Shot of Jesus standing with his hand outstretched toward a follower on a bare landscape

சங்கீதம் 31:3

ஆண்டவரே, என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.

நம்முடைய பெற்றவராம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக.

திருப்பாடல் 31:1-8 கவிகளில் அதனை எழுதிய ஆக்கியோன் கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட கடவுளின் விடுதலையை மிகுந்த நன்றியுணர்வோடு பதிவு செய்துள்ளார். 9-18 கவிகளில் நிகழ்காலத்தில் எதிரிகள் தமக்கு எதிராக செய்யும் துன்புறுத்தல்களில் நேரத்தில் தமக்கு உதவிடுமாறு கடவுளிடம் இறைஞ்சி மன்றாடுகிறதை பதிவு செய்துள்ளார். 19-24 கவிகளில் தம் நன்றியுணர்வையும் கனத்திற்குரிய உறுதிப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

ஒப்படைப்பின் மன்றாட்டு

இந்த திருப்பாடலின் மொழிநடை தாவீது அரசரின் காலத்தில் இருந்தது போலிருந்தாலும் (கிமு பத்தாம் நூற்றாண்டு) இதில் உள்ள இணைத்தொடர்கள் எரேமியா நூலில் (கிமு ஏழாம் நூற்றாண்டு) இடம்பெற்று உள்ளவைகளுக்கு இணையாக உள்ளன. 9-18 கவிகள் தாவீதின் கால நிகழ்வுகளை குறிப்பதாக உள்ளன. இத்திருப்பாடலின் நிறைவு திருப்பாடல் 27ன் கவிகளுடன் அதிக தொடர்புடையதாக உள்ளன.


இன்று தெரிந்துகொள்ளப்பட்ட மூன்றாம் கவியில் “உமது பெயரின் பொருட்டு” எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும் என்ற மன்றாட்டை முன்வைக்கிறார். இது ஒரு ஒப்படைப்பின் மன்றாட்டு.

“உமது பெயரின் பொருட்டு” என்ற சொற்றொடர் இடம்பெறுவதின் ஆழ்ந்த பொருள் என்னவென்று அறிய முற்படும் போது இங்கு ஆக்கியோன் தம்முடைய ஆற்றலின் மீதோ தம்முடைய வலிமையின் மீதோ நம்பிக்கை வைக்காமல் கடவுளின் மீது தம் நம்பிக்கையை வைக்கிறார். செக்கரியா 4:6 திருமொழியில் “உனது ஆற்றலாலும் அல்ல, உனது வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும்” என்று சொல்லப்படும் இறைவாக்கு நூலின் வாக்குத்தத்தமும் அறைகூவலும் நம்முடைய ஒப்படைப்புக்கான அறைகூவலாகவே உள்ளது என்பதை உணர்ந்திட அழைக்கப்படுகிறோம்.

“தன்னம்பிக்கை”

நாம் “தன்னம்பிக்கை” என்பதற்கும் “தன்னம்பிக்கை என்ற பெயரில் மேட்டிமையான எண்ணம் கொள்ளுதல் என்பதற்கும் இடையிலான வேற்றுமையை புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படையான அறிவும் துணிவும் நமக்கு தேவை. ஆனால் அவை மட்டுமே நம்மை பாதுகாத்திடாது. வெற்றியை அளித்திடாது. தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அத்துடன் நம்முடைய இயலாமைகளை பகுத்தறிந்து நம்முடைய இயலாமையை ஒப்புக்கொண்டவர்களாக இறைவரின் முன்னிலைக்கு வருகின்ற போது நம்மை தாழ்த்தி இயலாமையை அறிக்கையிட்டு ஒப்படைக்கின்ற போது நம்முடைய நீதியின்படி அல்ல. மாறாக, கடவுளின் பேரிரக்கத்தின்படி நம்மை அவரது ஆற்றல் நிறைத்திடும்.

“உமது பெயரின் பொருட்டு” என்ற தொடரானது 23ஆம் திருப்பாடலில் இடம்பெற்றுள்ளது. “அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழிநடத்திடுவார்.” என்ற கவியில் (3) இடம்பெற்றுள்ளது. “அவர்தம் பெயர்க்கேற்ப” எனை நீதி வழி நடத்திடுவார் என்பதிலிருந்து “கடவுள் நீதியுள்ளவர்” என்பதையும் “அவர் “நீதியின் கடவுள்” என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

கடவுளுடைய நீதி என்பது அவரது இரக்கமே. நம்முடைய நீதியின் படியல்ல அவரது இரக்கத்தினாலேயே, அவரது பேரன்பு மற்றும் அருளின் வழியாகவே நாம் ஆற்றலும் வாழ்வும் பெறுகிறோம். கடவுளின் இரக்கம் அநியாயத்தை நியாயப்படுத்துவதல்ல. மாறாக, அநியாயத்தை களைந்து நியாயத்திற்கு நேராக வழிநடத்தும் இரக்கம் நிறைந்த நேரிய செயலாகும். ஆகையால், அவரது பெயர் தூயது ஆகும். “உமது பெயர் தூயதென போற்றப் பெறுக!”(மத்தேயு 6:9) என்ற வாக்குக்கேற்ப “நாம் தூயோராய்” வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். “நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன் என மறைநூலில் எழுதப்பட்டுள்ளது(1பேதுரு 1:16).


எனவே நாம் கடவுளுக்கேற்ற தூயவராய் இருக்கின்ற போது கடவுள் தம் பெயர்க்கேற்ப, தம் பெயரின் பொருட்டு நமக்கு வழிகாட்டி நம்மை நடத்திடுவார். நம்முடைய ஆத்துமாவைத் தேற்றிடுவார்.

“நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன், வந்தேன்”


… என்ற இந்த நம்பிக்கையுடன் நம்மை நாம் ஒப்படைப்போம். கடவுள் அருளும் நிறைவான ஆற்றலும் அமைதியும் அருள்வரங்களும் நம்மை நிறைத்துக் காப்பதாக.

அருட்பணி. டால்ட்டன் மனாசே