4 ஜூன் 2023

திரித்துவ ஞாயிறு
திரித்துவ கடவுளில் பற்றுறுதி வைப்போம்
மத்தேயு 28:16-20

திரித்துவம் என்ற சொல் ஓர் வரலாற்று சொல்லாகும். இதனை திருமறைக்குள் நாம் காணமுடியாது. சிறப்பாக, கி.பி.4ம் நூற்றாண்டில் இயேசு யார் என்ற கேள்விக்கு பதிலுரையாக திரித்துவ கொள்கை உருவாக்கப்பட்டது. இங்கு கடவுளைப் படைப்பாளராகவும், குமாரனாகிய கடவுளை மீட்பாளராகவும், தூய ஆவியரை தூய்மைப்படுத்துபவராகவும் காட்டப்படுகின்றது.

மத்தேயு 28:16-20 வரையுள்ள பகுதியில், திரித்துவத்திற்குரிய தந்தை, மைந்தர், தூய ஆவி ஆகியவர் பற்றி பேசப்படுகின்றது. 2 கொரிந்தியர் 13:13ம் வாக்கியத்தில், கர்த்தராகிய இயேசுவின் கிருபை, பிதாவாகிய தேவனுடைய அன்பு, பரிசுத்தாவியருடைய ஐக்கியம் போன்ற வார்த்தைகள் காணப்பட்டாலும். இவைகள் அனைத்தும் பிற்செயற்கைகளாகவே காணப்படுகின்றது.

எசேக்கியேல் 1:4ம் வசனத்திலுள்ள பகுதி, தொடக்கநூல் – ஆதியாகமம் 1:25-28 வரையுள்ள பகுதி, தொடக்கநூல் – ஆதியாகமம் 11:1-10ல் வரும் பாபேல் கோபுரம், ஏசாயா 6:8ல் வருகின்ற, யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாகப் போவார்கள்? போன்ற பகுதிகள் அனைத்தும் கடவுளின் பன்மைத் தன்மையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. மாறாக, திரித்துவ சிந்தனைகள் அங்கு காணப்படுவதில்லை.

திரித்துவ கடவுளரிடைய எத்தகைய வேறுபாடுகளும் காணப்படுவதில்லை. அவர்களிடையே உயர்ந்தவர் – தாழ்ந்தவர், பலமுள்ளவர் – பலம் குறைந்தவர் என்ற சிந்தனைகள் நிலவுவதில்லை. எனவே, இது இன்றைய ஆணாதிக்க சமூகத்திற்கு ஓர் அடியாகக் காணப்படுகின்றது. மேலும், திரித்துவ கடவுளரிடையே வேறுபாடுகளும் நிலவுவதில்லை. இது வேறுபாடுகளின் ஒற்றுமை என்ற எண்ணக்கருவை சிறப்பாக, இன்றைய பல்சமய சூழலுக்கு ஏற்றதொன்றாகும். மேலும், திரித்துவ கடவுளர்களிடையே நிலவும் அதிகாரப்பகிர்வு சிறப்பாக இன்று பொருளாதார பகிர்வுக்கு எம்மை இட்டுச் செல்லுகின்றது. எனவே, திரித்துவக் கொள்கை இன்றைய பெண் இறையாளர்களும், பொருளாதார திரித்துவத்தை நாடி நிற்கும் மக்களும் பல்சமய சூழலுக்கு பொருத்தமாகவும் காணப்படுகின்றது.

இன்றைய திரித்துவ கொள்கையை சற்று எண்ணிப்பார்க்கும்வேளையில், பௌத்த சமயத்தில் நிலவும் – புத்தம், சரணம், சங்கம் போன்ற பகுதிகளும், இந்து சமயத்தில் காணப்படும் – சத், சித், ஆனந்தன் போன்ற சிந்தனைகளும் கிறிஸ்தவத்துக்கு ஈடாக்கப்படுகின்றன. பல்சமய சூழலில் இதனை புரிந்து கொள்வதற்கு இவ் உதாரணங்கள் பொருத்தப்பாடு உள்ளவைகள் ஆகும். எனினும், கி.பி 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஆகஸ்தீன் அவர்கள் கூறுவதுபோல், பனிக்கட்டியாகிய திண்மம் வெப்பமேற்றும்போது திரவமாகிய தண்ணீரையும் அதனை வெப்பமேற்றும்போது ஆவியையும் எமக்கு உண்டாக்குகின்றது. எனவே, இச்சிந்தனை அறிவுசார்ந்த ஒன்றாக காணப்பட்டபோதிலும் இதனை விசுவாசத்திலேயே நாம் புரிந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

ஆக்கம்: அற்புதம்