மத்தேயு 2:1-12

• கடவுள் திருமறையில் பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். கடவுளே தன்னை மனமுவந்து பிறருக்கு வெளிப்படுத்தாத பட்சத்தில் கடவுளின் வெளிப்பாட்டை மக்களால் உணரமுடியாது. கடவுள் எம்மீது கொண்ட அன்பினிமித்தமே தன்னை எங்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

• கடவுளின் படைப்புக்கள் திருப்பாடல் – சங்கீதம் 19:1 அவரின் மாண்பை வெளிப்படுத்துகின்றது. மேலும், தொடக்கநூல் – ஆதியாகமம் 12:7, விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 3:14 போன்ற பகுதிகளிலே கடவுளின் வெளிப்பாட்டை நாம் காணலாம். மேலும், கடவுள் தம்மை அடையாளச் சின்னங்களினூடாகவும் வெளிப்படுத்துகின்றார். நிறைவாக, கடவுள் தன்னை கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தியுள்ள எபிரேயர் 12:1 இதனை நாம் சிறப்பு வெளிப்பாடு என அழைக்கின்றோம்.

• பழைய ஏற்பாட்டு பாடத்தில் ஏசாயா 45:18-25 கடவுள் தனது படைப்புகளினூடாகவும் வரலாற்றினூடாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவேளையில் கடவுள் சைரஸ் என்ற மனிதனை தெரிந்தெடுத்தார். அவன் ஒரு யூதன் அல்ல. மாறாக, ஒரு புறவினத்தவன். கடவுள் தனது மீட்புத்திட்டத்தில் சைரசை பயன்படுத்தி அவருக்கூடாக தன்னை வெளிப்படுத்துகின்றார்.

• திருப்பாடல் – சங்கீதம் 67ல் இஸ்ராயேல் மக்கள் தமது வாழ்வில் கடவுளின் வெளிப்பாட்டிற்காக நன்றி கூறுவதை நாம் காண்கின்றோம்.

• புதிய ஏற்பாட்டு பாடத்தில் (திருவெளிப்பாடு – வெளி 21:22-27) யோவான் பத்மோஸ் தீவில் காணுகின்ற காட்சியின் அடித்தளத்தில் அங்கு கோவில் இல்லை. மாறாக, கடவுளின் ஆட்சியே அல்லது இறைவனின் ஆட்சியே வெளிப்படுத்தப்படுகின்றது. மாற்கு 1:14-15 என்ற பகுதியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை ஏற்படுத்தவே இவ்வுலகிற்கு வருகை தந்தார். இவ்வாட்சியே இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது.

• மத்தேயு 2:1-12ல் கிறிஸ்து தன்னை ஞானிகளுக்கு வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். இவ் வெளிப்பாட்டை பொதுவாக யூதரல்லோதருக்கான வெளிப்பாடாக நாம் காணலாம். இதற்கூடாக மத்தேயு நற்செய்தியாளன் நற்செய்தி அனைத்துலகம் சார்ந்தது என வெளிப்படுத்துகின்றார். மேலும், மத்தேயு 28:19-20ல் இவ் உண்மை வெளிப்படுத்தப்படுகின்றது. நற்செய்தியின் ஆரம்பத்திலிருந்து நிறைவு வரை அனைத்துலகம் சார்ந்த நற்செய்தி வெளிப்படுத்தப்படுகின்றது.