23 ஏப்ரல் 2023

கிறிஸ்துவில் விருந்தோம்பலுக்கான அழைப்பு

Invitation to Christ’s Hospitality

யோவான் 21:1-14

கடவுளுடைய அன்பை வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கூடாக தனி
மனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ அறிவிப்பதே தூதுப்பணி ஆகும்.
இத்தூதுப்பணியில் விருந்தோம்பல் ஓர் முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

ஆதியாகமம் – தொடக்கநூல் 18ம் அதிகாரத்தில், ஆபிரகாம்
தன்னுடைய கூடாரத்திற்கு வருகை தந்த மூன்று புருஷர்களுக்கு
விருந்தோம்பலை மேற்கொள்ளுகின்றார். ஈற்றிலே, அவர்கள் தேவதூதர்கள் என அடையாளம் கண்டுகொள்ளுகின்றார். அறியாமல் தெரியாமல் விருந்தோம்பலை வழங்கினாலும் ஈற்றில் ஆசீர்வாதத்திற்குரியவராக ஆபிரகாம் மாற்றப்படுகின்றார். விருந்தோம்பல் எம்மை நியாயந்தீர்க்கிற அடையாளச் சின்னமாகும். மத்தேயு 25:31-46 வரை உள்ள பகுதியில், இறுதித் தீர்ப்பில் விருந்தோம்பல் முக்கிய இடத்தை எடுக்கின்றது.

திருப்பாடல் – சங்கீதம் 15ல், விருந்தோம்பலின் அடையாளச்
சின்னங்களாக நற்குணங்கள் விளங்குகின்றன. விசேஷமாக தோழருக்கு தீங்கு செய்யாமல், அநியாயம் புரியாமல், பணத்தை வட்டிக்குக் கொடுக்காமல் நற்பலன்களை உடையவர்களே கர்த்தருடைய சமூகத்தில் பேறுபெற்றவர்களாக காணப்படுகின்றனர். அவர்களே இறைவனால் ஏற்புடையவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

எபிரேயர் 13:1-8 வரையுள்ள புதிய ஏற்பாட்டு பகுதியிலும்கூட
இறைவனுக்கு ஏற்கும் நற்பண்புகளைப் பற்றி ஆசிரியர் பேசுகின்றார்.
முடிந்தளவு எல்லோருடனும் சமாதானத்துடன் வாழவும், விருந்தோம்பலுடன் மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும் ஆசிரியர் அழைக்கின்றார். ஆண்டவர் இயேசுவிடத்திலே இவ்விருந்தோம்பலின் பண்பை நாம் அடிக்கடி நாம் காண்கின்றோம். லூக்கா 7:36-50 வரையுள்ள பகுதி இயேசுவின் விருந்தோம்பலுக்கான அடையாளமாகும். ஆண்டவர் எப்பொழுதும்
விருந்தைப் பெறுபவராக மாத்திரமன்றி, மக்களுக்கு விருந்தளிப்பவராகவும் காட்டப்படுகின்றார். யோவான் 6:1-15ம் வசனம் வரையுள்ள பகுதியில், ஆண்டவர் மக்களுக்கு உணவளிப்பவராகவும் காட்டப்படுகின்றார்.

யோவான் 21:1-10 வரையுள்ள பகுதியில், உயிர்த்தெழுந்த ஆண்டவர்
மறுபடியுமாக சீடர்களுக்கு காட்சியளிக்கின்றார். இங்கு பேதுரு, தான்
மறுபடியும் மீன்பிடிக்கச் செல்வதாக கூறுகின்றார். அதாவது தனது
திருப்பணியில் தோல்வியடைந்த நிலையை அவர் உணர்கின்றார். ஓர்
வெற்றிடத்தை வெறுமையை உணர்கின்றார். தனது பழைய வாழ்வை
நோக்கி நகர்கின்றார். இப்படியான வேளையில் இயேசு மறுபடியும்
பேதுருவோடு பேசுகின்றார். தூதுப்பணியின் மையமாகிய மனிதர்களைப் பிடிக்கும் பணிக்குள் மறுபடியும் அழைக்கின்றார். அப்பொழுது இயேசுவைக் கண்டவர்கள் அவர் ஆண்டவர்தான் என அறிக்கையிடுகின்றனர். இவ்வறிக்கை எப்பொழுதும் உரோம அரசியலுக்கு எதிரான அறிக்கையாகும். அப்பொழுது இயேசு, விருந்தோம்பலை விரும்பி அவர்களிடமிருந்து பொரித்த மீன் கண்டத்தை வாங்கி உண்ணுவதைப் பார்க்கின்றோம்.

விருந்தோம்பல் சிறப்பாக எம்மிடையே ஐக்கியத்தை ஏற்படுத்திக்
கொள்வதற்கும், நாம் இறைவனுடன் சிறந்த தொடர்பை பேணுவதற்கும்,
இறுதி தீர்ப்பில் நாம் எம்மை காத்துக்கொள்வதற்குமான ஓர்
அடையாளமாகும். இதனை எமது நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்க நாம் முற்படுவோமாக.

ஆக்கம்: அற்புதம்