அறுவடை விழா

திருச்சபை வாழ்வில் அறுவடை விழா முக்கியமானதாகும். ஏனைய திருச்சபை பிரிவுகளை விட அங்கிலிக்கன் திருச்சபையில் ஒவ்வொரு வருடமும் இது நினைவு கூரப்படுகின்றது. இவ்வருடம் எமது திருச்சபை நாட்காட்டியில் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் நினைந்து கொள்ளுமாறு நாம் அழைக்கப்படுகின்றோம். அறுவடை விழாவின் ஆரம்பம் எகிப்து ஆக காணப்படுகின்றது. எகிப்தில் எகிப்தியர்கள் தமது அறுவடையின் ஒரு பகுதியையும், கால்நடையின் ஒரு பகுதியையும்  தமது அரசனுக்கு காணிக்கையாக படைத்தனர். ஏனெனில் அரசனே கடவுளாக மதிக்கப்பட்டார். இப்பின்னணியில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைகளாக இருக்கும்போது தமது விளைபொருட்களையும், கால்நடைகளையும்,முதற்பேறான பிள்ளைகளையும் கடவு ளுக்கு  படைத்தனர். இஸ்ராயேல்மக்கள் கடவுளை விவசாய கடவுளாகவே ஆரம்பத்தில் கண்டு கொண்டனர். கானானிய பின்னணியில் கடவுளை ஏல்,எலோகிம் ,எல்சடாய்,எல்ரோயி,எல் ஒலாம் என அடையாளம் கண்டனர்.

இஸ்ராயேலர் கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் (இணைச் சட்டம் 28:1-14), அனைத்து ஆசிகளும் கடவுளுக்கு சொந்தம்  என்ற சிந்தனையுடனும் (திருப்பாடல் 24 :1),நாம் கடவுளுடைய படைப்பின் உக்கிராணக்காரர் என்பதை நினைத்து கொள்ளும் வகையிலும், இவ்விழாவை கொண்டாடினர். (தொடக்க நூல் 1:25-28).மேலும் எம்முடையவைகளை நாம் எமக்காக அனுபவிக்காமல் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் இவ்விழா உணர்த்தி நிற்கின்றது (லூக்கா 12:13-21).

அறுவடை விழாவை நாம் எவ்வாறான மனநிலையுடன் கொண்டாட வேண்டும் என்பதை திருமறை சுட்டிக் காட்டுகின்றது. நாம் இறைவனுக்கு கொடுக்கும் போது பிறரை ஒடுக்கும்  மன நிலை இல்லாதவர்களாகவும் (தொடக்க நூல் 4:1-10), ஒப்புரவாகுதலுடனும் (மத்தேயு5:22-24), நீதியுள்ள இதயத்தோடும் (ஆமோஸ் 5:18-21), பூரண உள்ளத்துடனும் கொடுக்க வேண்டும் (லூக்கா 21:1-4).மேலும் எமது

கொடைகளால் நாம் மகிமை அடையாமல் இறைவனை மாட்சிமைப்படுத்த வேண்டும் (மத்தேயு 6:1-6).

அறுவடை விழாவின் போது நாம் எண்ணிக்கை சார்ந்த வளர்ச்சியை கருத்தில் கொள்கிறோம். குறிப்பாக இவ்வளவு இலாபம் கிடைக்கப்பெற்றது என்றும், பொருட்களை சந்தை விலையில் இருந்து எவ்வளவு அதிகமாக விற்க முடியும் என்பதைக் குறித்துமே அதிகம் கவலைப்படுகிறோம். ஆனால் அறுவடை விழா தகைமை சார்ந்த வளர்ச்சியையே சிந்திக்குமாறு எம்மை -அழைக்கின்றது. அதாவது இவ்விழாவில் எல்லோரையும் உள்வாங்கும் தன்மை, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு போன்ற அறப் பண்புகள் சார்ந்த வளர்ச்சியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீதி, ஒப்புரவாகுதல், விட்டுக் கொடுத்தல், அன்பு, மன்னிப்பு போன்ற பண்புகளும் அறுவடை செய்யப்பட வேண்டும். வெறுமனே இது ஓர் பண அறுவடை அல்ல. மாறாக விழுமியங்களின் அறுவடையாக காணப்படுதல் அவசியமாகின்றது.

அறுவடை விழா இன்றைய சமூக, பொருளாதார ,அரசியல் உலகிற்கு அறம் சார்ந்த போதனைகளைப் போதிக்கின்றது. குறிப்பாக இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு செயல்படும் முதலாளித்துவ

சிந்தனைகளை சவாலிடம் வகையில் பகிர்வு என்ற எண்ணக்கருவை மாற்றூடகமாக முன் வைக்கின்றது .அத்துடன் இன்று நிலவும் நுகர்வுக் கலாசாரத்தை இது சவாலிடுகின்றது. இதன்படி தேவையானதை தேவையான அளவில் மக்கள் பெற்று அனுபவிக்கும் புதிய வாழ்வு முறையை இது கற்பிக்கின்றது. இதனூடாக ஆண்டவர் இயேசுவின் மன்றாடலில் உள்ள “அன்றன்றுள்ள உணவை எங்களுக்கு தந்தருளும்” என்ற மன்றாட்டு பகுதி உயிர் பெற்று எழுகின்றது. மேலும் உலக பொருள் முதல்வாதம் தலைவிரித்தாடுகின்ற இத்தகைய காலத்தில் இதற்கு எதிராக மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்கும் விழாவாக இது காணப்படுகிறது. தொடக்க கால திருச்சபையில் காணப்பட்ட பகிர்வு மனப்பாங்கு நற் செய்தியாகவும், இயேசுவின் சீடர்களாகும் மனப்பாங்கையும், இறையாட்சியின் விழுமியங்களை வளர்க்கும் ஊடகமாகவும் காணப்படுகிறது.

நாம் நமது விலை பொருட்களை மாத்திரம் கடவுளுக்கு படைக்காமல் எம்மையும், எமது நேரங்கள், தாலந்துகள்,திறமைகள், இயலுமைகள், இயலாமைகள் போன்றவற்றையும் படைக்க ஆயத்தமாய் இருக்க வேண்டும். மேலும் நாம் படைத்தவைகளைக் குறித்து அல்ல இன்னும் படைக்காமல் இருப்பவைகள் எவ்வளவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .வெறுமனே பொருள் அறுவடையை அல்ல மாறாக நன்மையை அறுவடை செய்ய விழா எம்மைத் தூண்ட வேண்டும். இவற்றைச் செய்ய இறைவனின் பலத்தை நாடுவோம்.

அருட்பணி.அருளம்பலம்  ஸ்டீபன்

One thought on “அறுவடை விழா”

Comments are closed.