18 மே 2023

பரமேறுதலின் திருநாள்
லூக்கா 24:44-53

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் சஞ்சரித்து நாற்பதாவது நாள் விண்ணுக்கு எழுந்தருளினார். சிறப்பாக, நாற்பது என்ற இலக்கம் யூதர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நாற்பது ஆண்டுகள் மோசே அரண்மனை வாழ்வு பின்னர் பாலைவன வாழ்வு என நாம் வகுக்கலாம். நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. இயேசுவும் நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணா நோன்பு இருந்தார். மேலும் ஈனோக்கு, எலியா போன்றவர்களும்கூட விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

தானியேல் 7ம் அதிகாரத்தில், இறைவன் மாட்சியுடையவராகவும், அவரது வல்லமை மிகப் பெரியதாகவும் காட்டப்படுகின்றது. இது பாபிலோனிய அரசர் நேபுகாத்நேச்சார் மற்றும் பாபிலோனிய கடவுளாகிய மார்டுக் போன்றவற்றைவிட வல்லமை மிக்கதாக யாவேயின் வல்லமை காட்டப்படுகின்றது.

திருப்பாடல் 44:4லும், அரச மாட்சிமை பொருந்தியவராக யாவே வர்ணிக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம். அவரது வியத்தகு செயல்கள் வரலாற்றில் எப்பொழுதும் மாட்சிமையை ஏற்படுத்துகின்றது.

திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 1:1-11ல், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பு சீடர்கள் பார்த்துக் கொண்டிருக்க நடைபெறுகின்றது. எனவேதான், தேவதூதன் சீடர்களை நோக்கி, கலிலேயர்களே நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து பார்க்கிறீர்கள்? நசரேயனாகிய இயேசு எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டாரோ அப்படியே அவர் மீண்டும் வருவார் என்கின்ற நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதியை வழங்கி நிற்கின்றது. மேலும், விண்ணேற்பு ஓர் உத்தரவாதத்தையும் எதிர்பார்த்து நிற்கின்றது. அவர் வரும்வரை அவரின் வருகைக்காக நாம் செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

லூக்கா 24:44ம் வாக்கியத்திலிருந்து பார்க்கும்போது, ஆண்டவர் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், பெத்தானியாவிலே தமது சீடர்களுக்கு ஆசி வழங்குகின்றார். அத்துடன், மத்தேயு 28:16-20 வரையுள்ள வாக்கியம் உள்ள பகுதியில், ஆண்டவர் இயேசுவை சீடர்கள் விண்ணேற்புக்கு முன்னர் வணங்குவதாக காட்டப்படுகின்றது. ஒரு தெய்வீக நிலைக்குள் உயர்த்தப்பட்ட ஆண்டவர் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். அத்தோடுகூட, நற்செய்தியை நாம் அறிவித்து பிறரை சீடராக்கும் வரையில், இதோ உங்களோடு நான் இருப்பேன் என்கின்ற வாக்குறுதி அளப்பரியதாகும். இவ் வாக்குறுதியை ஆண்டவர் யோசுவாவுக்கும் (யோசுவா 1:9), தாவீதுக்கும் (சங்கீதம் 23:4, மரியாளுக்கும் (லூக்கா1:26-38) மேலும் அநேகருக்கும் கொடுத்திருக்கின்றார். சிறப்பாக, திருவெளிப்பாடு 1:8 என்ற பகுதியிலும், இதோ நான் ஆதியும் அந்தமுமானவர் என்ற வார்த்தையினூடாக அவருடைய பிரசன்னம் எங்களோடிருக்கின்றது அல்லது அவருடைய இருப்பு நிலை எங்களோடிருக்கின்றது என்ற நம்பிக்கையூட்டும் வாக்குக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக. ஆமேன்.

ஆக்கம்: அற்புதம்