18 ஜூன் 2023

வழிபாடு - மக்களின் விசுவாசத்தை அல்லது 
பற்றுறுதியை கொண்டாடுதல்
யோவான் 4:16-26

வழிபாடு என்பது கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையூடாகவோ அல்லது செயலூடாகவோ தெரிவிப்பதையே வழிபாடு என நாம் அழைக்கிறோம்.

பழைய உடன்படிக்கை எசாயா 6:1-8 வரையுள்ள பகுதியில், உசியா அரசன் மரணமடைந்த பின்னர் தனது தேசத்தின் அரசியல், பொருளாதார, சமூக நிலை மற்றும் எதிர்கால நோக்கு சம்பந்தமாக ஏசாயா இறைவனிடம் தெரிவிப்பதற்காக ஆலயத்திற்கு சென்றிருந்தான். அங்கு இறைவன் தன்னுடைய இதயத்துடிப்பை ஏசாயாவோடு பகிர்ந்துகொள்கின்றார். யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாக போவார்? எனவே, ஓர் வழிபாட்டில் எம்முடைய உட்கிடக்கைகளிலிருந்து நாம் எமது சிந்தனைகளை இறைவனிடம் கூறிநிற்பது மாத்திரமன்றி மாறாக, இறைவனுடைய இதயத்துடிப்பையும் கேட்க நாம் அழைக்கப்படுகின்றோம்.

சங்கீதம் – திருப்பாடல் 148ல், வழிபாட்டில் கடவுளை போற்றுதல் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. அதாவது, கடவுளுக்கு நன்றி செலுத்துதல், கடவுளை போற்றுதல், பாவங்களை அறிக்கையிடுதல், பிறருக்காக மன்றாடுதல், எமக்காக மன்றாடுதல் ஆகிய பகுதிகள் வழிபாட்டில் உள்ளடக்கப்படுகின்றன. எனவே, இறைவனை போற்றுதல் இங்கு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.

திருவெளிப்பாடு – வெளி 4:1-4 வரையுள்ள பகுதியில், இறைவனின் வழிபாடு பூலோகத்தோடு மட்டுப்படுத்தப்படாமல் விண்ணகம் சார்ந்ததொன்றாகும். எனவே, இவ்வழிபாடு வாழ்வின் ஒரு பகுதியாக எப்பொழுதும் தொடரும் ஒரு பணியாக காணப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

யோவான் 4:16 முதல் உள்ள பகுதியில், கடவுள் புதிய வழிபாட்டை எம்மிடையே எதிர்பார்த்து நிற்கின்றார். யோவான் 4:24ல், கடவுள் ஆவியாய் இருக்கிறார். அவரை தொழுதுகொள்பவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். எனவே, வழிபாட்டில் நிலவ வேண்டிய உண்மை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. மேலும், நாம் கடவுளை அல்லது ஆவியரின் செயற்பாட்டை கட்டுப்படுத்திவிட முடியாது. அவர் எமது எல்லைகளுக்கு அப்பாலே சென்று செயற்பட விரும்புபவர். எனவே, கடவுளை எமது சுவர்களுக்கு அப்பால் அவரது செயற்பாட்டை கண்டுகொள்ளும் வகையில் எமது வழிபாடு தூண்ட அழைக்கின்றது.

உண்மையான ஒரு வழிபாடு வழிபாட்டின் நிறைவிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அதாவது, வழிபாட்டுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பே வழிபாட்டின் பிரதிபலிப்பாகும் (ஆமோஸ் 5:18-21). மேலும், வழிபாட்டில் ஒப்புரவாகுதல் அவசியமாகின்றது (மத்தேயு 5:22-24). ஆண்டவர் விரும்பும் வழிபாட்டை நாம் அவருக்கு படைப்பதன் ஊடாக எமது பற்றுறுதிக்கு மையமாக இருக்கும் வழிபாட்டை நாம் கொண்டாடுவோம்.

ஆக்கம் : அற்புதம்