30 ஜூன் 2023

மத்தேயு 20:25-28

• பொதுவாகவே யூதாசின் இடத்திற்கு திருத்தூதுவராகிய மத்தாயஸ் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் அவ்விடத்திற்கு பவுலே மிகப் பொருத்தமானவர் எனக் கூறி நிற்பவர்களும் உளர்.

• திருத்தூதுவர்கள் என்ற வகுதிக்குள் நாம் உள்ளடக்கப்படுபவர்கள் அவர்கள் மந்தைகளைக் குறித்து கரிசனை உள்ளவர்களாகவும், எலும்பு முறிந்தவைகளை காயங்கட்டவும், நசல்கொண்டதை திடப்படுத்தவும், மந்தைக்காக தமது உயிரைக் கொடுக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என எரேமியா 23ம் அதிகாரத்திலேயே கூறப்படுகின்றது.

• புதிய ஏற்பாட்டு பகுதியில் கலாத்தியர் 2:1-10ல், பவுலினுடைய அழைப்புக் கூறப்படுகின்றது. பவுல் தாயின் கர்ப்பத்திலே இருக்கும்போதே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர். தமஸ்கு வீதியில் செல்லும்போது இறைவனால் தொடப்பட்டவர். நியாயப்பிரமாணத்திற்கு அடிமைபட்டிருந்த இவர் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவில் முழுமையடைகின்றது எனப் போதித்து தன்னை புற இனத்தவர்களின் திருத்தூதுவராக அடையாளம் காண்கின்றார். அத்துடன் இவர் சிறப்பாக, கடவுள் தனக்கு அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துகின்றவர் எனக் காண்பிக்கின்றார். தன்னுடைய அழைப்பை எரேமியாவின் அழைப்புக்கு ஒப்பிட்டு சான்று பகர்கின்றார்.

• நற்செய்தி பகுதியில் மத்தேயு 20:25-28ல், செபதேயுவின் தாயார் இயேசுவிடத்தில் வந்து இயேசு தமது ஆட்சியில் வரும்போது, ஒருவர் வலது பக்கத்திலும் மற்றவர் இடது பக்கத்திலும் இருந்து இயேசுவின் மாட்சிமையை அனுபவிக்க வேண்டுமென வேண்டுகின்றனர். மாற்கு 10:35-45 பகுதியில், செபதேயுவின் புதல்வர்களே இவ் விண்ணப்பத்தை இயேசுவிடம் முன்வைப்பதாகக் கூறுகின்றார். ஆண்டவர் இயேசு அவர்களை நோக்கி, அதாவது வலது பக்கம் இடது பக்கத்திற்குரிய பண்பை கடவுளே தீர்மானிப்பார். மேலும், மானிடமகன் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும்பொருட்டு தன் உயிரை கொடுக்கவுமே வந்தேன் என்கிறார். அதாவது, திருபணியின் உச்சநிலை ஊழியம் கொள்வதல்ல ஊழியம் செய்வதே. திருத்தூதுவர்கள் ஊழியம் செய்து அநேகரை மீட்கும்பொருட்டு இயேசுவைப் போன்று தமது உயிரையும் கொடுத்தனர். பொதுவாக பவுல் தன்னை புற இன மக்களின் திருத்தூதுவர் என அடையாளம் கண்டு மூன்று முக்கிய வேத போதக பயணங்களினூடாக திருச்சபைகளை யூதேயா, சமாரியா உலகின் இறுதி எல்லை வரை உருவாக்கி இருக்கின்றார். மேலும், இவர் ஓர் தூதுப்பணியாளராகவும் இறையியலாளராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்