9 ஜூலை 2023

கடவுளின் மக்களை திருப்பணியில் பயன்படுத்துதல்
இறையியல் கல்வி ஞாயிறு

மத்தேயு 7:24-29

• ஓர் தனிமனிதனோ அல்லது ஒரு சமூகமோ கடவுளின் தன்மையையும் அவரது செயற்பாட்டையும் தாங்கள் வாழும் சூழலில் புரிந்துக் கொள்ள முற்படுவதே இறையியல் என அழைக்கப்படுகின்றது. இறைவெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், அனுபவம், வரலாறு, பிற சமய ஏடுகள் போன்றவைகள் இறையியல் ஆக்கத்திற்கு எமக்கு உதவுகின்றன.

• இணைச்சட்டம் – உபாகமம் 6ம் அதிகாரத்தில், இறைவனால் மனுக்குலத்திற்கு கொடுக்கப்படும் கட்டளைகள் குறித்து ஆசிரியர் பேசுகின்றார். இக்கட்டளைகள் அனைத்தும் கடைப்பிடிக்கக் கூடிய வகையில் மனித இதயங்களில் எழுதப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. திருப்பாடல் – சங்கீதம் 119:83ம் வாக்கியத்திலிருந்து பார்க்கும்போது, திருச்சட்டம் எந்தளவிற்கு முக்கியமானது என்பதை பார்க்கிறோம். அதேபோன்று ஓர் இறையியலாக்கத்திற்கு திருமறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. திருமறையிலேயே கடவுளின் வெளிப்பாட்டை நாம் காண்கின்றோம். திருமறையிலேயே கடவுளின் தன்மை மற்றும் செயற்பாடு போன்றவற்றை நாம் அவதானிக்கின்றோம். எனவே, இறையியலாக்கத்திற்கு இறைவார்த்தைகள் முக்கியமானதொன்றாகும்.

• எபேசியர் 4:17ம் வசனத்திலிருந்து பார்க்கும்போது, திருப்பணியில் பல வகை உண்டு என்பதை ஆசிரியர் காண்பிக்கிறார். இறைவன் ஒருசிலரை திருத்தூதுவர்களாகவும், இறைவாக்கினர்களாகவும், நற்செய்தி பணியாளர்களாகவும், போதகர்களாகவும் இவ்வாறு பலதரப்பட்ட வேறுபாடான அழைப்பு காணப்படுகிறது என்பதை குறிப்பிடுகின்றார். எனவே, திரு அவையிலும் திருப்பணியிலும் நாங்கள் மக்களை பல்வேறுபட்ட பணிகளுக்காக பயன்படுத்த அழைக்கப்படுகின்றோம்.

• மத்தேயு 7:24ம் வாக்கியத்திலிருந்து பார்க்கும்போது, எமது திருப்பணியின் அடித்தளம் என்ன என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளலாம். சிறப்பாக, மத்தேயு 5,6,7 ஆகிய அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதனைகளைக் கேட்டு அதன்படி செய்பவர்கள் கற்பாறையின்மேல் தங்கள் இல்லங்களை அமைத்தவர்களுக்கு ஒப்பாவர். மாறாக, அவ்வார்த்தைகளுக்கு செவிகொடுக்காதோர் மணல் தரையில் தங்கள் இல்லங்களை அமைத்தவர்களுக்கு ஒப்பாவர். எனவே, இதன் அடித்தளத்தில் எமது இறையியல் ஆக்கமும் திருமறை சார்ந்த வார்த்தைகளின் அடித்தளத்திலும் செயல் சார்ந்த முறைகளிலும் காணப்படும்போது அது சூழல் சார்ந்த ஓர் இறையியலாக செயல் வடிவம் பெறுகின்றது. மாறாக, இறைவார்த்தையை மையப்படுத்தாத இறையியல் அனைத்தும் செயல் வடிவமற்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றது. எனவே, இறைவார்த்தையை மையப்படுத்திய இறையியலை நாங்கள் உருவாக்கி, அதற்கூடாக மக்களை எமது திருப்பணியில் இணைத்து பங்குதார மாதிரியை உருவாக்கி இறையாட்சியை வளர்ப்போமாக.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்