழலில் இயேசுவின் பிறப்பு என்பதும் இயேசுவின் வளர்ப்பு என்பதும் இதுவரை நாம் பெற்று வந்த உரிமைகளும் வாய்ப்புகளும் கடவுள் நம் முன்னோர்களின் வழியாக நமக்களித்த கொடையாகும். இந்த உரிமைகள் நம் தலைமுறைக்கு பாதுகாக்கப்பட வேண்டுமானால் கடவுளின் அறிவையும் ஆற்றலையும் பெற்று நாம் போராட வேண்டும்.

நீதிக்கான போராட்டங்களில் கடவுளின் அருள் அவரது இருப்புநிலையின் வழியாக நமக்கு கிடைத்திடும்.
அடக்குமுறை ஆட்சியாளர்களின் அரியணைகளைக் கவிழ்த்துப் போட்டு அரசை நம் கைகளில் ஒப்புவிக்கக் கடவுள் திருவுளம் கொண்டுள்ளார். மாந்திரீகம் செய்து,ஆட்சியைப் பிடித்தவனைத் தரையோடு தரையாக்கிப் போட கடவுள் நம் மக்களின் போராட்டத்தில் உடன்போராளியாய் களமிறங்கியிருக்கிறார். எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் கடவுள் ஒடுக்கப்படுகிறார். ஒடுக்கப்படுவோரின் கடவுள் அடக்குமுறையை ஒழித்து அமைதி நிலைநாட்ட வந்திருக்கிறார். அவரது அருள் என்பது அடக்குமுறையை தக்கவைத்துக் கொண்டு அமைதியருளும் ஒன்றல்ல. மாறாக, அடக்குமுறையை அகற்றிப்போட்டு அமைதி தந்து வழிநடத்துவதின் வழியாக அவரது அருளின் மேல் அருள் இயேசுவின் பெற்றோர் யோசேப்பு மரியாவின் வாழ்வில் பெருகியது போல இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்திலும், சொந்த மண்ணில் அகதிகளாய் அழுகுரல் எழுப்புவாரின் வாழ்விலும் விடுதலையாய் அவரது அருளின் மேல் அருள் பெருகிடும் என்பதை உணர்ந்திடுவோம்.
நம்முடைய வாழ்விலும் கூட கடந்த காலங்களின் நம்முடைய மூதாதையர், நம்முடைய பெற்றோர் வாழ்வில் அருள்நிறைவுள்ளவராய் இருந்தது போலவே நம் வாழ்விலும் கடவுள் அருள்நிறைவுள்ளவராய் இருக்கிறார். இனியும் அவரது அருளின் மேல் அருள் நம்மேல் பொழிந்திடும் என்ற பற்றுறுதியை வளர்த்துக் கொள்வோம்.
எல்லா அறிவுக்கும் மேலான இறையருளும் இறையமைதியும் இந்த கிறிச்து பிறந்த நாளில் நம்மை ஆண்டு ஆசிசெய்து வழிநடத்திக் காப்பதாக.


அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
இறைமகன் இயேசுவின் விடுதலைப்பணியில்

மறைதிரு. டால்ட்டன் மனாசே
மறைதிரு. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை

One thought on “”கிறிச்து பிறப்பு””

Comments are closed.