6 ஆகஸ்ட் 2023

Mission – Good News to All

மத்தேயு 4:17-25

• நாம் வாழும் உலகில் பெருமளவு சந்தர்ப்பங்களில் பெருமளவு காரியங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவைகள் அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டவைகளாக காணப்படுகின்றன.

• நாம் வாசிக்கக் கேட்ட பழைய ஏற்பாட்டு பகுதியில் ஏசாயா 55:1-6ல், இறைவன் தாகமாயிருக்கும் அனைவரையும் தன்னிடத்தில் வந்து இளைப்பாறி, தாகம் தீர்த்து, உணவருந்தி செல்லுமாறு அழைக்கின்றார். அதாவது, மனித அடிப்படை தேவைகளை இறைவன் எல்லாருக்கும் பூர்த்தி செய்ய விரும்புகின்றார்.

• திருப்பாடல் – சங்கீதம் 146ல், இறைவன் அனைவருக்கும் மீட்பளிக்கும் ஒருவராக காட்டப்படுகிறார். விடுதலையாளராகிய கடவுள் அனைவருக்கும் மீட்பளிக்கும் ஒருவர். மனிதர் தம்முடைய தோல்விகளில் இழப்புக்களில் இறை உதவியை நாடுகின்றனர்.

• லூக்கா 4:15-25ம் வசனம் வரையுள்ள பகுதியில், ஆண்டவர் இயேசுவின் நாசரேத்தூர் அறிக்கையை நாம் பார்க்கின்றோம். அவருடைய தூதுப்பணியின் மையக்கருப்பொருளாக இவைகள் காணப்படுகின்றன. சிறப்பாக, ஏனைய நற்செய்திகளில் இத்தூதுப்பணி பிரகடனம் காணப்படுவதில்லை. சிறப்பாக இப்பகுதியில் தரித்திரருக்கு நற்செய்தி என்று கூறும்போது, அதாவது அவர்களை தரித்திரர் ஆக்கியோர் யார் என்பதை கண்டறிதலே பிரதான நற்செய்தியாகும். இவர்களுக்கான எதிர்கால நம்பிக்கை அளிப்பதைவிட நிகழ்கால நம்பிக்கை பெறுமதியானதாகும். சிறைப்பட்டோருக்கு விடுதலை என்னும்போது உண்மையில் சிறைப்பட்டோருக்கான விடுதலை சிறைக்கதவுகளை மூடுவதன் ஊடாக பிறக்கின்றது. நாம் ஒருவரையொருவர் மன்னிப்பதன் ஊடாகவும் ஒருவரோடொருவர் ஒப்புரவாகுதலின் ஊடாகவும் சிறைகளுக்குள் மக்கள் அனுப்பப்படுவதைத் தவிர்த்து, சிறைப்பட்டோரை விடுதலை செய்யும் பணியில் எம்மால் ஈடுபட முடியும்.

• நொறுங்குண்டவர்களுக்கு விடுதலை என்பது, இயேசுவின் விடுதலைப் பணியை எடுத்துக் காண்பிக்கின்றது. பார்வையற்றோருக்கு பார்வை என்பது எது சரி, எது பிழை, எது நீதி, எது அநீதி போன்றவற்றை பிரித்தறியும் பார்வையையே இங்கு எடுத்துக் காண்பிக்கின்றது. கடவுளுடைய அனுக்கிரக வருஷம் என்பது ஜுபிலி ஆண்டாகும். ஜுபிலி வருடத்தில் கடன் பெற்றோர் மன்னிக்கப்படுகின்றனர். எனவே, கடனை பெற்றவர்கள் எப்பொழுது ஜுபிலி வருடம் வரும் என ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இது ஏழு வருடத்திற்கு ஒரு முறை ஜுபிலி வருவதை நாம் காணலாம். இச்சூழ்நிலையில் ஆண்டவர் ஒவ்வொரு நாளும் ஜுபிலி வருடமாக ஜுபிலி நாளாக இருக்கும்போது கடன் பெற்றோர், அடிமைகள் போன்றவர்கள் விடுதலையைப் பெற்றுக் கொள்வர். அதற்கூடாக மகிழ்வார்கள் எனக் கூறுகிறார். மேலும், தொழுகைக்கூடத்துக்குள் யூதர்கள், ஆண்கள் போன்றவர்களே ஏற்றுக்கொள்ளப்படுவர். எனவே, தொழுகைக்கூடத்தில் இருந்து வெளியே வந்த ஆண்டவர் பெண்கள், சிறுவர்கள், புற இனத்தவர்கள் போன்றவர்களை சந்திக்கின்றார். அங்கு கடவுளின் தாராள உள்ளத்தைப் பற்றி பேசி எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் அநேக விதவைகள் இருந்தாலும் சீதோன் நாட்டிலுள்ள செரப்தா பட்டணத்திலுள்ள விதவையையே கடவுள் போஷிப்பதற்காக தெரிந்தெடுத்தார் எனவும், எலிசாவின் காலத்தில் அநேக தொழுநோயாளர்கள் இருந்தாலும் கடவுள் நாகமானை தெரிந்தெடுத்தார் எனக் கூறி புற இனத்தவர் மத்தியிலும் கடவுளின் அன்பு காணப்படுகின்றது. அவர் எல்லோருக்குமான கடவுள் என்ற உண்மையைக் காண்பிக்கின்றார். இதன்மூலம் தொழுகைக்கூடத்தில் உள்ளிருப்பவர்களுக்கும், தொழுகைக்கூடத்தில் வெளியிலே இருப்பவர்களுக்கும் இடையே ஒப்புரவாகுதலை ஏற்படுத்துகின்றார்.

• அப்போஸ்தலர் – திருத்தூதர்பணிகள் 10:34-43 வரையுள்ள பகுதியில், புற இன மக்கள்மீது தூய ஆவியரின் வருகையை நாம் பார்க்கிறோம். திருத்தூதர்பணிகள் – அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில், யூதர்கள்மீது தூய ஆவி பொழியப்பட்டதை நாம் காணலாம். இங்கு கொர்னேலியுவின் இல்லத்தில் இருந்தவர்கள்மீது தூய ஆவியர் பொழியப்பட்டவுடன் அவர்கள் அந்நிய பாஷையில் பேசியதை நாம் பார்க்கிறோம். இங்கு ஆவியர் எல்லைகளைக் கடந்து அனைவர்மீதும் பொழியப்படுவதை நாம் காணலாம்.

• எனவே, கடவுள் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்குள் மாத்திரம் கட்டுப்படுத்திகொள்ளாமல் அநேகருக்கு வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். இது கடவுளின் அன்பையும் அவரது தாராள உள்ளத்தையும் எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.