6 ஏப்ரல் 2023

பெரிய வியாழன்
வாழ்வு தரும் உணவு

The Life Giving Bread


யோவான் 6:47-58

• உணவு மனித வாழ்வில் முக்கியமானதொன்றாகும். யூத முறைமைபடி உணவு என்பது நீதிச்சட்டம் அல்லது நியாயப்பிரமாணத்தைக் குறிக்கின்றது. இங்கு ஆண்டவரே தானே வாழ்வு தரும் உணவு எனக் கூறுகின்றார். 1956ம் ஆண்டு அனைத்துலக திருச்சபை மன்றத்தின் பொதுக்கூட்டம் அமெரிக்காவில் உள்ள எபென்சஸ்டன் நகரில் நடைபெற்றது. அதன் கருப்பொருளாக ‘கிறிஸ்துவே வாழ்வு தரும் உணவு’ என்பதாகும்.

• விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 12ம் அதிகாரத்தில் புலப்படும் பாஸ்கா என்பது ஓர் விடுதலையின் உணவாகும். இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்று தமது வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்துக்குள் பிரயாணப்பட்ட நாட்களில் விடுதலையின் நிகழ்வை பாஸ்கா விருந்தூடாக நினைந்து கொண்டனர். ஒரு வயதுள்ள மாசு மருவற்ற ஆட்டுக்குட்டியை வெட்டி, வாழ்வில் ஏற்பட்ட கசப்பின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில் கசப்பான கீரையை அருந்தி, கையிலே கோலேந்தி, காலிலே செருப்பணிந்து இப்பண்டிகையை அனுஷ்டித்தனர். இது ஒரு வரலாற்றுடன் தொடர்புடைய பண்டிகையாக இருந்தமையால் வீட்டில் உள்ள சிறுபிள்ளை பண்டிகையில் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றார்.

• சங்கீதம் – திருப்பாடல் 116ல் இறைவனை ஓர் விடுதலை அருளும் கடவுளாக ஆசிரியர் காண்கின்றார். தனக்கு நேரிடுகின்ற எல்லா ஆபத்துக்களிலும் இருந்து விடுவித்து, தனக்கு வாழ்வளிப்பவர் கடவுளே என தனது பற்றுறுதியை அறிக்கையிடுவதை நாம் பார்க்கிறோம். 1 கொரிந்தியர் 11:23-26 வரையுள்ள பகுதியில் பரிசுத்த பவுல் திருவிருந்தை குறித்து நற்செய்தியாளர்கள் எழுதுவதற்கு முன்பதாக தனது கடிதத்தில் வடித்துள்ளார். இங்கே திருவிருந்து என்பது ஓர் உடன்படிக்கையின் விழாவாக கருதப்படுகின்றது. அதாவது, கொய்னோனியா என்று அழைக்கப்படும் கிரேக்க பதம் ஓர் செல்வந்தன் தனது பணத்தின் ஒரு பகுதியை ஏழை மனிதரிடத்திலே கொடுத்து, நீயும் வியாபாரம் செய்து என்னைப் போன்று ஒரு நிலைக்கு வா என அழைக்கும் ஓர் உன்னத அழைப்பாகும். இதே போன்று திருவிருந்தை நாம் அனுஷ்டிக்கும்போது, எமக்கு அருகில் பந்தியில் இருப்பவர் எமது நிலையிலும் பார்க்க குறைந்த நிலையில் இருப்பாரானால் அவரை எமது நிலைக்கு உயர்த்துகின்ற ஓர் உடன்படிக்கையின் அறிக்கையாக பொருத்தனை செய்யும் இடமாக திருவிருந்து மேசை காணப்படுகின்றது. எனவே, இதுவோர் பொருத்தனையின் இடமாகும். எனவேதான் ஆசிரியர் கிறிஸ்துவின் சரீரம் இன்னதென்று சோதித்து நிதானித்து அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். இங்கு கிறிஸ்துவின் சரீரம் என்பது திருச்சபையை குறித்து நிற்கின்றது.

• யோவான் 6ம் அதிகாரத்தில், நாங்கள் அப்பங்கள் பலுகிய புதுமையைக் காணலாம். ஆண்டவர் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவளிப்பதை பார்க்கின்றோம். இந்த உணவளிக்கும் செயலோடு கூடவே, திருவிருந்து நிகழ்வையும் யோவான் தொடர்புபடுத்துகின்றார். மத்தேயு, மாற்கு, லூக்கா போன்ற நற்செய்திகளில் திருவிருந்து வெறுமையாக அனுஷ்டிக்கப்பட்டாலும், இங்கு யோவான் நற்செய்தியில் அப்பங்கள் பலுகிய நிகழ்வோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. இயேசு அப்பத்தை எடுத்தல், ஆசீர்வதித்தல், அதனை பிட்டல், பகிர்ந்தளித்தல் ஆகிய நிகழ்வுகள் இந்த புதுமையோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. இங்கு திருவிருந்தின் ஆழ்ந்த அர்த்தத்தை உணராத மக்கள் மறுபடியும் வயிறார உண்ண வந்த வேளையில், ஆண்டவர் அழியாத உணவாகிய திருவிருந்தைக் குறித்து எடுத்துக் கூறுகிறார். இவ்வுணவை உண்டவர்கள் இறந்தார்கள். மாறாக, என் சரீரத்தை புசித்து, என் இரத்தத்தில் பானம் பண்ணுகிறவர்கள் என்றும் ஆன்மீக மரணத்தை காணமாட்டார்கள் எனக் கூறுகின்ற வார்த்தைகள் கிறிஸ்துவே உயிர் தருகின்ற உணவு, வாழ்வு தருகின்ற உணவு என்பதை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன், இங்கு நானே உயிருள்ள உணவு என்பது யாத்திராகமம் 3:14 பகுதியில் காணப்படும், நான் இருக்கிறவராகவே இருக்கின்றேன் என ஆண்டவர் தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகின்றார். இங்கு இருக்கிறவராகவே இருக்கின்றவரே, மெசியாவாகிய கிறிஸ்துவையும் உலகிற்கு அனுப்பியுள்ளார். எனவே, அவர் மெசியா கிறிஸ்து என்ற அர்த்தத்தையும் இங்கு இணைத்து பார்த்தல் அவசியமாகின்றது.

• அப்பங்களை பலுகச் செய்த அற்புதத்தில் அல்லது புதுமையில் பகிர்வு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. எவ்வாறு ஆண்டவர் இயேசு தன்னை மக்களுடன் பகிர்ந்துகொண்டாரே அதாவது போஜனம் அளிப்பவரை விட பந்தியில் அமர்ந்திருப்பவரே பேறுபெற்றோர் என்ற கூற்றுக்கமைய எமக்கு போசனத்தை தருகின்ற ஆண்டவர் எங்களை மேன்மைபடுத்தியுள்ளார். எனவே, நாமும் கிறிஸ்து எவ்வாறு தமது சரீரத்தையும் இரத்தத்தையும் மற்றவர்வர்களுடன் பகிர்ந்துகொண்டாரோ அதேவகையில் எமது சரீரத்தையும் இரத்தத்தையும் நாம் மற்றவர்களுக்காக உடைக்க சிந்த நாம் அழைக்கப்படுகின்றோம். திருவிருந்தின்போது காட்டிக்கொடுப்புக்கள், மறுதலிப்புகள், இயேசுவின் வன்முறை சார்ந்த மரணங்கள் போன்றவைகள் ஞாபகப்படுத்தப்பட வேண்டும். அதற்கூடாகவே இயேசுவின் தியாகம் அர்த்தமுள்ளதாக காணப்படும்.

• பெரிய வியாழன் அன்று திருவிருந்து மாத்திரமல்ல, இயேசு தமது சீடர்களின் பாதங்களை கழுவிய நிகழ்ச்சியும் பெறுமதி மிக்கதொன்றாகும். யோவான் 13:1-10ல் பந்தியில் இருந்த இயேசு திடீரென்று எழுந்து தன்னைத் தானே வெறுமையாக்கி சீடர்களின் பாதங்களை கழுவ ஆரம்பித்தார். அக்காலத்தில் நிலவிய அடிமை கால்களைக் கழுவும் நிகழ்வுக்கு எதிராக இயேசு தன்னை அடிமையாக்கிக் கொண்டது அவர் உருவாக்கிய மாற்றுக் கலாசாரம் ஆகும். மேலும், பாதங்களைக் கழுவும் நிகழ்வு ஓர் விளம்பரமற்ற பணிக்கான அடையாளமாகும். மேலும், திருப்பணி வார்த்தைகளுக்குள் மட்டும் கட்டுப்பட்டது ஒன்றல்ல. அது செயல் வடிவம் சார்ந்தது என்பதையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது. பிலிப்பியர் 2:5-11ல் தன்னைத் தானே வெறுமையாக்கி இவ்வுலகிற்கு வந்த இயேசு தமது மரணத்திற்கு முன்பதாகவும் தன்னைத் தானே வெறுமையாக்கியதை நாம் இங்கு காணலாம். எனவே, நாமும் எங்களை வெறுமையாக்கும்போது மாத்திரமே இறைசெயற்பாட்டை உணரலாம். அன்று பிறப்பின்போது இயேசு தன்னை வெறுமையாக்கியதன் விளைவாகவே அவரின் தெய்வ நிலையில் இருந்து அவர் பூரண மனித நிலைக்கு இறங்கி வந்தார். எனவே, இன்றும் இயேசுவினுடைய மரணம், உயிர்ப்பு, வாழ்வு போன்றவைகள் தெய்வ நிலைக்கு எங்களை உயர்த்தாமல் மனித நிலைக்கு நாம் இறங்கி வர எங்களை நாங்களே ஆயத்தப்படுத்த இந்த பெரிய வியாழன் எங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்புரிவதாக.

ஆக்கம்: அற்புதம்