28 மே 2023

தூய ஆவியரே அனைத்து படைப்புக்களையும் புதிதாக்கும்
யோவான் 20:19-23

புதிதாக்குதல் தூய ஆவியரின் ஓர் சிறப்புப் பணியாகும். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தில், கடவுள் ஆவியர் புதுமைகளைச் செய்பவர். அவர் மானிடருக்கு புதிய இதயத்தை வழங்குகின்றார். இத்தகைய சிந்தனையே திருப்பாடலிலும் காணப்படுகின்றது. அவரது வலிமை அல்லது மாட்சிமை மிக்க செயற்பாட்டை நாம் அங்கு காணலாம்.

திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 2:1-20ல், தூய ஆவியர், திருச்சபை மீது இறங்கும் செயற்பாட்டை நாம் பார்க்கின்றோம்.

விடுதலைப்பயணம் 19:1-10 வரையுள்ள பகுதியில், சீனாய் மலையில் இறைவனின் வருகையும் இங்கு தூய ஆவியரின் வருகையும் ஒத்த அமைப்புடையதாகக் காணப்படுகின்றது. பலமான காற்று, அயல்மொழிப்பேச்சு ஆகியவை இங்கு கோடிட்டு காட்டப்படுகின்றது. தூய ஆவியரால் நிரப்பப்பட்டவர் உண்மைக்கு சான்று பகர்பவராக காணப்பட வேண்டும். திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 2:32-38 ஆகிய பகுதிகள் இதைக் கூறுகின்றன. அதாவது, தூய ஆவியருக்கு சத்தியத்தின் ஆவியானவர் எனவும் ஒரு பெயருண்டு. சத்தியத்திற்கு எதிராக நாம் செயல்படும்போது, அது தூய ஆவியருக்கு விரோதமான பாவமாகும். திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 5:1-10ல், ஆவியருக்கு விரோதமாக பொய்க் கூறிய அனனியா, சப்பீராள் போன்றவர்கள் தண்டிக்கப்படுவதை நாம் காணலாம்.

யோவான் 20:19-23 வரையுள்ள பகுதியில், தூய ஆவியர் பகிரப்பட்ட சந்தர்ப்பத்தை நாம் இங்கு பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு தமது சீடர்களுடன் ஆவியரைப் பகிர்ந்துக் கொள்கின்றார். ஊதி அவர்களுடன் ஆவியைப் பகிர்ந்துக் கொண்டு ஆவியைப் பெற்ற ஒரு மனிதன் ஒருவர் தவறுகளை மற்றவர்கள் மன்னிக்க அழைக்கப்படுகின்றார் என்கின்ற பொறுப்புள்ள உத்தரவாதத்தையும் வழங்குகின்றார். மேலும், பெந்தேகோஸ்தே திருநாளன்று கடவுள் ஆவியரை யூதருடன் பகிர்ந்து கொண்டதைப் போல, திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 10:34-43 வரையுள்ள பகுதியில், தூய ஆவியர் கொர்னேலியு என்றழைக்கப்படுகின்ற புற இனத்தவருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றார். எனவே, ஆவியரை நாம் கட்டுப்படுத்திவிட முடியாது. அவர் அனைவருக்கும் உரியவர். அனைவராலும் பயன்படுத்தப்படுபவர். இதை மனதில் வைத்தவராக ஆவியரின் ஆளுகைக்குள் எம்மை அர்ப்பணிப்போமாக.

ஆக்கம்: அற்புதம்