1 மே 2023

தச்சனாகிய யோசேப்பு

மத்தேயு 11:25-30

• திருச்சபை இந்நாளை நினைந்துக்கொள்ளுகின்றது. ஏனெனில், அது தொழிலாளர்களுடன் தன்னை அடையாளப்படுத்துகின்றது. சிறப்பாக, கடவுள் ஓர் தொழிலாளராகவும் கடவுளால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவும் தொழிலில் ஈடுபட்டவராகவும் தொழிலை ஆற்றுவதற்காக அவர் எம்மை அழைத்துள்ளார்.


• தொடக்கநூல் – ஆதியாகமம் 1:26ம் வாக்கியத்திலிருந்து
பார்க்கும்போது, கடவுள் இவ்வுலகைப் படைத்தார். படைத்தவர் அதைப்
பராமரிக்கும் பணியை எம் ஆதிப் பெற்றோரிடம் அளித்துள்ளார். எனவே, தொழில் இறைவனால் உருவாக்கப்பட்டு மனுகுலத்துக்கு
கையளிக்கப்பட்டுள்ளது. படைப்பின் கடவுள், மீட்பின் கடவுளாகிய குமாரன், தூய்மைபடுத்தும் கடவுளாகிய தூய ஆவி ஆகிய திரித்துவ கடவுளரின் ஒன்றிணைந்த செயற்பாடு அவர்களது பணியாகும்.


• திருப்பாடல் – சங்கீதம் 15ல், இறைவன் ஏற்கும் குணவியல்புகளைப்
பற்றி ஆசிரியர் வடித்துள்ளார். எனவே, நாம் நற்குணங்களை படைப்பதும், அதனை அபிவிருத்தி செய்வதும், அதனை காத்துக் கொள்வதும் எம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.


• 2 தெசலோனிக்கேயர் 3ம் அதிகாரத்தில், பவுல் மக்கள் தொழிலை
செய்பவர்களாகவும் பிறரில் தங்கி வாழாதவர்களாகவும் சோம்பல் தன்மை அற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என கூறுகின்றார். அதாவது, எமது தொழில் எம்மைப் பாதுகாக்கும் பராமரிக்கும் ஊடகமாக இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.


• யோவான் 5:1-10ம் வசனம் வரையுள்ள பகுதியில், ஆண்டவர்
இயேசுவின் குணமளிக்கும் தொழிலைப் பற்றி நாம் பார்க்கின்றோம்.
முப்பத்தெட்டு வருடங்கள் முடக்குவாதமுற்ற ஒரு மனிதனை பெதஸ்தா
குளத்தில் கண்டு அவனுக்கு சுகமளித்த ஆண்டவருடைய திருப்பணியை நாம் அவதானிக்கலாம். கடவுளின் வேலையை செய்து முடிப்பதே தனது பணியாகும் என ஆண்டவர் இயேசு கூறுவது, திருத்துவ கடவுளரிடையே நிலவும் ஒற்றுமையை நாம் காண்கிறோம்.


• அகில உலக தொழிலாளர்கள் தினத்தை நாம் நினைவுகூறுகின்ற
வேளையில், இன்றைய உலகில் தொழிலாளர்கள் அனுபவித்து வரும்
ஒவ்வொரு தீமைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யவும் போராடவும்
அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக, தொழில் செய்தும் போதிய அளவு
வருமானம் அற்ற நிலை, தொழில்களில் பாதுகாப்பற்ற நிலை மற்றும்

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை இழந்த நிலை, நிலவும் பொருளாதார கடினம் காரணமாக தொழில்களிலிருந்து கட்டாயமாக நீக்கப்பட்ட நிலை, தொழில்களை முன்னெடுத்துச் செல்வதற்கு போதியளவு நிதிப்பற்றாக்குறை மேலும் கடன் சுமை போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்காக மன்றாடவும் அவர்களின் உரிமைக்காக போராடுவதும் இன்றைய தொழிலாளர் தினத்தில் நாம் தொழிலாளர்களுக்குச்
செய்யும் ஓர் மரியாதையாகும்.

ஆக்கம் : அற்புதம்