மத்தேயு 12:46-50

• ஒவ்வொரு தனி மனிதராலும் இணைந்து உருவாக்கப்படுவது குடும்பமாகும். குடும்பங்கள் கடவுளை உலகிற்கு வெளிப்படுத்தும் அருட்சாதனங்கள் ஆகும்.

• நற்செய்தி வாசகத்தில் மத்தேயு 12:46-50 ஆண்டவர் இயேசு கூறும் குடும்பங்கள் எமது சமூக, பொருளாதார, இன அலகுகள் எல்லாவற்றையும் தாண்டியதாக காணப்படுகின்றது. அதாவது, கடவுளின் திருவுள விருப்பப்படி வாழும் அனைத்து மக்களும் இயேசுவின் சகோதர சகோதரிகள் என்கிறார். இதன்மூலம், இதுவோர் எல்லைக் கடந்த குடும்பமாகும்.

• திருப்பாடல் – சங்கீதம் 127ல் ஆண்டவருக்கு பயந்து வாழும் குடும்பங்களை அவர் ஆசீர்வதிக்கின்றார். மனைவி, மக்கள் அனைவரும் ஆசீர்வாதத்தின் அடையாளங்களாக கருதப்படுகின்றனர்.

• பழைய ஏற்பாட்டு பாடத்தில் ஆதியாகமம் – தொடக்கநூல் 27:11-29 குடும்பத்தில் நிலவும் பக்கச்சார்பான முடிவுகளைக் குறித்து நாம் பார்க்கின்றோம். அங்கு யாக்கோபின் தாயாகிய ரெபேக்கா, புத்திரசுவீகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் யாக்கோபுவை தந்திரமாக ஆயத்தப்படுத்தி அனுப்புகின்றாள். அதாவது, பிள்ளைகள் தவறிழைக்க பெற்றோர்கள் காரணமாகின்றனர்.

• புதிய ஏற்பாட்டு பாடத்தில் 1 யோவான் 2:7-17 ஆசிரியர் அன்பின் அடித்தளத்தை மையமாகக் கொண்டு குடும்பத்தில் நிலவும் இருளின் கிரியைகளை அகற்றுமாறு வேண்டுகின்றார்.

மன்றாடல்

எங்கள் ஆண்டவரே, எங்கள் குடும்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். குடும்பங்கள் பற்றுறுதியை உருவாக்கும் இடமாக மாறவும், உம்மில் நிலைத்திருப்பதன் ஊடாக குடும்ப உறுப்பினருக்கிடையே அமைதி, புரிந்துணர்வு போன்றவைகள் ஏற்படவும் உம்மை மன்றாடுகின்றோம். உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் என்றென்றும் ஜீவித்து அரசாளுகிற நமது நாதராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இதை மன்றாடுகின்றோம். ஆமென்.