இயேசுநாதரின் நீதிமன்ற விசாரணை

(யோவான் 19:1-22)

இயேசு ஒரு சமயக்கைதியா, அல்லது அரசியல் கைதியா என்ற கேள்வியை எழுப்பி விவாதிக்கிறார் யோவான் நூலாசிரியர். கி.பி.70-க்கு பின், குறிப்பாக உரோமப் போரின் முடிவில் இந்நூல் எழுதப்பட்டது. எனவே, இப்போர் கடவுளின் ஆண்டவர்துவத்தை ஏற்பவர்களுக்கும், இராயனை அரசனாக ஏற்பவரிடத்திலும் இடையே நடந்த ஒரு சண்டை எனப் பார்க்கப்பட்டது. இந்நூலை வாசிப்போர் கடவுளின் அரசர்துவத்தை பின்பற்ற உறுதுணையாக எழுதப்பட்டது. ஆக, உரோம அரசரின் அதிகாரத்திற்கும் கடவுளின் அரசர்துவத்திற்கும் இடையே என்ன வேறுபாடு என்பதை காட்ட முனைகிறார் ஆசிரியர்.

18-ஆம் அதிகாரத்தில் பிரதான ஆசாரியர்கள் அரசியல் தலைவர்களிடம் இயேசுவை தீர்ப்பிட ஒப்படைக்கின்றனர். 19-ஆம் அதிகாரத்தில் 16-ஆம் வசனத்தில் பிலாத்து மீண்டும் பிரதான ஆசாரியர்களிடமே இயேசுவை ஒப்படைப்பதாகத் தெரிகிறது. முதல் 22 திருமொழிகளில், ஏழு முறை இராசா, அரசன் என்ற சொற்கள் வருகின்றன. காரணம் உண்மையான அதிகாரத்தின் பிறப்பிடம் எது என்பதே இங்கு உள்ளார்ந்த கேள்வி. உரோமை நகரா அல்லது கடவுளா? என்பதுதான் வெளிப்படையான கேள்வி.

இயேசுவும் முட்கீரிடம் அணிந்து ஒரு வித்தியாசமான அரசனாக காட்டப்படுகிறார். 5-ஆம் வசனத்தில் ‘இதோ இந்த மனிதன்’ எனக் கூறிய பிலாந்து 14-ஆம் வசனத்தில் ‘இதோ உங்கள் அரசன்’ எனச் பேச முன்வருகிறார். பிலாத்து தன் அதிகாரம் போய்விடுமோ எனப் பயப்படும் ஒரு ஆட்சியாளர் (8), ஆனால் நூலாசிரியர், இயேசுநாதர் அதிகாரத்தை அதிகமாக பெறும் ஒருவராக காட்டுகிறார். பிலாந்துவின் இந்த பயத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. இயேசு அபாயகரமானவர், அவரை ஒரு தீவிரவாதி எனக்கூட பிலாந்து நினைத்திருக்கலாம். இது அவன் கேள்வியிலிருந்து வெளிப்படுகிறது. நீ எங்கிருந்து வருகிறாய், (9) எங்கிருந்து வந்தவன்? கலிலேயா பல எழுச்சிகளின் மையம். அங்கு கத்தி, ஆயுத சண்டை பல நடந்துள்ளன. இயேசு குழந்தையாயிருக்கும் காலத்தில் அப்படிப்பட்ட ஒரு கலவரம் மூலம் 2000 நபர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். இப்போது இயேசுவும் அங்கிருந்து வந்துள்ளதால் ஒருவேளை கலவரம் தொடரும் என்ற பயம் மறுபுறம்.

உன்னை விடுதலை செய்யவும், சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்கு தெரியாதா என்கிறார் பிலாத்து (10-11). அன்று உரோம் அதிகாரத்தின் மையம், உச்சம் எனக் கருதப்பட்ட ஒரு காலகட்டம். ஆண்டவர் அதை ஏற்க மறுக்கிறார். உரோம் அதிகாரத்தின் மையம் இல்லை. கடவுளாகிய தந்தையே அதிகாரத்தின் மையம். கடவுளாகிய தந்தை உனக்கு அதிகாரம் வழங்காவிட்டால் எதுவும் முடியாது என்றார். உண்மையான அதிகாரம் கடவுளிடமிருந்தும், எளிய மக்களிடமிருந்தும் வருகிறது என்றார்.

இராயனேயன்றி எங்களுக்கு வேறே அரசன் இல்லை என்று கத்தினர் (15) அன்றைய உரோமை அடிவருடி யுதர்கள் (உபா.5:7, 1சாமு.8:4-9). இக்குரல் யாவேயாகிய கடவுளையும், அவர் கற்பனைகளையும் தீர்க்கமாக மறுதலிப்பதாகும். உரோமை ஆண்ட அரசர்களிலே மிகக் கொடுரமானவன் இராயன் எனக் கருதப்படுகிறான். அவனை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும் யூதர்களின் ஆர்வம் இன்னும் கேள்விக்குரியதாகிறது.


இயேசுநாதரைக் கொல்ல வேண்டும். ஆனால் உரோம ஆட்சியைப் பயன்படுத்திக் கொல்ல வேண்டும். உரோம சட்டத்தின் கீழ் இவர் தவறு நிருபிக்கப்படாத பட்சத்தில், யூதரின் சமயச் சட்டம் பாயவேண்டும் (6-7). இதுவரை யூதரல்லாத ஓர் அதிபதியின் நிலைப்பாடு குறித்து நாம் பார்த்தோம். யூதர்களாகிய பிரதான ஆசாரியர்களின் நிலைப்பாடும் அதுவே.

எனவே சமயத்தலைவர்கள் தம் சமயநெறிகளை அரசியலுக்கு உட்படுத்தும் போங்கை இங்கே காணலாம். தமக்கு சாதகமாக எப்படியாகிலும் சமயநெறிகளை வளைக்கும் ஒரு போங்கு கூர்மையாக கவனிக்கப்பட வேண்டும் (18:30-31,19:7). இப்பகுதியின் மூலம் யோவான் ஆசிரியர் ஒரு கடுமையானச் செய்தியைச் சொல்ல முன்வருகிறார். பிலாத்து தம் அதிகாரத்தை இழந்து விடுவேன் என்ற பயம் கொண்டவர். அதிகாரம் மீது நம்பிக்கை இருக்கும்வரை பிலாத்துவினால் சத்தியத்தை, உண்மையை புரிய முடியாது. இருப்பினும் இயேசுநாதரை மூன்று முறை குற்றமற்றவர் என நிருபிக்கிறார்.

ஆனால் எந்தச் சட்டத்தை பயன்படுத்தியாவது இயேசுநாதரைக் கொல்லவேண்டும் என்பதில் மிகக் குறியாக இருந்தவர்கள் கடின இதயம் படைத்த முதன்மை ஆசாரியர்களே! எனவே பிலாத்துவைவிட பிரதான ஆசாரியர்கள், சமயத்தலைவர்கள் மிகக் கொடியவர்கள் என தீர்க்கிறார் ஆசிரியர். ‘என்னை உன்னிடம் ஒப்புவித்தவர்களுக்கு அதிக பாவம் உண்டு’ (19:11). இயேசுவின் கொலைக்கு அனைத்து யூதர்களையும் காரணமாக கூறமுடியுமா என்ன? பரிசேயர்கள், உட்பட அதிகாரத்தை பிழைப்பாக கொண்டிருந்த சிறுபான்மை சமயக்குழு தவிர, இவர்களில் பெரும்பான்மை நல்ல யூதர்களை பிரித்து குறிப்பிடுவதே நல்லது. இல்லாவிடில் யூதர் என்ற இனம் மீதான ஒரு பொது வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

இயேசுவின் கொலை நகரத்துக்கு வெளியே எல்லை பகுதியில் நடத்தப்பட்டிருக்கலாம். எனவேதான் ‘நசரேயனாகிய இயேசு யூதரின் அரசன்’ – என்ற முகவரி மூன்று மொழிகளில் எழுதி இருப்பது யோவானில் குறிப்பிடத்தக்கது. பிலாத்து முதன்மை ஆசாரியர்களின் கோரிக்கையை நிராகரிப்பது அனைத்தும், பிலாத்துவின் மீது ஆசிரியரின் கரிசனையை சுட்டிக்காட்டுகிறது.

சாலமன் விக்டஸ்,

இறையியலாளர்.

சாலமன் விக்டஸ் பற்றி

மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இதுவரை பல்வேறு தலைப்புகளில் 11 நூல்களை எழுதியுள்ளார்.

முனைவர் சாலமன் விக்டசின் நூல்கள்