6 மே 2023

அப்போஸ்தலனும் அல்லது திருத்தூதுவனும் நற்செய்தி பணியாளனுமாகிய யோவான்


யோவான் 21:20-25

• ஆண்டவர் இயேசுவின் சீடர்களின் ஒருவராக யோவான் காணப்படுகிறார். இவர் செபதேயுவின் குமாரர்களில் ஒருவராகவும் யாக்கோபின் சகோதரனாகவும் பெயரிடப்பட்டுள்ளார். இயேசு அன்பு செலுத்திய சீடர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார்.

• எருசலேம் பாரம்பரியத்தில் ஓர் செல்வந்த பின்னணியில் வாழ்ந்த இவர் ஓர் எழுத்தாளனாகவும் அறியப்படுகிறார். இவரின் பெயரில் யோவான் நற்செய்தி, 1ம், 2ம், 3ம் யோவானின் நிருபங்கள், திருவெளிப்பாடு ஆகிய நூல்கள் பெயரிடப்பட்டுள்ளன.

• விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 33:18-23 வரையுள்ள பகுதியில், கடவுளின் மாட்சிக்காக அல்லது புகழுக்காக வாழுவதே எமது கடமையாகும். அத்தகைய அழைப்பையே கடவுள் மோசேக்கு வழங்குகின்றார்.

• திருப்பாடல் – சங்கீதம் 27ல், கடவுளின் திருப்பெயரின் மாட்சிக்காக வாழும் ஒவ்வொருவரதும் வெளிச்சமாகவும், மீட்பாகவும், பாதுகாவளராகவும், ஆறுதலளிப்பவராகவும் கடவுள் காணப்படுகின்றார்.

• 1 யோவான் 1:4 வரையுள்ள பகுதியில், சிறப்பாக கடவுளின் மாட்சிக்கு சான்று பகருகின்ற ஓர் பணிக்காக யோவான் அழைக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகின்றது. கடவுளின் திருப்பிரசன்னத்தை உணர்ந்தவராகவும் இயேசுவைக் கண்ணாரக் கண்டவராகவும் அவருக்கு சான்று பகர்பவராகவும் இவர் காட்டப்படுகின்றார்.

• யோவான் நற்செய்தி 21ம் அதிகாரத்தில், பேதுருவுக்கும் யோவானுக்கும் இயேசுவுக்கும் இடையே ஓர் உரையாடல் இடம்பெறுகின்றது. இயேசுவின் அன்புச் சீடனாகிய யோவானைக் குறித்து பேதுரு ஓர் கேள்வியைக் கேட்கின்றார். அப்பொழுது இயேசு, நான் வருமளவும் இவனிருக்கச் சித்தமானால் உனக்கு என்ன என பதிலளிக்கிறார். அதுமுதல் யோவான் ஓர் நீண்டகாலம் வாழுவார் என்ற சிந்தனை மக்கள் மத்தியில் காணப்பட்டது. இதன்படி, தொமித்தியன் அரசன் காலத்தில் கொதிக்கும் எண்ணெக்குள் போடப்பட்ட யோவான் எத்தீங்கும் அவருக்கு ஏற்படாத பட்சத்தில் அரசர் அவரை பத்மோஸ் என்ற அழைக்கப்படும் நாட்டிற்கு நாடுகடத்தினார். அங்கிருக்கும்போதே அவர் திருவெளிப்பாட்டை எழுதியதாக வரலாறு கூறுகின்றது. மேலும், இவரின் திருப்பணி சின்னாசியா, எபேசு போன்ற பகுதிகளில் அதிகளவு காணப்பட்டது. நிறைவில், தனது நூற்றி நான்காவது வயதில் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்ததாக வரலாறு கூறுகின்றது.

• இன்று யோவான் என்ற பெயரில் தனி நபர்களும், பாடசாலைகளும், ஆலயங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அன்று யோவான் நற்செய்திக்கும் இறையியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததைப்போல இன்றும் எமது திருப்பணி நற்செய்திபணி, எழுத்துப்பணி, இறையியல் பணி போன்றவைகளை நாம் முன்னெடுக்க அழைக்கப்படுகிறோம். ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்