2 ஜூலை 2023

உக்கிராணத்துவம் – பொறுப்புள்ள வள முகாமைத்துவம்

மத்தேயு 25:14-30

•          இறைவன் இவ்வுலகத்தைப் படைத்து இவ்வுலகத்தை பராமரிக்குமாறு எம் அனைவரிடத்திலும் ஓர் உக்கிராணத்துவ ஊழியத்தை தந்துள்ளார் (தொடக்கநூல் – ஆதியாகமம் 1:25-28).

•          இவ் உக்கிராணத்துவம் வெறுமனே வளங்கள் மாத்திரமன்றி இறைவன் எங்களுக்குத் தந்திருக்கின்ற தாலந்துகள், திறமைகள், இயலுமைகள், இயலாமைகள் இவ் அனைத்திலும் நாம் பொறுப்புள்ளவர்களாக காணப்பட வேண்டும் என அவர் எதிர்ப்பார்க்கின்றார்.

•          விடுதலைப்பயணம் – யாத்திராகமம் 18:13ம் வசனத்தில், மோசே இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச் செல்லும் வேளையில் அவருக்கான வழிநடத்துதல் பணி அதிகம் எனக் கண்ட எத்திரோ சில மூப்பர்களை நியமிக்கின்றார். அவர்கள் மோசேயுடன் இணைந்து தலைமைத்துவத்தை வழங்குகின்றனர். இது ஓர் பகிர்வின் ஊழியமாக கருதப்படுகின்றது. இவ்வாறான பகிர்வின் ஊழியத்தை நாம் செய்வதனூடாக இறைவனின் திருப்பெயருக்கு மாட்சிமை உண்டாக்குகின்றோம். இதனை திருப்பாடல் – சங்கீதம் 147ல், நாம் பார்க்கின்றோம்.

•          2 கொரிந்தியர் 8ம் அதிகாரத்திலே, சிறப்பாக இஸ்ரவேல் மக்கள் மன்னாவினால் போஷிக்கப்படும் வேளையில், அவர்கள் தமக்கு தேவையான அளவை மாத்திரம் எடுத்துக்கொண்டனர். எனவே, இவ் உதாரணத்தைப் பயன்படுத்தி 2 கொரிந்தியர் 8:9யிலே, கிறிஸ்து நம்மை செல்வந்தராக்கும் பொருட்டு அவர் எமது தரித்திரத்தை அல்லது வறுமை நிலையை தானாகவே ஏற்றுக் கொண்டதாக நாம் வாசிக்கின்றோம். இதனை தன்னார்வ வறுமை நிலை என நாம் குறிப்பிடுகின்றோம். இன்று உலகில் வறுமை நிலைக்கு பிரதானமான காரணம் சுரண்டலும், பங்கீட்டில் காணப்படும் சமத்துவமற்ற நிலையுமே ஆகும். 80% வீதமானோர் 20% வீதமான வளங்களையும் 20% வீதமானோர் 80% வீதமான வளங்களையும் பயன்படுத்துவதே இதற்கான விலையாகும்.

•          நற்செய்தி வாசகத்தில் மத்தேயு 25:14-30ல், தாலந்து உவமையை நாம் காண்கிறோம். அவரவரின் திறமைக்கேற்ற அளவில் தாலந்து வழங்கப்படுகின்றது. அதனை பயன்படுத்துமாறு அவர்கள் வேண்டப்படுகின்றனர். எனினும், ஒருவர் மாத்திரம் அத் தாலந்தை பயன்படுத்தாமல் புதைத்து வைக்கின்றார். புதைத்து வைத்தது மாத்திரமன்றி ஏனையவர்களை குற்றப்படுத்துகின்றார். எனவே, நாம் எமக்கு இறைவன் அளித்துள்ள வளங்களை சரியான முறையில் பயன்படுத்தவும், மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய விதத்தில் அதனை பயன்படுத்தவும் இறைவன் எம்மை அழைக்கின்றார். எமது ஒவ்வொரு செயற்பாடுகளும் உத்தரவாதத்தின் அடித்தளத்தில் இடம்பெற வேண்டும்.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்