2 ஏப்ரல் 2023

கிறிஸ்துவே சமாதானத்தின் அரசர்
Christ – The King of Peace
மாற்கு 11:1-11

• நாம் வாழும் உலகில் மனிதன் தனக்குள்ளே பிளவுப்பட்டுள்ளான். இரண்டு நபர்களுடன் சமாதானமற்ற நிலை. சமூகங்களுக்கிடையே அமைதியற்ற நிலை. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உறவுகள் சீரழிந்த நிலை. மேலும், மனிதன் இறைவனுடன் சரிவர உறவை பேணாத நிலை. இதனால் அமைதி இழந்த மனிதன் அமைதிக்காக ஏங்குவதை நாம் பார்க்கின்றோம்.

• சகரியா 9ம் அதிகாரத்தை நாம் படித்துப் பார்க்கும்போது, ஆண்டவர் இயேசுவின் பவனியின் நிழல் மிளிருவதை நாம் காணலாம். அதாவது, ஆண்டவர் இயேசு ஓர் எளிமையானவராகவும் நீதியுள்ளவராகவும் வர்ணிக்கப்படுகின்றார். அவ்வாறான தோற்றத்தையுடைய ஆண்டவர் இயேசு கழுதை குட்டியின்மீது பவனி வருவார். ஆகவே, “சீயோன் மகளே நீ அஞ்சாதே” எனக் கூறப்படுகின்றது. பொதுவாக கழுதை ஓர் அமைதியின் அடையாளமாக வர்ணிக்கப்படுகின்றது. கி.மு 168ம் ஆண்டில் எருசலேம் ஆலயத்தை கிரேக்கர் வசமிருந்து கைப்பற்றிய 4ம் அந்தியோஸ் எபிபானஸ் ஆலயத்தை அபிஷேகம் செய்யும்போது, கழுதையின்மீது அவருடைய வருகை காணப்பட்டதை நாம் அவதானிக்கலாம். ஏனெனில், அவர் ஓர் அமைதியின் அரசனாக தன்னைத் தானே வர்ணித்திருந்தார்.

• திருப்பாடல் – சங்கீதம் 24ல் பூமியும் அதனுள்ள அனைத்தும் இறைவனுடையது. அவர் மாட்சிமை மிக்க தலைவர். வெற்றி வேந்தர் என வர்ணிக்கப்படுகிறது. சிறப்பாக, இவ்வுலகமும் அதிலுள்ள குடிகளும் கடவுளுடையது என நாம் எண்ணுவோமே என்றால் காணிச்சண்டை, நீரை மையமாகக் கொண்ட சண்டை, எல்லைப் பிரச்சினைகள், வடகொரியா – தென்கொரியாவிற்கிடையில் நிலவும் பதற்றம், சீனா – தாய்வானுக்கிடையிலே நிலவுகின்ற பதற்றம், ரஷ்யா – உக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் யுத்தம் போன்றவைகள் அற்ற ஓர் அமைதி பூமியாக இவ்வுலகம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

• எபேசியர் 2:11-18 வரையுள்ள பகுதியில், கிறிஸ்துவின் மரணத்தை ஓர் ஒற்றுமையின் சமாதானத்தின் அடையாளமாக பவுல் வர்ணிக்கின்றார். கிறிஸ்து தனது மரணத்தினூடாக பிரிந்து நின்ற இரு தரத்தாரையும் ஒற்றுமையாக்குகின்றார் எனக் கூறுகின்றார். அதாவது, பிரிந்து நின்ற மக்கள் இணைவதன் ஊடாக சமாதானம் ஏற்படுத்தப்படுவதை நாம் காண்கின்றோம். இதற்கு கிறிஸ்துவின் வாழ்வும் பணியும் கிரயமாக்கப்பட்டுள்ளது. எனவே, சமாதானம் இலவசமாக இருந்தாலும் அது கிரயம் மிக்கதாக காணப்படுகின்றது.

• மாற்கு 11:1-11 வரையுள்ள பகுதியில் இயேசுவின் எருசலேம் பவனி காணப்படுவதை பார்க்கிறோம். இது ஓர் சமாதானத்தை அல்லது அமைதியை மையப்படுத்திய பவனியாகும். ஆண்டவர் இயேசு தனது எருசலேமை நோக்கிய இறுதி பயணத்தை மாற்கு 8,9,10 ஆகிய பகுதிகளினூடாக எமக்கு வெளிப்படுத்துகின்றார். சிறப்பாக, இயேசுவை சுமந்து வந்த கழுதை ஓர் அமைதியின் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. மேலும், அங்கு இயேசுவைக் கண்ட மக்கள் ஓசான்னா என போற்றினார்கள். ஓசான்னா என்பதற்கு, “ஆண்டவரே எங்களை இன்று இரட்சித்தருளும்” எனப் பொருளாகும். அதாவது, யூத மக்கள் உரோம அரசியல் அடிமைத்தனத்திற்குள் அகப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். எனவே, அரசியல் அடக்குமுறையிலிருந்து எம்மை இரட்சித்தருளும் என்பது ஓர் விளக்கமாகும். மேலும், யூத மக்கள் ஆலயத்திற்குள்ளே அறவிடப்பட்ட வரிச்சுமைகளினால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். எனவே அத்தகைய துன்பத்திலிருந்து எம்மை விடுவித்தருளும் என்பது இன்னுமோர் விளக்கமாகும். மேலும், ஆண்டவரை நோக்கி, மெசியாவின் பாடலை மக்கள் பாடிய வேளையிலே சமயத்தலைவர்கள் கோபங்கொண்டு மெசியாவுக்குரிய பாடலை மெசியாவின் வருகையின்போதே பாடவேண்டும் எனக் கூறி மக்களை நிறுத்தினர். அப்பொழுது மக்கள் பாடாத பட்சத்தில் கற்கள் பாடும் என்ற தொனி வெளிக்கொணரப்படுகின்றது. எனவே, பல்வேறுப்பட்ட வன்முறைகளின் மத்தியில் ஆண்டவர் இயேசு அமைதியை சமாதானத்தை ஏற்படுத்த வல்லவர் என்ற தொனி மக்கள் மத்தியிலிருந்து வெளிவருவதை நாம் பார்க்கின்றோம்.

• எனவே, நாங்கள் இன்று எதிர்நோக்குகின்ற அமைதி ஒரு மனிதனை கலகக்காரன் எனக் கருதி, அவனைக் கொல்வதனூடாக தற்காலிக அமைதியை நாம் அடையும் ஓர் அமைதி அல்ல. பிலாத்து இயேசுவை கொன்றுவிடுவதன் ஊடாக தற்கால அமைதியை பெற்றுக்கொள்ள முடியும் என எண்ணி செயல்பட்டான். தோல்வியும் கண்டான். எனவே இயேசு கொண்டுவரும் அமைதி ஓர் நீதியுள்ள அமைதி. சங்கீதம் – திருப்பாடல் 85:10ல் நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. அத்தகைய அமைதி எங்கள் தேசத்தில் உலகத்தில் நிலவ அதற்காக செயல்பட அமைதியின் கருவிகளாக எங்களை நாங்கள் மாற்றிக் கொள்வோமாக ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்

ஓவியம்: டோனி கிராஸ்பிய்