7 மே 2023

கிறிஸ்துவே வழி என அறிக்கையிடல்
யோவான் 14:1-7

• தத்துவ அறிஞராகிய பிளேட்டோ உலகை இரண்டாகப் பிரிக்கின்றார். முதலாவது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தற்காலிக உலகம். இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி பிரவேசிக்க இருக்கின்ற நிரந்தர உலகம். எனவே இந்த தற்காலிக உலகத்திலிருந்து நிரந்த உலகிற்குள் எம்மை அழைத்துச் செல்பவர் யார் என்ற வினா அன்றைய மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஆகவே, நிரந்தர உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்பவர் இயேசுவே. அவரே அந்த வழி என யோவான் அறிக்கையிடுகிறார். இதனை யோவான் 14:6ம் வாக்கியத்தில் நாம் பார்க்கின்றோம்.

• பழைய ஏற்பாட்டு பகுதியில், இஸ்ராயேல் மக்கள் செங்கடலை கடந்த நிகழ்வு பதியப்பட்டுள்ளது. இங்கு இறைவன் இஸ்ராயேல் மக்கள் பிரயாணிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கின்றார். அதாவது பின்னால் எகிப்திய படைகள் அவர்களை துரத்திக் கொண்டு வந்திருந்த போதிலும், இறை பராமரிப்பை இஸ்ராயேலர் உணர்கின்றனர். அதாவது, கடவுள் ஏற்படுத்திய பாதுகாப்பின் வழியினூடாக பிரயாணித்தனர்.

• சங்கீதம் 116ல், கடவுள் அனைத்து தீமைகளிலுமிருந்து எம்மை விடுவிப்பவர் என்பதை ஆசிரியர் உறுதிப்படுத்துகின்றார். கடவுளின் வழி ஓர் விடுதலையின் வழி என்பது இங்கு காண்பிக்கப்படுகின்றது.

• திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 16ம் அதிகாரத்தில், பிலிப்பி பட்டணத்தில் பவுலும் சீலாவும் குறி சொல்லுகின்ற ஆவியையுடைய ஒரு பெண்ணிடமிருந்து ஆவியை துரத்தியப்படியால், சிறைக்குள் அடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இங்கே இரவும் பகலும் அவர்கள் இறைவனை போற்றிப் புகழ்ந்தப்படியால், சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். அதாவது, கடவுள் சிறைகதவுகளை உடைத்து, பூட்டப்பட்ட அனுபவங்களில் இருந்து விடுதலையை வழங்குகின்றார். அதுவே கடவுளின் பணியாகக் காணப்படுகின்றது.

• இஸ்ராயேல் மக்கள் கடவுளை வழியாகவும், பின்னர் இயேசு கிறிஸ்துவை வழியாகவும் வேதாகமம் காண்பிக்கின்றது. இயேசுவின் மரணத்தை அடுத்து அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்பணிகளில் கிறிஸ்தவர்கள் மார்க்கத்தின் வழியாகக் கருதப்பட்டனர். எனவே, நாங்கள் இன்று உண்மையின் வழியாக, வாழ்வின் வழியாக, விடுதலையின் வழியாக மாற அழைக்கப்படுகின்றோம். ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்