கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக இயேசு என்னும் ஒரு தனிமனிதன் முழு உலகின் மீட்பிற்காக கொடிதான சிலுவை மரத்தைத் தோழில் சுமந்து படைவீரர்களின் கசையடிக்காயங்கள் மட்டுமன்றி முள்முடி தலையில் குத்த யூத அடிப்படைவாதத்தின் நிந்தனைகளுடன் அவதூறுப் பேச்சுக்களையும் தாங்கியவண்ணம் கொல்கொதா எனும் மலைநோக்கிச் சென்றார். இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் சொந்தமண்ணிலிருந்து பிடுங்கியெடுக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்று இலங்கைத் தேசத்தின் மீட்ப்பிற்காக தோலில் பொதியுடன் உடுத்த உடையுடன் கண்காணிகளின் பிரம்படிகள் மட்டுமன்றி காட்டு விலங்குகளின் குதறல் காயங்களுடன் இறந்தோர் இறக்க எஞ்சியோர் மன்னாரிலிருந்நு மலையகம் நோக்கித் கால்நடையாக தொடர்ந்தனர் தம் கொடிய பயணத்தை. இவ்விரு ஒப்புவமைகளோடு இயேசுவின் சிலுவைப்பாடுகள் மலையக மக்கள் மத்தியில் இன்னும் உயிருடன் செயற்ப்படுகின்ற திறன் பற்றி நோக்குவோம்.

இயேசுவைப்போல கட்டிக்கொடுக்கப்பட்ட மலையக மக்கள்

இயேசு தனது மூன்றரை வருடப் பணிக்காலத்தில் தனது மண்ணில் தன் சீடர்களுடன் பல இடர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியாக பணிசெய்துகொண்டிருந்தார். அவர் சீடர்களில் ஒருவரான யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசுகளுக்காக அவரைக்காட்டிக்கொடுத்தார் மன்னார் வந்திறங்கிய இந்திய மக்களும் தம் சொந்தத் தாயகத்தில் தம் சொந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துமிருப்பர். சமூகத்திலுள்ள பெரும் தலைகளுக்கும் பிரித்தானியக் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏழைமக்களுக்கு ஆசை வார்த்தைகள் பல காட்டி இலங்கை வரவழைக்கப்பட்டுள்ளனர். இயேசுவைப் பணத்துக்காகக் காட்டிக்கொடுத்ததுபோல் இந்த மக்களை பணத்துக்காக விற்றுவிட்டார்கள் என்று கூறுவது சாலப்பொருந்தும்.

இயேசு தாம் சிலுவைப்பாடுகளுக்குள் செல்லமுன்பு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவை நடாத்துகிறார். அதுபோன்ற ஒரு பெரிய விருந்தாகாவிட்டாலும் ஒரு சிறிய பிரியாவிடை உணவாகிலும் இந்தமக்கள் மத்தியிலும் நடந்திருக்கக்கூடும் என நம்புகிறேன். உறவுகளைப்பிரியும் வலி என்பது அவர்களுடனான பிரியாவிடை உணவின் போது சிறிது தேற்றப்படும் என இயேசுவும் நம்பியிருந்தார் போல். இயேசுவின் சிலுவைக்குக் காரணமாக இருந்தது அன்றையகால ஆலயக்கட்டமைப்பு, தலைமைக்குருக்கள் மற்றும் அரசியல் சூழ்நிலை என்பது பலருக்குத் தெரிந்ததே.

நாடுகடத்தப்பட்ட மலையக மக்கள்

அதேபோன்ற ஒரு சமூகக்கட்டமைப்பே இந்த இந்திய மக்களின் கொடும் பயணத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. சாதிய வேறுபாடுகளால் பிரிவினைகளை அனுபவித்த மக்கள் சிலரை அந்தக்கட்டமைப்பு தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதியது. அப்படி பாடு அனுபவித்த மக்களே இலங்கைக்கும் அழைத்து வரப்பட்டனர். அழைத்து வரப்பட்டனர் என்பதிலும் பார்க்க நாடுகடத்தப்பட்டனர் என்று கூறுவது சிறப்பென கருதுகிறேன். அவ்வாறு கொண்டுவரப்பட்டமக்கள் இலங்கைக்கு வந்தபின்னராவது சாதியக்கொடுமைகளிலிருந்து விடுபடுவார்கள் என்று பெருமூச்சுவிடும் போதுதான் பிரித்தானிய கம்பனிகளின் சூழ்ச்சியும் இலாப நோக்கும் வெளிப்படுகிறது. எவ்வாறெனில் இந்தியாவில் இவர்களை ஒடுக்கியாழுகை செய்த, தாம் உயர்குடிகள் எனக்கருதிய சில குழுக்களை இந்த மக்களைக் கண்கானிப்பதற்காகவே இந்தியவிலிருந்து கொண்டுவந்து இலங்கையிலும் அதே சமூகக் கட்டமைப்பை உருவாக்கி மீள முடியாத ஒரு அடக்குமுறை வடிவத்தினை உருவாக்கி விட்டனர்.

இயேசுவின் சிலுவைப்பயணம் அவர் கொல்கொதா மலையை அடைந்ததும் நிறைவாகிற்று. ஆனால் இந்தமக்களின் சிலுவைப்பாதை இன்னும் நிறைவடையவில்லை. மன்னாரில் தங்களின் மூட்டை முடிச்சுக்களை தோலில் ஏற்றவர்கள் இன்னும் அதனை இறக்கிவைக்க முடியவில்லை. பயணத்தின்போது தங்கள் உடமைகளாக இருந்த பொதி இன்றும் அதே தோலில் தேயிலைக் கொழுந்தாகவும் பொருளாதார சுமையாகவும் அமர்ந்து சுமை கொடுக்கிறது.

இயேசுவிற்கு விழுந்த கசையடிகள் அவர் சிலுவையில் தொங்கியபோது நிறுத்தப்பட்டது ஆனால் இவர்களுக்கு விழ ஆரம்பித்த கண்காணியின் பிரம்படிகள் இன்னும் தேயிலைக் காடுகளில் எதிரொலித்தவண்ணமே உள்ளது.

Rev. Jude Vinothan, Sri Lanka.

இயேசுவிற்கு நடந்த அவமரியாதை நிந்தனைகள் எல்லாம் அன்றோடு நிறுத்தப்பட்டது ஆனால் இவர்களுக்கு அது தொடர் காவியமாகப் பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இயேசுவின் முள்முடி அன்றே அவிழ்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் இன்றும் அந்த முள்முடியின் வலிகளை குளவிக்கொட்டின் வடிவில் அனுபவித்துக்கொண்டே வருகின்றனர்.

இயேசுவின் விலாவிலிருந்து சொரிந்த இரத்தமும் இரும்பாணிகள் துளைத்த காயங்களிலிருந்து சொரிந்த குருதியும் அவர் மரணித்தபோது நின்றுவிட்டது. ஆனால் இவர்களின் உடலில் இன்னும் சொரிந்து கொண்டே இருக்கிறது அட்டைக்கடிகளின் காயத்தின் மூலமாய். முள்முடி, கசையடி மற்றும் சிலுவைப்பாரம் என்பனவற்றைத் தாங்கி இயேசு நடந்தது போல் மலையகமக்கள் குழவிக்கொட்டு, அட்டைக்கடி, பிரம்படி மற்றும் கொழுந்துக்கூடையின் சுமைகளைத்தாங்கியபடி நடந்து கொண்டே இருக்கின்றனர். எத்தனை மலைகளைக் கடந்தபோதும் இவர்களின் பயணம் இன்னும் நிறைவடையவில்லை.

இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கவும் அவரை அடக்கம்செய்யவும் அவருக்கு அன்பான யாரேசிலர் இருந்தனர். ஆனால் இவர்களை இந்தக் கொலைக்காட்டிலிருந்து விடிவிக்க இன்னும் யாருமே வரவில்லை. இயேசு இறந்தபின்னர் ஓர் இரவல் கல்லறையில் வைக்கப்பட்டதுபோல் இன்றும் மலையகமக்கள் தங்களுக்குச் சொந்தமென்று சொல்லமுடியாத பத்துக்குப் பத்து குதிரைகள் அடைக்கும் லயம் போற்ற தொடர் குடியிருப்பிலேயே வாழ்கின்றனர், மன்னித்தும் வசிக்கின்றனர். இவர்கள் மீதுதான் சுமைகள் உள்ளது என்று பார்த்தால் இவர்கள் தங்கும் வீட்டின் கூரைகளிலும் சுமைகள் உள்ளன காரணம் காற்றடிக்கும்போது கூரைத்தகடுகள் பறந்து சென்றுவிடக்கூடாது என்பதற்க்காக மண்மூட்டைகள், பெரும் கற்கள் மற்றும் மரக்கட்டைகள் என்பனவற்றை சுமந்துகொண்டே உள்ளது. இன்றுவரை ஒரு அடி நிலத்திற்கு கூட சொந்தமற்றவர்களாகவே உள்ளனர்.

‘மலையக மக்கள் விரும்பத்தக்கது’

கொல்கொதா மலையில் சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தது போல் தாமும் இந்த மலைகளை விட்டு இறங்கிவிட்டால் புதுவாழ்வு பெறலாம் என்று என்னிய மக்களில் சிலர் தம் தாய்மொழியாம் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடகிழக்கு நோக்கி தாய்மொழி ஒன்றே தங்களைப்பாதுகாக்கும் என நம்பி தங்கள் பயணங்களை மேற்க்கொண்டனர். ஆனால் அவர்கள் மலைகளில் பட்ட அவமானங்கள் கொடுமைகளை விடவும் பன்மடங்கு அவமானப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். வடகிழக்கின் செல்வந்தர்களுக்கு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர். இன்றும் தங்கள் கடைகளிலோ அல்லது வீடுகளிலோ வேலை செய்வதற்க்கான வேலையாட்களைத் தேடும் விளம்பரங்களில் ‘மலையக மக்கள் விரும்பத்தக்கது’ எனும் வசனத்தை இந்த வடகிழக்கு மற்றும் கொழும்பைச்சேர்ந்த செல்வந்தர்கள் பிரசுரித்துக்கொண்டே உள்ளனர்.
நான் மலையகத்தில் பணியாற்றிய காலங்களில் இத்தகைய செல்வந்தர்களில் பலர் தங்கள் வீடுகளில் கடைகளில் வேலை செய்ய எனது சபையிலிருந்து யாரையாவது சிபாரிசுசெய்யும்படி பலமுறை கேட்டனர். இன்று நான் மனநிறைவு கொள்கிறேன் அத்தகைய தவறை நான் செய்யாததால், மாறாக அங்கு நான் இனங்கண்ட இளைஞர் யுவதிகளை எதிக்கால தலைவர்களாகும் வகையில் வழிசமைத்துக் கொடுத்தமைக்காய் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிலமற்ற மலையக மக்கள்

வடகிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் அங்கும் நிலமற்றவர்களாகவே நடாத்தப்படுகின்றனர். இன்றுவரை அவர்கள் விவசாயம் செய்வதற்க்கான நீர்ப் பங்கீட்டில் ஓரம் கட்டப்பட்டவர்களாக பெரும் அரசியல் வலையில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். நடந்தேறிய கொடிய யுத்தத்தில் வடகிழக்கைச்சேர்ந்த செல்வந்தர்களின் பிள்ளைகள் பலர் வெளிநாடுகளுக்குச் தப்பி ஓடியிருக்க யுத்தத்தில் பெரும்பலும் பலியானவர்கள் இந்த அப்பாவி மலையக மக்களின் பிள்ளைகள் என்பது மறுக்கப்படாத உண்மையாகும். விடுதலைப் போராட்டமானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கானதா என்று நோக்கினால், ஆரம்ப கட்டத்தில் அத்தகைய ஒருவடிவத்தைப் பெற்றிருந்த போதும் காலப்போக்கில் அது வடகிழக்கை மீட்க்கும் போராட்டமாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்தப்போரினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மலையகமக்களாவர். வடகிழக்கில் குடியேறியவர்கள் மட்டுமல்லாது மலையகத்தில் வாழ்ந்தவர்களையும் இப்போராட்டம் வெகுவாய் பாதித்தது.

மலையக மக்களை வைத்து இன்றும் பலர் தம் வாழ்வை வழமாக்கியவண்ணமே உள்ளனர். மலைக்காடுகளில் கொட்டும் பனியிலும் அட்டைக்கடியிலும் இரத்தம் சிந்தி எடுக்கப்பட்ட தேயிலைக்கொழுந்துகள் உலகின் முதற்தர தேயிலைகளாக மாற்றப்பட்டு பன்மடங்கு இலாபத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற போதும் மக்களுக்கான நியாயமான வேதனத்தை நிர்ணயிப்பதற்கு யாராலும் முடியவில்லை. இவர்களை வைத்து வேலைவாங்கும் முதலாளிகள் செல்வச்செழிப்பில் உல்லாசமனுபவிக்கின்றனர், அவர்களின் பங்களாக்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளின் தரத்திலும் அதிகமானவை. அவர்களில் பலருக்கு தேயிலைக் கொழுந்து பச்சை நிறம் என்றே தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. தேயிலையை சுடுநீரில் போட்டதும் சிகப்பாக வருவதனால் தேயிலை சிகப்பு நிறமென்றே நினைப்பர். அந்த செந்நிறம் மலைக்காடுகளில் கடினப்பட்டு உழைக்கும் தோட்டத்தொழிலாளியின் இரத்தம்தான் என்பது அவர்களுக்குப் புரியாது. இம்மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தேயிலைப் பொதியின் தரத்தைப்பற்றி கூறவேதேவையில்லை. ஆடைநெய்யும் தொழிலாளிக்கு போர்வை இருக்காது என்பதுபோல் சிறந்த தேயிலையைச் சுவைக்கும் பாக்கியம் இவர்களுக்கு கிடைப்பதே இல்லை.

தோட்ட முதலாளிகள் தான் இவர்களைக் கசக்கிப்பிழிகிறார்கள் என்றால் இவர்களின் பிரதிநிதிகளாப் பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகளும் சலித்தவர்கள் அல்ல. இங்குவாழும் மக்கள் அரசியலை ஒரு மதமாகப் போற்றுபவர்களாகவும் தேர்தல்களை திருவிழாக்களாகக் கொண்டாடுபவர்களாக இருந்தபோதும் இவர்களுக்கான நீதி இன்றுவரை மறுக்கப்பட்டவண்ணமே உள்ளது. உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் பாஸ்காப்பண்டிகையின்போது எருசலேமில் ஒன்றுகூடுவதுபோல் இலங்கை முழுவதும் வேலைபார்க்கும் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் மலையகமக்கள் தேர்தல் காலங்களில் மலையகத்திற்கு வந்து விடுவர். சமயப்பண்டிகைகளுக்கு வராதவர்கள்கூட அன்றயதினம் வந்துவிடுவர். உண்மையில் அது அவர்களுக்கொரு பாஸ்காவாகத்தான் இருக்கும். அன்றைய தினம் அவர்ளின் உணவுகளிலும் உணர்வுகளிலும் ஒரு விசேசித்ததன்மை காணப்படும். அதிக நாட்க்களின் பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பர், கூடி மகிழ்வர்.

இயேசு கிறிஸ்து, தான் திரும்ப வரும்மட்டும் தன்னை நினைவுகூறும்படி ஒரு திருவருட்சாதனத்தை உண்டுபண்ணினார். தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் எமக்காகத் தருவதன் அடையாளமாக அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் தன் சீடர்களுடன் பகிர்தளித்தார். இதனை இன்றுவரை திருச்சபைகள் நினைவுகூர்ந்து வருகின்றன. எமது ஆன்மீக வாழ்வில் இந்த திருவருட்சாதனம் உந்துசக்தியாக இருந்து வருகின்றது. இயேசுவின் இவ்வடையாளம் அன்றைய கால யூத உணவு முறைமையின் அடிப்படையிலே அமைந்துள்ளது. அதேபோன்று அநேகநாடுகளிலும் எமது வாழ்விலும் தேனீர் அன்றாட வாழ்வின் உந்து சக்தியாக இருந்து வருகின்றது. இயேசுவின் இரத்தமும் சதையுமாக நாம் அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் கருதுகிறோம்.

ரொட்டியும் தேநீரும்

அதேபோன்று ரொட்டியும் தேநீரும் மலையகமக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பினைந்துள்ளதுடன் இலங்கைவாழ் ஏழை மக்களின் உணவுப்பழக்கத்திலும் உள்ளடங்கியுள்ளது. இந்த உணவுப்பழக்கம் பிரித்தானியர்களின் திட்டமிட்ட திணிப்பு என்றே கூறவேண்டும். ஏனெனில் கோதுமையை அதிகமாக உட்கொள்ளுவது அவர்களின் உடல் உழைப்பைபெருக்கும் அதேவேளை அவர்களின் சிந்தனையாற்றலைக் குறைக்கும் என்பதனை நன்கு அறிந்திருந்தனர்.

இயேசு இரத்தம் சிந்தியதுபோல் தேயிலைக்காடுகளில் இன்றும் மக்கள் இரத்தம் சிந்தியவண்ணமே உள்ளனர் அதற்கு சான்றாகவே தேநீரும் செந்நிறத்தில் தோன்றுகிறது போல். வண்ணவண்ணக் குவழைகளில் தேநீர் பருகும் பலருக்குத் தெரிவதில்லை தாம் மலையக மக்களின் குருதியைத்தான் பருகிக்கொண்டிருக்கிறோம் என்று.

பல திருச்சபைகள் மலையகமக்களை நினைவுகூறும் வகையில் திருவிருந்தில் அப்பத்திற்கும் திராட்சைஇரசத்திற்ககும் பதிலாக ரொட்டியையும் தேனீரையும் பகிர்ந்து அம்மக்களுடனான தம் உடனிருப்பை காட்ட முற்ப்பட்டனர், ஆனால் சில அடிப்படைவாதாக் கிறிஸ்தவர்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. ஆயினும் உழவர் திருநாளில் ஐக்கிய விருந்தில் பொங்கலும் தேநீரும் கொடுப்பதற்கு அனுமதிகள் கிடைத்தது. அதற்குள்ளும் பல பாகுபாடுகள் மற்றும் சாதியப்பின்னணிகள் செல்வாக்குச் செலுத்துகிறது.

தேயிலைக்காடுகளை அந்நிறுவனங்கள் சரியான முறையில் பராமரிக்காது இலாபத்தை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறது. தோட்டங்களுக்குத்தேவையான உரவகைகளை வழங்காமையால் கொழுந்தின் வளர்ச்சி போதிய அளவில் இருப்பதில்லை. இதனால் ஒரு தோட்டத்தொழிலாளிக்கு ஒரு நாளில் நிர்ணயிக்கப்பட்ட கொழுந்தின் நிறையை எட்ட முடிவதில்லை. அதனால் அவர் ஒருநாள் முழுவதும் வேலை செய்தாலும் அவருக்கான முழுநாள் ஊதியம் கிடைக்காமல் போகின்றது.

நாட்டில் வறட்சியான காலநிலைக் காலங்களில் தேயிலைக்கொழுந்துகள் கணிசமான அளவில் குறைவதனால் ஒரு தொழிலாளிக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள்மட்டுமே கொழுந்தெடுக்க அனுமதி வழங்கப்படும். இதனால் இவர்களின் மாத வருமானம் மிகக்குறைவானதாகி அக்குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை முறைமை முழுவதுமாகப் பாதிக்கப்படுகிறது. தோட்டத்தொழிலாளிகளுக்கு வேலைசெய்யும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் கிடைக்கும் நிலை மாற்றப்பட்டு மாதாந்த வேதனத்தை வழங்கினால் இந்நிலை மாற்றப்படும்.

இயேசுவின் சிலுவைப்பாடுகளின் துன்பியலை வருடாவருடம் நினைவுகூர்ந்து வரும் திருச்சபைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அந்த வேதனையை உணர வேண்டுமென்றால் சிறிது காலம் மலையகத்தில் வாழ்ந்து பார்த்தால் புரியும் அந்த சிலுவையின் பாரமும் கசையடி வேதனையும் முள்முடி காயங்களும் இரும்பாணி மற்றும் ஈட்டியின் கூர்மையும், அவமான வார்த்தைகளும் இயேசுவிற்கு எத்தகைய வேதனையைக் கொடுத்திருக்கும் என்று.

ஆக்கம்:
அருட்பணி. சிறி.யூட் வினோதன்,
அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை
.