30 ஏப்ரல் 2023

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான ஒன்றித்த உறவு

 Communion with Rise Christ in Daily Life

லூக்கா 24:13-33

இறைவனுடன் மனிதன் பல வழிகளில் உறவை ஏற்படுத்திக் கொள்ளுகின்றான். இறைவனின் வெளிப்பாட்டை பல வழிகளில் அவன் புரிந்துக் கொள்ள முற்படுகின்றான். அது தனிநபர் சார்ந்த வெளிப்பாடுகளாகவோ சமூகம் சார்ந்த வெளிப்பாடுகளாகவோ காணப்படுகின்றன.

விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 40:34ம் வாக்கியம் முதல் உள்ள பகுதியில், இறைவனுடைய வெளிப்பாட்டைக் கண்டுகொள்வதற்காக அங்கு மேகம் அடையாளச் சின்னமாகக் காண்பிக்கப்படுகின்றது.
மேகத்தினுடைய அசைவை அடித்தளமாகக் கொண்டு இறைசித்தம் என்ன என்பதை இஸ்ராயேல் மக்கள் கண்டுகொள்கின்றனர். இது இறைவன் தங்களுடன் தொடர்புபடுத்தும் ஓர் தொடர்பாடல் முறை என்பதைக் காண்கின்றனர்.

திருப்பாடல் – சங்கீதம் 23ல், இறைவனை மக்கள் ஆயராக கருதுகின்றனர் மேய்ப்பனாகக் கருதுகின்றனர். அதாவது தங்களுக்குரிய அனைத்தையும் வழங்குபவராகவும் போசணை பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதோடு மாத்திரமன்றி எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாப்பவராகவும் எதிரிகளுக்கு முன்பதாக தம்மை மகிமைப்படுத்துபவராகவும் கடவுளைக் காண்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் எல்லாம் வாழ்வில் நடைபெறும்போது, இறைவெளிப்பாட்டிற்கு சான்றுபகர்கின்றனர்.

பிலிப்பியர் 3:18-26 வரையுள்ள பகுதியில், அங்கே இறைவெளிப்பாட்டின் அடையாளமாக மனித வாழ்வை பவுல் வைக்கின்றார். அதாவது, மனித வாழ்வு இறைவனுக்கு சான்று பகர அவருக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்த எமக்களிக்கப்பட்ட ஓர் ஊடகமாகும். எனவே இந்த சரீரம் இறைவனுக்கும் எமக்குமிடையேயான ஓர் ஊடகச் சின்னமாகும். இதனை தகுந்த முறையில் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்.

லூக்கா 24ம் அதிகாரத்தில், எம்மாவூருக்கு சென்ற சீடர்கள் மத்தியில் ஆண்டவர் இயேசு அப்பத்தைப் பிட்டு அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டபோது அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டனர். சிறப்பாக, அப்பம் பிட்கப்படும் வேளையில் அவர் ஆண்டவர் என்று அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். எனவே, திருவிருந்து அல்லது இராப்போசனம் இறைவனுடன் நாம் தொடர்பு கொள்ளும் அடையாளச் சின்னமாகும்.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்றும் பல வழிகளில் எம்முடன் தொடர்புகொள்கின்றார். அவருடைய வெளிப்பாடு, இறைவார்த்தை, பாரம்பரியம், அனுபவம், வரலாறு போன்ற கருவிகளை அடையாளமாகக் கொண்டு அவரின் வெளிப்பாடு எம்மண்டை வருகின்றது. அதனை உணர்ந்தவர்களாக நாம் செயற்படுவோமாக.

ஆக்கம்: அற்புதம்