22 ஜூலை 2023

மகதலேனா மரியாளின் திருநாள்

யோவான் 20:11-18

•          திருச்சபை வரலாற்றில் பொதுவாக ஆணாதிக்க தன்மையுள்ள மக்கள் நினைந்துக் கொள்ளப்பட்டாலும் மகதலேனா மரியாள் இந்நாளில் நினைந்துக் கொள்வது மிகப் பெரிதான ஓர் விடுதலைச் சார்ந்த சிந்தனையை எங்களுக்குக் கூறி நிற்கின்றது. பொதுவாக யூதர்களை பொறுத்தவரையில் அவர்கள் ஆண்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள். உதாரணமாக பெண்கள் திருமணத்திற்கு முன் தங்கள் தந்தையாலும், திருமணத்திற்கு பின்னர் தங்களுடைய கணவன்மாராலும் அடையாளப்படுத்தப்படுவார்கள். இங்கே மகதலேனா என்பது ஓர் ஊர் சார்ந்ததாகும். எனவே, இப்பெண்மணி ஊரினால் அறிமுகப்படுத்தப்படுகிறார் என்றால் இவள் ஓர் ஊரறிந்த பெண் என்ற கருத்தை நாங்கள் முன்வைக்கலாம். மேலும், இப்பெண்ணிடமிருந்தே ஆண்டவர் இயேசு ஏழு பிசாசுகளைத் துரத்தியதாக திருமறை எமக்குக் கூறுகின்றது.

•          செப்பனியா 3:15-20 வரையுள்ள பகுதியில், அதாவது இஸ்ரவேல் மக்களை பலப்படுத்தும்படி ஆண்டவர் உரைப்பது என்னவென்றால், “இதோ நான் உங்கள் நடுவில் இருக்கிறேன். ஆகவே, உங்கள் கரங்களை தளரப்பண்ணாதிருங்கள்” என இறைவாக்கினர் செப்பனியா ஊடாக இறைவன் பதிலளிக்கிறார். எனவே, மகதலேனா மரியாளின் வாழ்வைப் பார்க்கும்போது, அவளும் பல சந்தர்ப்பங்களில் ஆணாதிக்கவாதிகளால் பல துன்பங்களை அனுபவித்தாள். ஏனெனில், யூதர்களை பொறுத்தவரையில் பெண்கள் இரண்டாம் தர பிரஜைகளாக கருதப்பட்டனர். ஓர் யூத ரபி ஒவ்வொரு நாளும் மன்றாடும்போது, “இறைவா நீர் என்னை நாயாகவும் பெண்ணாகவும் படைக்காதபடியால் உமக்கு நன்றி” எனக் கூறினார். இப்பேர்ப்பட்ட சூழலில் அவள் கரங்களை கடவுளே பலப்படுத்தினார். இதனையே திருப்பாடல் – சங்கீதம் 116இலும், பலமற்ற மக்களின் பலமாகவும், குரலற்ற மக்களின் குரலாகவும் கடவுள் காணப்படுகிறார் என்ற உண்மை பேசப்படுகின்றது.

•          2 யோவான் 1ம் அதிகாரத்தில், அன்பின் மேன்மையைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். அன்பு சகல தடைகளையும் தாண்டிச் செல்லும் தன்மையுள்ளது. அது பணப் பெறுமதியைக் குறித்து சிந்திக்காது. அன்பு செயல்வடிவம் சார்ந்த பணியை எமக்குக் கற்றுத் தருகிறது. மகதலேனா மரியாவும் இயேசுவிடம் கொண்ட அன்பினிமித்தம் அவள் நளதம் என்றழைக்கப்படும் பரிமளத்தைலத்தை ஊற்றி, அவர் பாதத்தை நனைத்து கண்ணீரால் துடைக்கும் காட்சியை நாம் இங்கு கொண்டுவருதல் அவசியமாகின்றது.

•          யோவான் 20:11-18 வரையுள்ள பகுதியில், யோவான் நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த ஆண்டவர் மகதலேனா மரியாவுக்கு முதலில் காட்சி கொடுக்கின்றார். பின்னர், மகதலேனா மரியாவை நோக்கி, “நீ சென்று உன் சகோதரர்களிடத்திலே இதோ எனது உயிர்ப்பின் செய்தியை அறிவி” எனக் கூறுகின்றார். எனவே, இப்பகுதியினூடாக மகதலேனா மரியாள் ஒரு நற்செய்தியாளனாக காணப்படுகின்றார். யோவான் 4ம் அதிகாரத்திலும், சமாரியப் பெண்ணை ஒரு நற்செய்தியாளராக காட்டிய ஆசிரியர் இங்கு மகதலேனா மரியாவை இன்னுமோர் நற்செய்தியாளராக காண்பிக்கின்றார்.

•          மகதலேனா மரியாள் இயேசுவைக் குறித்து ஒரு நற்செய்தி நூலை எழுதியதாக திருச்சபை பாரம்பரியம் கூறுகின்றது. எனினும், ஆணாதிக்க சிந்தனைவாதிகளால் இந்நூல் நற்செய்தி நூலுக்குள் உள்வாங்கப்படவில்லை. இது தீயிட்டு எரிக்கப்பட்டதாக வரலாற்றில் நாம் படிக்கிறோம். எனவே, இன்றைய நாளில் ஆணாதிக்கத்தின் மத்தியிலும் இறைவன் எடுத்துப் பயன்படுத்திய மகதலேனா மரியாவைப் பற்றி நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக.

ஆக்கம் : அருட்பணி அருளம்பலம் ஸ்டீபன்