RECONCILIATION : NEW COVENANT OF CHRIST

ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை

நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக.  இன்றைய நாளில் ஒப்புரவாகுதல் எனும் கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை என்ற தலைப்பின் கீழ் இறைவார்த்தைகளை அருளுரையாய் பெற்றுக்கொள்வோம். 

1. திருப்பாடல்கள் 105: 37-45 

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரயேலை கடவுள் விடுவித்து தாம் ஆபிரகாமுக்கு அளித்த வாக்கின்படி பாலும் தேனும் ஓடுகிற நலமானதும் பரந்ததுமான கானானுக்கு வழிநடத்தினபோது பசிக்கு உணவளித்து, தாகத்துக்கு தண்ணீர் தந்து, பகலில் காக்க மேகமும், இரவில் காக்க நெருப்புத் தூணுமாய் இருந்தார். இஸ்ரயேல் மக்கள் கடின உள்ளத்துடன் கடவுளுக்கு கீழ்ப்படிய மறுத்த போது அழிக்க நினைத்தாலும் ஆபிரகாமுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து மன்னித்து வாக்களித்த படியே மகிழ்ச்சி நிறை வாழ்வைத் தந்தார். உடன்படிக்கையைப் புதுப்பித்து தம் மக்களை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். ஆக கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த  வாக்குறுதியை நினைவுகூரும் கடவுளாகவும் ஆபிரகாமுடன்  செய்து கொண்ட உடன்படிக்கையை இஸ்ரயேல் மக்களுடன் புதுப்பித்துக் கொள்ளும் கடவுளாகவும் வாழ்வளிக்கும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டயிருக்கிறார். 

2. ரூத் 1:1-18 

ரூத் நூல் லெவிரைட் (லெவிர்-மைத்துனர்) திருமணத்தைக் கட்டுடைப்பு செய்து இனமறுப்பு மறுமணத்திற்கு அடித்தளமாகிறது. இந்நூல் மாமியார் மருமகள் அன்பைக் குறித்து கற்பிக்கிறது. மேலும் புதிய பற்றுறுதி, புதிய உறவு என உறவு மேம்படுத்துதலுக்கு அடித்தளமாய் அமைகிறது. அல்லாமலும் நகோமியின் துணிவும் ரூத்தின் ஒப்படைப்பும் கிறிஸ்து பிறப்பின் அடித்தளமாகவும் உலக மீட்பிற்கான  புதுஉடன்படிக்கையாயும் அமைந்துள்ளது. கணவனுடன் செய்துகொண்ட திருமண உடன்படிக்கை கணவனுடைய இறப்பை முன்னிட்டு முறிக்கப்பட்டிருப்பினும் மாமியாருக்கும் மருமகளுக்குமான உடன்படிக்கையை ரூத் முறித்துக்கொள்ளவில்லை. முழுமையான ஒப்படைப்பும் உடன்படிக்கையில் உறுதியாயும் உள்ளார்.

3. மத்தேயு 5:20-26 

பத்து கட்டளைகளை ஆண்டவர் இயேசு கூர்மைப்படுத்தி சொல்லுகின்ற போது இரண்டாக வடிவமைக்கிறார். 1) கடவுளிடத்தில் அன்பு செலுத்து. 2) சகமனிதரிடத்தில் அன்பு செலுத்து என சொல்லுகிறார். ஆனால் அதற்கு முன்னமே முதலாவது திருச்சட்டத்தின் உண்மையான பொருளை விளக்கியதோடு அதனை அடுத்த நிலைக்கு விரிவாக்கம் செய்தார். கொலை செய்வது மட்டும் குற்றம் அல்ல. மரியாதை குறைவாக பேசுவதும், மனித மாண்பை சீர்குலைப்பதும், தனிமனித ஆளுமையை இழிவுப்படுத்துவதும் அந்நபரை மாபெரும் படுகொலை செய்வதற்கு இணையானது. 

ஆபேலின் சூதுவாதற்ற சகோதர அன்பை காயீன் கொலை செய்தான். யோசேப்பை குழியில்தள்ளி கொலை செய்ய முயற்சித்ததை விட அடிமையாக விறறுப் போட்டது மாபெரும் படுகொலை ஆகும். யாக்கோபின் நம்பிக்கையைக் கொலை செய்தார்கள். உயிரோடு இருக்கும் சகோதரனுக்கு தகப்பனுக்கு முன்பாக போலியாக துக்கம் கொண்டாடினார்கள்.  தாவீது தன் போர்ப்படை தளபதியான உரியாவின் நம்பிக்கையைப் படுகொலை செய்தான். 

ஒருவரின் உடலைக் கொல்லுவதை விட ஒருவருடைய நம்பிக்கையையும் அன்பையும் சுயமரியாதையையும் ஆளுமையையும் சீர்குலைப்பதென்பது படுபாதகமான கொலையாகும். ஒருவரின் பண்பு நடத்தையை சீர்குலைப்பது கடவுளின் பார்வையில் மிகவும் விரும்பத்தகாத ஒன்றாக உள்ளது. இவற்றுக்கு மூலகாரணமாக இருப்பது சினம். அத்தகைய சினம் ஒரு மனிதருக்கு இருத்தல் கூடாது. காயீனின் சினம், யோசேப்பின் சகோதரருடைய சினம், தாவீதின் சினம் உடல் ரீதியான கொலைக்கு முன் ஆளுமை சிதைவை ஏற்படுத்தின. இத்தகைய சூழலில் கடவுள் பரிவிரக்கம் கொண்ட கடவுளாக இருக்கிறார். மன்னிக்கும் கடவுளாக இருக்கிறார். சினத்தைத் தூண்டும் சகோதரரிடம் எதிர்சினம் காட்டுவோராய் இராமல் மன்னிப்பின் வழி ஒப்புரவாக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். மன்னிப்பைக் கேட்டால் தான் மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதல்ல. தவறு இழைத்தவரை தாமாகவே முன்வந்து மன்னிப்பதே ஒப்புரவாகுதலின் அடித்தளமாக உள்ளது. கடவுள் அப்படி செய்தார். ஆண்டவர் இயேசு இத்தகைய செயல்வழியாக  தண்டனையளிக்கும் சட்டம் என்பதை வாழ்வின் சட்டமாக அருள்நிறைவின் சட்டம் என்ற மாற்றுப் புரிதலைத் தருகிறார். இது மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயரின் போதனையிலிருந்து மாறுபட்டு அருள்நிறை போதனையாக இயேசுவே அதன் நிறைவாக இருப்பதையும் நாம் அறிய மத்தேயுவின் இந்த நற்செய்தி உதவுகிறது. 

4. உரோமையர் 6:3-11 

நாம் எல்லாரும் பாவம் செய்துள்ளோம். நம்மில் ஒருவரும் பாவமற்றவர் கிடையாது. இது குற்றவுணர்வுக்குள் அடிமைப்படுத்துவதற்கானது அல்ல. மாறாக, நம்மை நாம் சோதித்து பார்த்து பாவஅறிக்கை செய்து  மனந்திரும்புதலுக்கும் மன்னிப்பின் வாழ்விற்கும் நேராக வழிநடத்துவதற்கானதே ஆகும். 

கிறிஸ்தவ வாழ்வில் நாம் ஒரு தனிமனித சீர்பெரருந்துதலுக்கு அழைக்கப்படுகின்றோம். பாவத்தை விட்டு மனந்திரும்புதல் என்பது திருமுழுக்கின் வழியாய் கிறிஸ்துவோடு புதுஉடன்படிக்கையில் இணைவதற்கான முதற்படியாகும். 

கிறிஸ்துவில் அன்பு தனிமனித சீர்பொருந்துதலுக்கு ஆற்றல் அளிப்பதாயும் புதுவாழ்விற்கான அறைகூவலாயும் உள்ளது. பாவத்தை முன்னிட்டு மனந்திரும்பி  திருமுழுக்கில் இணைவதின் வழியாக கிறிஸ்துவோடு அறையப்பட்டு இறந்து உயிர்ப்பெறுகிறேன். ஆகவே பாவத்தை விட்டொழித்து மனந்திரும்புதல் என்பதும் திருமுழுக்கு பெறுதல்  என்பது புதிய மானுடம் ஏற்றலுக்கான புதுஉடன்படிக்கையின் அடையாளமும் நினைவுகூர்தலுமாய் உள்ளது. இது தனிமனித வாழ்வில் ஒப்புரவாதலாக உள்ளது. இது கடவுளுடனான ஒப்புரவு வாழ்விற்கு நம்மை வழிநடத்தும் தூண்டுகோலாக உள்ளது. 

எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே!

நாம் கடவுளுடன் ஒப்புரவு கொள்ள வேண்டும்

நாம் நமது சகோதர சகோதரிகளுடன் ஒப்புரவாக வேண்டும். 

நாம் நம்முடைய தன்னாளுடன் ஒப்புரவாக வேண்டும். 

இவற்றை செய்கின்ற போது கடவுள் நமக்கு அளித்துள்ள வாக்குறுதியில் உண்மையாய் இருந்து தம் பேராற்றலால் கிறிஸ்துஇயேசுவின் வழியாய் தம் பேரிரக்கத்தையும் பேரருளையும் நம்மீது பொழிந்தருளி தம் ஆவியார் வழியாக புதுஉடன்படிக்கையில் நிலைத்திருக்கச் செய்வார். இந்த சிந்தனையோடு ஆண்டவரிடத்தில் ஒப்புவிப்போம். மூவொரு கடவுளின் ஆசி நமக்கு உரித்தாகுக. 

மறைத்திரு. டால்ட்டன் மனாசே
ஆற்காடு லுத்தரன் திருச்சபை