14 மே 2023

கிறிஸ்துவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்வதே

தூதுப்பணி ஆகும்

லூக்கா 24:36-49

• கடவுளுடைய அன்பை வார்த்தையாலும் செயல்களாலும் ஒரு தனிமனிதனுக்கோ சமூகத்துக்கோ பகிர்ந்துகொள்வதே தூதுப்பணி ஆகும். தூதுப்பணி வெறுமனே நற்செய்தி பணியை மாத்திரம் உள்ளடக்காமல் அமைதிப்பணி, நீதிப்பணி, அறப்பணி, சமூகசேவை, நிவாரணப்பணி, சர்வமதப்பணி, ஒருமைப்பாட்டுபணி ஆகிய பல இலக்குகளை கொண்டுள்ளது. அதில் ஒரு பணியே அமைதிப்பணி ஆகும்.

• மீகா 6:1-7ல், இறைவனின் அமைதிப்பணி பற்றி மீகா பேசுகின்றார். அதாவது, அமைதி என்பது வன்முறைக்கு எதிரானதாகும். எனவே, வன்முறையை அகற்றி வாழ்வுக்கான ஆயத்தங்களை முன்னெடுப்புக்களை நாம் செய்யும்போது அது அமைதிப்பணியாக மாற்றம் பெறுகின்றது.

• திருப்பாடல் – சங்கீதம் 85:10ல், நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடுவதாக நாம் காண்கின்றோம். எனவே, அமைதி என்பது நீதியுடன் பிரயாணிக்கும்போது மாத்திரமே உண்மையான அமைதியின் கனிகளை மக்கள் புசிக்கவும் அவ் அமைதி நிரந்தர தன்மை உள்ளதாகவும் காணப்படுகின்றது.

• புதிய ஏற்பாட்டு பகுதியில் பிலிப்பியர் 4:4-9 வரையுள்ள பகுதியில் அமைதி நிலவ வேண்டும் எனில், நாம் எல்லாவற்றையும் செபத்தோடு இறைவனுக்கு தெரிவிக்கும்போது எங்களுக்கு வேண்டிய உள்ளக அமைதி ஏற்படுவதாக கூறப்படுகின்றது. எனவே, எமது பாரங்களை இன்னுமொருவரிடத்தில் கூறும்போது எமக்குள்ளேயே விடுதலை பிறக்கின்றது.

• ஏசாயா 9:6ல், கிறிஸ்துவின் பணி ஓர் அமைதிப்பணியாக காட்டப்படுகின்றது. மேலும், லூக்கா 2:14ல் அவரது பிறப்பு உலகில் நல்மனதோருக்கு அமைதியை ஏற்படுத்த வல்லது என ஆசிரியர் கூறுகின்றார்.

• நற்செய்தி பகுதியிலும் ஆண்டவர் இயேசு ஒருவரை ஒருவர் காணும்போது, உயிர்ப்பின் மகிழ்ச்சியால் ஒருவருக்கு ஒருவர் அமைதி உரித்தாகுக என வாழ்த்துகின்றார். யூதர்கள் பொதுவாகவே ஒருவரையொருவர் காணும்போது, பாராட்டுகின்ற வாழ்த்துமொழியே இதுவாகும். எனவே, ஆண்டவர் உயிர்ப்பின் ஆண்டவர் எல்லோரையும் மன்னித்து வன்முறைச் சூழலை அகற்றி பழிவாங்கும் மனப்பான்மையை அகற்றி தனது அகஅமைதியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கின்றார். எனவே, நாம் ஒருவரையொருவர் மன்னிப்பதன் ஊடாக, வன்முறையை அகற்றுவதன் ஊடாக, பழிவாங்கும் மனநிலையை அகற்றுவதன் ஊடாக உண்மையான அமைதியை பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் உலகத்திற்கு வழங்கவும் எம்மால் முடியும். இதைச் செய்ய இறையருளை நாடி நிற்போமாக.

ஆக்கம்: அற்புதம்