மானுடத்தின் முதல் படைப்பும் புதுப்படைப்பும்

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கன்பான முகநூல் நண்பர்களே,

உங்கள் யாவரையும் எம்பெருமான் இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்.

இன்றைய நாளின் காலையில் ஞாயிறு வழிபாட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த வேள்விகளையும் கேள்விகளையும் இங்கு இறையியலாக்கம் செய்ய விழைகிறேன்.

  1. மானுடத்தின் முதல் படைப்பு

நான் அடிப்படையில் இறையியல் கல்லூரியில் இறையியல் பயணத்தில் எபிரேயத் திருமறை மாணவன். அதாவது பழைய ஏற்பாடு மாணவன். அந்த அடிப்படையில் பழைய ஏற்பாடு நூலை அதிகம் படிப்பதுண்டு. நியாயத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அதுவே காரணம். அநியாயத்தை காணும் போதும், நியாயத்திற்காக போராடும் போதும் அதிக கோபம் வருவதற்கு காரணம் பழைய ஏற்பாடு நூலின் திருமொழிகளின் அழுத்தம் அத்தகையதாக இருக்கும். இதற்கு விடை காண முயற்சிக்கும் போது மானுட வரலாற்றின் தொடக்கம் குறித்த சிந்தனை ஆகும்.

கடவுள் உலக தோற்றத்திலே “மண்ணுலகிலே மனிதரை உருவாக்கினதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது” தொடக்க நூல் பிரிவு 6 திருமொழி 6ல் எழுதப்பட்டுள்ளது.

இங்கு கடவுள் மனிதரை உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இந்த முதலாம் படைப்பில் பிழையிருப்பதாக கடவுளே சிந்தித்திருக்கிறார். காரணம், ஆணையும் பெண்ணையும் “உண்டாக்கினார்”. அவர்கள் உண்டாக்கப்பட்ட போதே ஊனியல்பின் இச்சைகளுக்கு உட்படத்தக்க வயதுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்பதை தொடக்க நூல் 2ஆம் பிரிவிலேயே திருமண வாழ்விற்குள்ளாக இணைக்கப்படுகிறார்கள் என்பதிலிருந்து புலப்படுகிறது.


இந்த மானுட படைப்பினை உளவியல் ரீதியாக அணுகும் போது இந்த திருவசனத்தை நாம் அடிக்கடி படித்திருக்க வாய்ப்புண்டு. நாம் பல நேரங்களில் அநியாயங்களை கண்டு வெகுண்டு எழும்போது மானுடம் பாவத்தில் விழுந்து போனதற்காய் கடவுளே வருந்தினார். கோபப்பட்டார். மனுக்குலத்தை சற்றே நீங்கலாக முழுமையாக அழித்துப்போட்டார். இந்த ஒற்றை பார்வையோடு மட்டுமே நாம் மனிதரை அணுகுவதின் விளைவே பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது வன்மமான அணுகுமுறைக்கு வழிவகுக்கிறது(aggressive approach). கடவுளே இங்கு உக்கிரக் கோபமுடையவராக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  1. மானுடத்தின் புதுப்படைப்பு

நான் எபிரேய மாணவனாக இருந்தாலும் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பதினாலே புதிய ஏற்பாடு எனும் கிறிஸ்தவ கிரேக்க திருமறையையும் படித்திருக்கிறேன்.

மானுடத்தின் முதலாம் படைப்பில் பிழை ஏற்பட்டதை உணர்ந்த கடவுள் ஒரு “U turn” எடுத்து மானுடத்தை மாற்றுருவாக்கம் செய்ய முயற்சித்தார்.

இப்பொழுது கடவுள் மனிதரை “உண்டாக்காமல்””பிறப்பிக்க” (not from the dust, but from the womb) செய்கிறார். எப்படி செய்கிறார்? முதலாம் படைப்பில் கடவுள் மண்ணிலிருந்து மனிதரை தம்முடைய சாயலில் படைத்தார். இது முதல் படைப்பு. புதுப்படைப்பில் கடவுள் பிழைப்பட்ட மானுடத்தை சரிப்படுத்த தாமே மனிதராக வந்து பிறந்தார்.

“இயேசு” என்ற பெயரில் கடவுள் மனிதராக தொப்புள் கொடி உறவாய் வந்து பிறந்தார். இப்படி புதுப்படைப்பான மனிதனாக கடவுள் உலகில் வந்து பிறந்த போது “வானமே இறங்கி வந்து வாழ்த்தியது” என்பதனை லூக்கா நற்செய்தி 2 ஆம் பிரிவு 14 ஆம் திருமொழியில் படிக்கிறோம். இந்த புதுப்படைப்பில் கடவுள் தமது மூர்க்கமான குணநலனைத் தூக்கியெறிந்து (God transforms His aggressive nature towards assertive nature) அமைதி அரசராக வந்து பிறந்தார்.

மானுடத்தை எதிர்மறையாகவே பார்க்க பழகிய நாம் சிந்தனையில் மாற்றுருவாக்கம் உடையவர்களாக இயேசுகிறிஸ்துவில் வந்து பிறந்த கடவுளை போல மானுடத்தை பார்த்து விசனப்படுகின்றவர்களாய் கோபப்படுவதை தவிர்த்து மானுடத்தின் அன்பின் பொருட்டு விசனப்படுகின்ற மக்களாக பரிந்து மன்றாடவும் பரிவுள்ளம் உடையவராகவும் ஒடுக்கப்படும் மக்களைப் பார்த்து கண்ணீர்விடும் (லூக்கா 19:41) புதுப்படைப்பின் முதல் படைப்பான இயேசுவை முன்னிறுத்தினால் நம் சிந்தையிலே மாற்றம் வரும். அப்பொழுது நாம் மறுரூபமாக்கப்படுவோம்.

முதல் படைப்பின் மனிதருக்குரிய பாவ சுபாவங்களைக் களைந்து புதுப்படைப்பின் முதல் மனிதராகிய இயேசுவின் நற்குணங்களை அணிந்துகொள்வோம். கடவுள் தம் தூய ஆவியானவர் வழியாக நமக்கு ஆற்றல் வழங்கி காப்பாராக. மூவொரு கடவுளின் நிறைவான அன்பும் அருளும் ஆசியும் நமக்கு நிறைவாயிருப்பதாக.

மறைதிரு. டால்ட்டன் மனாசே
மறைதிரு. டால்ட்டன் மனாசே

ஆற்காடு லுத்தரன் திருச்சபை

2 thought on “புதுப்படைப்பு”
  1. முதல் படைப்பில் கடவுள் பிழை செய்திருப்பது போல் தங்களின் படைப்பில் உணருகிறேன் இது சரியா என்பதை தெளிவுபடுத்தவும்
    தங்களின் ஆய்வின் மூலம் கடவுள் நாமம் மகிமை படுவதாக ஆமென்.

Comments are closed.