25 ஏப்ரல் 2023
மாற்கு நற்செய்தியாளன்
லூக்கா 12:4-12 / மாற்கு 14:43-52

நாம் ஒவ்வொருவரும் எமது வார்த்தையாலும், வாழ்க்கையாலும் இயேசுவாகிய நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகின்றோம். மத்தேயு 28:19-20ல், நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுபோய் சகல மக்களுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள் என ஆண்டவர் கூறுகிறார். இந்த கட்டளைக்கு திருச்சபை அடிபணிய வேண்டிய தேவை காணப்படுகின்றது.

மாற்கு என்னும் இயேசுவின் சீடன் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து புனித பவுலின் பிரயாணத் தோழனாக நற்செய்தியை அறிவித்தார். முதலாம் வேதபோதக பயணத்தில் இடைநடுவில் பிரயாணத்திலிருந்து விலகிச் சென்ற காரணத்தினால் இரண்டாம் வேதபோதக
பயணத்தில் பவுல் மாற்குவை சேர்த்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை. எனினும், பர்னபா மாற்குவோடும் பவுல் சீலாவோடும் பிரயாணத்தை ஆரம்பிக்கின்றனர். எனினும், பவுல்
மாற்குவின் தவறை கண்டித்தாரே தவிர மாற்குவை வெறுக்கவில்லை.

எனவேதான், கொலோசேயர் 4:10ல் மாற்குவை அழைத்து வாருங்கள். அவர் மிகவும் நல்லவர் என மெச்சுகின்றார். இந்த பாராட்டும் பண்பே மாற்கு நற்செய்தி உருவாகுவதற்கு அடிப்படை காரணமாக இருந்ததை மறந்துவிட முடியாது. வாசிக்கக்கேட்ட பழைய ஏற்பாட்டு பகுதியில் ஓசியா 6ம் அதிகாரத்தில், இறைவன் மனமாற்றத்திற்காக இஸ்ராயேல் மக்களை அழைக்கும் காட்சியை நாம் பார்க்கின்றோம்.
அதாவது, இறைவன் இறைவனுக்கு எதிராக மக்கள் தவறிழைத்தப் போதிலும், மறுபடியும் இறைவன் அவர்களை சேர்த்துக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறார் என்ற செய்தி வருகின்றது.
எனவே, நற்செய்தியாளர் மக்களை கடவுளுடன் ஒப்புரவாக்கும் பணிக்கு அழைக்க அழைக்கப்படுகின்றார். கடவுளுடன் மக்களை ஒப்புரவாகுதலுக்கு அழைக்கும் ஊழியத்தையே
ஒப்புரவாகுதலின் ஊழியம் என அழைக்கின்றோம். 2 கொரிந்தியர் 5:16-20 வரையுள்ள பகுதியிலுள்ள ஒப்புரவாகுதலின் ஊழியத்தை இங்கு மாற்கு ஆற்றியதை நாம் பார்க்கின்றோம்.

திருப்பாடல் – சங்கீதம் 119ல், ஓர் திருப்பலியாளன் நீதிச்சட்டம் மற்றும்
நியாயப்பிரமாணம் ஆகியவற்றில் நிலைத்திருக்க வேண்டிய பண்பை உடையவனாக காணப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஓர் நற்செய்தி பணியாளன் இறைவார்த்தையைக் கற்றுக்கொள்வதிலும் அதைக் கற்றுக்கொடுப்பதிலும் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் செயலாற்ற வேண்டும் என்ற கருத்து சிறப்பாக புதிய ஏற்பாட்டுப்
பகுதியிலும் வலியுறுத்தப்படுகின்றது. மாற்கு இறைவார்த்தையை எழுத்து வடிவத்தில் வடித்ததன் ஊடாக அக்காலத்தையும் இக்காலத்தையும் தொடர்புபடுத்தும் ஒருவராக வர்ணிக்கப்படுகின்றார்.

நற்செய்தி பகுதியில் லூக்கா 12:4-12 வரையுள்ள பகுதியில் ஓர் நற்செய்தி
பணியாளனின் இன்னொரு பக்கம் காண்பிக்கப்படுகின்றது. அதாவது, அந்த நற்செய்தி பணியாளன் சிறப்பாக எத்தகைய சூழ்நிலையிலும் தான் அறிவிக்கும் நற்செய்தியில் நிலைத்திருந்து அதற்காக துயரங்களை சந்திக்கவும் மரணத்தை ருசிப்பார்க்கவும்
அழைக்கப்படுகின்றார். அது அவனுடைய அழைப்பிற்கான ஓர் கிரயமாகும். எனவே, சரீரத்தை அழிக்கவல்லவர்களை அல்ல மாறாக ஆன்மாவை அழிக்கவல்ல ஆன்மாவுக்கு பொறுப்புகூற உரியவருக்கே நாம் பயப்பட வேண்டும் என்ற செய்தி கூறப்படுகின்றது.

எனவே ஓர் நற்செய்தியாளன், துயரப்படுபவர்களுடன் தன்னை
அடையாளப்படுத்தவும் துயரப்படுத்துபவர்களை சவால் இடவும் நன்மை செய்து துயரங்களை அனுபவிக்கவும் நிறைவில் கிறிஸ்துவின் நற்செய்திக்காக மரிக்கவும் அழைக்கப்படுகின்றான்.
இதனை நாம் எமது கருத்திலே கொள்வோமாக.

ஆக்கம்: அற்புதம்